MGR ரசிகர் மன்றம் டூ கட்சி! ஒரே நாள் இரவில் நடந்த சேஞ்ச்! விஜய்கிட்ட இது இல்லையே! எழுந்த விமர்சனம்
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சியை தொடங்குவார் என்று நீண்ட நாட்களாக சொல்லப்பட்டு வந்த நிலையில், இன்று அவரது கட்சியின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அவருக்கு அரசியல் போதிய பயிற்சி இல்லை என அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர்.
தமிழகத்தின் அரசியல் பெரும் புள்ளிகள் அனைவரும் கோடம்பாக்கம் வழியாக வந்தவர்களே. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தது நடிகராக இருந்ததுதான். இதே வழியில் விஜய்யும் வருவார் என்று நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இன்று இந்த எதிர்பார்ப்பு நிறைவடைந்திருக்கிறது. நடிகர் விஜய் 'தமிழக வெற்றி கழகம்' எனும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாகவும், அதன் தலைவராக தான் இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்.
அவருடைய அரசியல் என்ட்ரிக்கு ஆரம்ப புள்ளி, ஈழப்போர் காலம்தான். போரை நிறுத்த வேண்டும் என்று 2008ல் முழங்கிய விஜய் அதன் பின்னர், இலங்கை கடற்படையின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த நாகை மீனவர்களுக்கு ஆதரவாக தனது ரசிகர் மன்றம் மூலம் போராட்டத்தையும் நடத்தினார். அதன் பின்னர் ராகுல் காந்தியுடன் சந்திப்பு, தன்னுடைய திரைப்படங்களில் அரசியல் வசனங்களை தெறிக்க விடுவது என அரசியலுக்குள் நுழைய கொஞ்சம் கொஞ்சமாக அடி எடுத்து வைத்தார்.

இதன் நீட்டியாக தற்போது அரசியல் கட்சியையும் அறிவித்துவிட்டார். ஆனால், கொள்கைகளை முழுமையாக இன்னும் வெளியிடவில்லை. இப்படி இருக்கையில் இவரது அரசியல் என்ட்ரி குறித்து அரசியல் விமர்சகர்கள் சில கருத்துக்களை முன்வைத்துள்ளனர். குறிப்பாக விஜய்க்கு அரசியலில் போதிய பயிற்சி இல்லையென்றும் கூறியுள்ளனர்.
தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் கூறுகையில், "அரசியல் பரமபத விளையாட்டில் பாம்புகளும் உண்டு ஏணிகளும் உண்டு அதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் சொன்னார்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று யாராலும் சொல்ல முடியாது. விஜய் அவர்கள் முயற்சி எடுத்து இருக்கிறார்கள். அவரை வரவேற்க வேண்டியது அனைவரின் கடமை. இவரது அரசியல் கட்சி வெற்றியை நோக்கி போகுமா எந்த மாதிரியான அரசியல் சித்தாந்தங்களை உருவாக்குவார் என்ற கேள்விகள் நமக்கு முன்னால் இருக்கிறது.
அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப் போல மத ரீதியாக பிளவுபடுத்தும் சக்திகளுக்கு எதிராக என்பதை பிஜேபிக்கு எதிரானது என்று புரிந்து கொள்ளலாம். சாதி ரீதியாக இன்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.
மட்டுமல்லாது யாருமே சரியில்லையா அதனால் நாங்கள் வருகிறோம் என்று கூறியிருக்கிறார் எதுவுமே சரியான பார்வை கிடையாது. உலகம் முழுவதும் எல்லா ஜனநாயகங்களும் ஊழல் மலிந்த ஜனநாயகங்கள்தான். விஜய்க்கு தற்போது இருப்பது திரைப்படப் புகழ் நல்ல அறிமுகம். இதைத் தாண்டி அவரிடம் அரசியல் என்பது இல்லவே இல்லை. எம்ஜிஆர் திமுகவின் 20 வருடங்கள் இருந்து அதில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு கட்சி தொடங்கினார். எம்ஜிஆர் மன்றத்தை அதிமுக கிளையாக ஒரே நாளில் கட்சியினர் மாற்றினார்கள்.
இப்படியான வாய்ப்பு என்பது மற்றவர்களுக்கு கிடையாது. அரசியல் இயக்கங்களாக ரசிகர் மன்றத்தை முதலில் இருந்தே டெவலப் செய்து கொண்டு வர வேண்டும். விஜயகாந்த் ஓரளவுக்கு அதை முயற்சி செய்தார். ஆனால் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்குவது உள்ளிட்ட விஷயங்கள் எல்லாம் ஈடுபட்டு வருகிறார். அரசியல் பயிற்சி என்பது முற்றிலும் வேறு.
விஜயகாந்த் அரசியல் கட்சி தொடங்கியிருந்த போதும் கூட வட தமிழகத்தில் ஓரளவுக்கு அது கை கொடுத்தது தவிர தென் தமிழகத்தில் இருந்த ரசிகர்கள் அவர்களது தாய் கட்சிக்கு தான் திரும்பினார்கள். தேமுதிகவுக்கு திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications