ஐசியூவில் செந்தில் பாலாஜி..வெண்டிலேட்டர் நீக்கம்..தொடர் கண்காணிப்பு..காவேரி மருத்துவமனை அறிக்கை
சென்னை: பைபாஸ் ஆபரேசன் செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஐசியூவில் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும், வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு விட்டதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, நெஞ்சு வலி காரணமாக முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையில் ரத்த குழாயில் 4 அடைப்புகள் இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்யவும் மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டது.

இதனையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனைக்கு மாற்றாப்பட்ட அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 5 மணி நேரம் நடைபெற்ற ஆபரேசன் முடிந்து ஐசியூ வார்டுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார் செந்தில் பாலாஜி.
இந்தநிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. இதயத்தில் 4 அடைப்புகள் அகற்றப்பட்ட நிலையில் ஐசியுவில் உள்ளதாகவும், வென்டிலேட்டர் கருவி அகற்றப்பட்டு உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications