செந்தில் பாலாஜி பெயரை.. உதயநிதி சொன்ன அடுத்த நொடி.. நடந்த சுவாரசிய சம்பவம்.. இதுதான் ரியல் பவர்!
சென்னை: நேற்று கரூரில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில் சுவாரசியமான சம்பவம் ஒன்று நடந்தது.
நேற்று கரூரில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அப்போது, மோடி நன்றாக வடை சுடுவார். அவர் சுடுகின்ற வடையை கூட நமக்கு தர மாட்டார். அவரே சாப்பிட்டு விடுவார். அவருக்கு தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ள செல்ல பெயர் 29 பைசா. நாம் வரியாக ஒரு ரூபாய் கட்டுகிறோம். அவர் மத்திய அரசு நமக்கு தருவது 29 பைசா மட்டுமே. பீகார் மாநிலத்திற்கு ஒரு ரூபாய்க்கு ஏழு ரூபாய் வழங்கப்படுகிறது. உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு ரூபாய் நிதி கொடுத்தால், அவர்களுக்கு மூன்று ரூபாய் வழங்கப்படுகிறது. நமக்கு வெறும் 29 பைசா மட்டுமே வழங்கப்படுகிறது.

10 வருடமாக நமது இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிற பிரதமர் மோடி தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டிற்கு வருகிறார். பாஜக ஆளும் மாநிலங்களில் ஆரம்பிக்கப்பட்ட அனைத்து எய்ம்ஸ் மருத்துவமனைகளும் செயல்பாட்டிற்கு வந்து விட்டன. ஆனால், தமிழகத்தில் இன்னும் வரவில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக வைக்கப்பட்ட ஒரே செங்கல் வைத்த ஒரு செங்கலையும் நான் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் தகுதி படைத்த மகளிருக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுக்கப்பட்டது போன்று இன்று ஒரு கோடியே 16 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. சில பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாமல் இருக்கிறது.
சிலருக்கு மகளிர் உரிமை தொகை கிடைப்பதில் சிக்கல் இருப்பது உண்மை தான். இன்னும் ஐந்து ஆறு மாதங்களில் குறைகள் சரி செய்யப்பட்டு தகுதியுள்ள ஒரு கோடியே 60 லட்சம் மகளிருக்கும் கண்டிப்பாக வழங்கப்படும்." என்றார் உதயநிதி ஸ்டாலின்.
செந்தில் பாலாஜி; இதில் அமைச்சர் உதயநிதி கரூரில் செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வேட்பாளர் ஜோதிமணி என்று கூறிய போது செந்தில் பாலாஜி என்ற வார்த்தையை கேட்டதும் அங்கே இருந்த நிர்வாகிகள் ஆர்ப்பரிக்க தொடங்கினர். உதயநிதி பேசுவதற்கு கூட இடம் தராமல் விடாமல் கைதட்டி செந்தில் பாலாஜி பெயரை பாராட்டும் விதமாக மரியாதை செய்தனர்.
2-3 நிமிடங்கள் விடாமல் கைதட்டி உதயநிதி ஸ்டாலின் வியக்கும் விதமாக கோஷம் எழுப்பினர். செந்தில் பாலாஜி சிறை சென்று கிட்டத்தட்ட 1 வருடம் ஆக உள்ள நிலையிலும் கூட அவருக்கான மவுசு இன்னும் கரூரில் உச்சத்திலேயே உள்ளது.
கார் கொடுத்து உதவி: கரூரில் செந்தில் பாலாஜி ஆட்கள் ஜோதிமணிக்காக தீவிரமாக பணிகளை செய்து வருகிறன்றனர். கரூர் தொகுதி தேர்தல் பொறுப்பு திமுக தேர்தல் பொறுப்பாளர் மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லாவிற்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அங்கே இவருக்கு செந்தில் பாலாஜி ஆட்கள் வேலை பார்த்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன் சொந்தக் காரையே கொடுத்து பிரச்சாரத்திற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.
ஆம்.. படைபலம் தொடங்கி வியூக பலம் வரை மொத்தமாக செந்தில் பாலாஜி வழங்கி உள்ளாராம். அப்துல்லாவும் ஜோதிமணியும் தொகுதியை புயலாகச் சுற்றி வருகிறார்கள். சிறையிலிருந்தபடியே கரூர் தொகுதியை இயக்கி வருகிறாராரோ முன்னாள் அமைச்சர் என்று நினைக்க வைக்கும் அளவிற்கு தேர்தல் பிரச்சார அணுகுமுறைகளில் செந்தில் பாலாஜி ஸ்டைல் இருக்கிறதாம். இந்த தீவிர பணிகள் காரணமாக ஜோதிமணி கரூரை தக்கவைக்கவே வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர் களத்தில் பணி செய்யும் நிர்வாகிகள்.
எப்போதும் இறங்குவதை விட 3 மடங்கு ஆட்களை இறக்கி கிரவுண்டு வேலைகளை செய்து வருகிறாராம். இதன் காரணமாக உற்சாகம் அடைந்த திமுகவினர் ஜோதிமணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று மிக தீவிரமாக பணியாற்றி வருகிறார்களாம். திமுக காங்கிரஸ் மிக இணக்கமாக பணியாற்றும் முதல் தொகுதியாக இருக்கிறது கரூர்.
புகழ்ச்சி: இதை எல்லாம் பார்த்த பின்பே, ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலின் தனது பேச்சின் தொடக்கத்திலேயே, செந்தில் பாலாஜியை புகழ்ந்துள்ளார். அதில், இந்தக் கூட்டத்தை இவ்வளவு எழுச்சியோடும் - சிறப்போடும் ஏற்பாடு செய்துள்ள ஆற்றல்மிகு ஈரோட்டுச் செயல்வீரர் முத்துசாமி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களுக்கும், முக்கியமாக இங்கு வரவில்லை என்றாலும், தன்னுடைய பணிகள் மூலம் நம் உள்ளங்களைப் பெற்றிருக்கும் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கும், என்னுடைய நன்றியும்!
மேற்கு மண்டலத்தின் வலிமையான செயல்வீரர் செந்தில் பாலாஜியையும் இதே மாதிரிதான் சிறையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். ஜாமீன் கூட கொடுக்காமல் பல மாதங்களாக அவரை சிறையில் வைத்திருக்கிறார்கள். மேற்கு மண்டலத்தில் அவரின் பணிகளை முடக்க வேண்டும் என்று இந்த சதிச் செயலைச் செய்தார்கள். பாஜகவின் அத்தனை சதிச் செயல்களையும் கடந்து, செந்தில் பாலாஜியால் உருவாக்கப்பட்ட செயல்வீரர்கள் களத்தில் வேகமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள், என்று முதல்வர் ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications