அமலாக்கத்துறை வழக்கு.. ஹைகோர்ட் காலக்கெடு.. சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யும் செந்தில் பாலாஜி
சென்னை: அமலாக்கத் துறை வழக்கை 3 மாதங்களில் முடிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக செந்தில் பாலாஜி தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் ஜூன் 14ல் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 23 முறையாக அவரது நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் மனு பலமுறை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த 21ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத்துறை முன்வைத்த ஆதாரங்கள், முன்னுக்கு பின் முரண்பாடாக உள்ளதாகவும், வேலை வாங்கி தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்ததற்கு ஆதாரங்கள் இல்லை எனவும் குறிப்பிட்டார். நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் உண்மை என விளக்கினார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கடந்த 28ஆம் தேதி தீர்ப்பளித்தார்.
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதால் வழக்கை 3 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்கவும் ஆணையிட்டு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு கடந்த திங்கட்கிழமை விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்த வழக்கில் அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்போது அமலாக்கத் துறை துணை இயக்குனர் கார்த்திக் தாசரி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், 'முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை. சட்டப்படி விசாரணை நடத்திதான் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
மோசடி குற்றத்தில் செந்தில்பாலாஜிக்கு பங்கு உள்ளதை பல நீதிமன்றங்கள் தெளிவுபடுத்தி உள்ளன. வழக்கின் முழுமையான சாட்சி விசாரணை நடத்தி சாட்சியம் பதிவு செய்தால் மட்டுமே அமலாக்கத் துறை தாக்கல் செய்த ஆவணங்களை விசாரணை நீதிமன்றம் மதிப்பீடு செய்ய முடியும். செந்தில் பாலாஜி சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றத்தில் ஈடுபட்டதற்கு ஆதாரம் உள்ளது என நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டி உள்ளன. எனவே, தன்னை விடுவிக்க கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல.
வழக்கின் விசாரணையை தொடங்க அமலாக்கத்துறை தயாராக உள்ளது. செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை வழக்கை தினசரி அடிப்படையில் விசாரணை செய்து 3 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. எனவே, வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க கோரிய செந்தில்பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், வழக்கை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி அல்லி, வழக்கை 3 மாதங்களில் முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், விசாரணையை மார்ச் 6ஆம் தேதி புதன்கிழமைக்கு தள்ளிவைத்தார்.
இன்றைய தினம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் கெளதமன் ஆஜராகி, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்ற உத்தரவில், அமலாக்கத் துறையின் வழக்கை தினசரி அடிப்படையில் விசாரித்து 3 மாதங்களில் முடிக்க வேண்டும் என காலக்கெடு நிர்ணயித்திருப்பதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராகி வாதிட உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். அதனை ஏற்ற நீதிபதி அல்லி, வழக்கின் விசாரணையை மார்ச் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தார்












Click it and Unblock the Notifications