அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி மனு.. மார்ச் 4ல் விசாரணை
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜி மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி, கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சுமார் மூவாயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை மற்றும் ஆவணங்கள், 27 சாட்சிகளின் வாக்குமூலங்களுடன் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி அமலாக்கத் துறையால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது

இதனிடையே செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 20 முறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதேபோல் சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தில் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கின் விசாரணையை தள்ளி வைக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 21வது முறையாக நீட்டிக்கப்பட்டது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்று வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது. விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்க மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது செந்தில் பாலாஜி மனுவுக்கு பதிலளிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரமில்லை என செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்து அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications