உதயநிதிக்கு தனி அறை ரெடி.. 90% பணிகள் முடிந்தது.. பதவி ஏற்பு எப்போது?
சென்னை: சில மாதங்களாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கும் என்று பேசப்பட்டு வந்தநிலையில் அவருக்காகக் கோட்டையில் அறை ஒன்று தயாராகி வருகிறது.
சில மாதங்களாகவே தமிழ்நாட்டு அரசியல் களத்தில் மாபெரும் வதந்தியாக வலம் வந்து கொண்டிருந்த செய்திக்கு இன்று விடை கிடைத்துவிடும் என்று நேற்று தகவல் கிடைத்திருந்தது. ஆனால், இன்று காலை அதற்காக அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. அதற்குப் பதிலாக முதல்வர் ஸ்டாலின் சிந்துவெளி நாகரிகம் என்று திராவிட நாகரீகம் தான் என்று 100 ஆண்டுகள் முன்பாக இதே செப் 20 ஆம் தேதி அறிவித்த ஆங்கிலேய இந்தியத் தொல்லியல் துறை தலைமை அதிகாரி ஜான் மார்ஷல் என்பவரின் நூற்றாண்டு வாழ்த்து செய்தியை வெளியிட்டிருக்கிறார்.

திமுகவின் அடுத்த வாரிசு யார்? துணை முதல்வர் பதியை உதயநிதிக்கு வழங்குவதன் மூலம் அதை வெளிப்படையாக இன்று அறிவிப்பார் என சீனியர் அமைச்சர்கள் உட்படப் பல காத்திருக்கும் நிலையில், அது பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகாதது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவது குறித்து அடுத்த அப்டேட் செய்தி கிடைத்துள்ளது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல் தளத்தில் முதல்வர் ஸ்டாலினின் அறை இருக்கிறது. அங்கே கீழ்த் தளத்தில் ஒரு அறையை மறுசீரமைப்பு செய்யும் பணிகள் வேகமாக இரவு பகல் பாராமல் நடைபெற்று வருகின்றன. இந்த அறையை ஏன் சீரமைக்கிறார்கள் என்பது பலருக்கும் அப்பட்டமாகத் தெரியக் கூடிய விசயம்தான். அந்த அறையை துணை முதல்வர் உதயநிதிக்காகத் தயாராகி வருவதாக அங்கே உள்ள அதிகாரிகள் அரசல்புரசலாக தெரிவிக்கின்றனர்.
கோட்டையில் ஏற்கெனவே இடம் பற்றாக்குறை உள்ளது. அங்கே உள்ள அறைகள் பலவும் குறுகலானவை. எனவே மூன்று அறைகளாக இருந்ததை அகற்றிவிட்டு, அதை விசாலமான ஒரே அறையாக மாற்றும் பணிகள் மும்முரம் பெற்றுள்ளன. இந்த அறை மாற்றி அமைக்கும் வேலைகள் கிட்டத்தட்ட 90% முடிவடைந்துவிட்டன. வண்ண பூசுவது மட்டுமே பாக்கி என்கிறார்கள்.
உதயநிதியின் துணை முதல்வர் துறைக்குச் செயலாளராக எந்த ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. உதயநிதி தரப்பிலிருந்து இளம் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு கருத்து வைக்கப்பட்டுள்ளது.இப்போது உயதநிதியுடன் இணைந்து பணியாற்றி வரும் அதுல்ய மிஸ்ராவையே தன் துறைக்கு மாற்றிக் கொள்ளலாம் என உதய் ஒரு திட்டம் வைத்திருக்கிறார் என்கிறார்கள். அதே சமயம் உயர் கல்வித்துறை கவனித்து வரும் பிரதீப் யாதவ் ஐஏஎஸ் பெயர் அடிபடுகிறது. கூடவே தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் தலைவராக உள்ள சாய்குமார் ஐஏஎஸ் அதிகாரியை நியமிக்கலாம் என்று ஒரு பேச்சும் உலா வருகின்றது.
கடந்த சில மாதங்கள் முன்னதாகவே துணை முதல்வர் பதவி உதயநிதிக்குக் கிடைத்திருக்க வேண்டியது. ஆனால், அதற்கு சீனியர் அமைச்சரான துரைமுருகன் இடைஞ்சலாக நிற்கிறார் என்றும் சொல்லப்பட்டது. அவரும் துணை முதல்வர் பதவியை உங்களுக்குக் கொடுத்தால் ஏற்பீர்களா? எனச் செய்தியாளர்கள் கேட்ட போது பெருந்தன்மையாக மறுக்கவில்லை. பதவி கொடுத்தால் யார் வேண்டாம் என்று சொல்வார்கள்? என்று தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்.
அடுத்து ரஜினியின் சர்ச்சை மூலம் அவர் அதிருப்தியில் இருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமானது. ஆனால் முப்பெரும் விழாவில், எஸ்.எஸ். பழனிமாணிக்கம் பேசுகையில், 'அன்பழகனைவிடப் பெரிய தலைவர்கள் யார் இருக்கிறார்கள்?’ என்று ஒரு பொடியை வைத்தார். அது துரைமுருகனை நோக்கு விடப்பட்ட அம்பு என்று கட்சியினர் நினைக்கத் தொடங்கிவிட்டனர். அதை உணர்ந்த துரைமுருகன், முப்பெரும் விழாவை அடுத்து ஸ்டாலினைச் சந்தித்து உதயநிதியை துணை முதல்வராக்குவதற்கு இதுவே சரியான தருணம் என்று பேசியதாகச் சொல்லப்படுகிறது. மேலும் திமுக முதல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் உதயநிதியை து.மு. ஆக்கியே தீரவேண்டும் என்பதில் வேகம் காட்டி வருவதாகச் சொல்லப்படுகிறது.
இதை எல்லாம் உள்வாங்கிக் கொண்ட முதல்வர் ஸ்டாலின் இப்போது தனது ஒரு துணை தேவை என்று முடிவு செய்துவிட்டார். இந்த முடிவு அவர் முன்பே எடுத்ததுதான். அவர் பாஷையில் சொன்னால், முன்பு இந்த விவகாரம் வலுத்து இருந்தது. ஆனால்,இப்போது பழுத்துவிட்டது. அதை எற்றுதான் அறையைத் தயார் செய்துவருகிறது தமிழ்நாடு அரசு. விரைவில் கோட்டையில் உதயநிதி துணை முதல்வராக உட்காரப்போவது உறுதியாகி உள்ளது. சில மாதங்களாக அறைக்குள் மட்டுமே விவாதித்து வந்த முதல்வர் ஸ்டாலின் 'அறை’யை தயார் செய்யச் சொன்னதன் மூலம் விசயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications