கலாஷேத்ராவில் 15 ஆண்டுகளாக பாலியல் தொந்தரவு..4 பேர் மீது 100 மாணவிகள் புகார்..கைதாகும் பேராசிரியர்
சென்னை: கலாஷேத்ரா நடனக்கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் பேராசிரியர் ஹரி பத்மனை நாளை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். கல்லூரியில் சிறப்பு பயிற்சி என்ற பெயரில் பேராசிரியர் உட்பட 4 பேர் தொடர் பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும், வெளியே சொன்னால் கல்லூரியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டுவதாகவும், விசாரணை நடத்த வந்த மாநில மகளிர் ஆணைய தலைவி குமாரியிடம் 100 மாணவிகள் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர்.
திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கவின் கலை கல்லூரி இயங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. மிகவும் பழமையான கல்லூரி என்பதால் வெளிநாடுகள் மற்றும் நாடு முழுவதிலும் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட மாணவ,மாணவிகள் பயின்று வருகின்றனர்.
பிரபலமான இந்த கல்லூரியில் பயின்று வந்த மாணவிகள் சிலர், தங்களுக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமசந்திரனிடம் புகார் அளித்தனர். இதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் ஒன்றாக பதிவு செய்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பாலியல் புகார்
பாலியல் புகார் குறித்து தேசிய மகளிர் ஆணையம், கலாஷேத்ரா அறக்கட்டளையிடம் விளக்கம் கேட்டது. இதனையடுத்து கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன், கல்லூரி முதல்வர் தலைமையில் விசாரணை குழு அமைத்தார். அதன்படி விசாரணை குழு கல்லூரி வளாகத்தில் மாணவிகளை ஒன்றாக அமரவைத்து பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தினர். பொது வெளியில் விசாரணை நடத்தியதால் மாணவிகள் யாரும் பாலியல் தொந்தரவு குறித்து புகார் அளிக்க முன் வரவில்லை. இதையடுத்து விசாரணை குழு தங்களது அறிக்கையை கலாஷேத்ரா இயக்குநரிடம் அளித்தனர்.

டிஜிபியிடம் விளக்கம்
அதன் பிறகு, கலாஷேத்ரா மிகவும் பழமையான கல்வி நிறுவனம் என்பதால் அதன் பெயரை கெடுக்கும் வகையில் சிலர் திட்டமிட்டு சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரப்புவதாக குற்றம்சாட்டி இருந்தார். அதனை தொடர்ந்தும் மாணவிகள் சமூக வலைத்தளத்தில் மீண்டும் பாலியல் தொடர்பாக குற்றம்சாட்டி வெளியே சொன்னால் மிரட்டுவதாக பதிவு செய்து இருந்தனர். அதைதொடர்ந்து மீண்டும் தேசிய மகளிர் ஆணையர் மாணவிகளின் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு கடிதம் மூலம் தெரிவித்தனர். மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த வாரம் கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் டிஜிபியை நேரில் சந்தித்து தங்களது விசாரணை அறிக்கையை அளித்து விளக்கம் அளித்தார்.

நால்வர் மீது புகார்
இந்நிலையில், வெளிநாட்டில் உள்ள முன்னாள் மாணவிகள் பலர் தொடர்ந்து கலாஷேத்ராவின் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து வந்ததால், தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா இரு தினங்களுக்கு முன்பு கலாஷேத்ரா கல்லூரிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினார். அப்போது, மாணவிகள் பேராசிரியர் ஹரி பத்மன், உதவி நடனஆசிரியர்களான சஞ்சித் லால், சாய் கிருஷ்ணா, ஸ்ரீநாத் ஆகியோர் சிறப்பு நடன பயிற்சி என்று அடிக்கடி வாட்ஸ் அப் மற்றும் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு அழைக்கின்றனர். பிறகு சிறப்பு நடன பயிற்சியின் போது, எங்கள் உடல் பாகங்களை தொட்டும், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாகவும் குற்றம்சாட்டினர்.

உள்ளிருப்பு போராட்டம்
பிறகு தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா ஷர்மா மாணவிகளின் குற்றச்சாட்டு குறித்து கலாஷேத்ரா அறக்கட்டளை இயக்குநர் ரேவதி ராமச்சந்திரன் மற்றும் ருக்மணி தேவி நுண் கலை கல்லூரி முதல்வரிடம் தனியாக விசாரணை நடத்தினர். இந்த நிலையில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நூற்றுக்கணக்கான மாணவிகள் கல்லூரி வளாகத்தில் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது, பாலியல் தொந்தரவு செய்து வரும் 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என கையில் பதாகைகளுடன் அமர்ந்து நீதி வேண்டும் எனக்கூறி முழக்கமிட்டனர். தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படும் வரை போராட்டம் தொடரும் என மாணவிகள் உறுதியாக கூறினர்.

சட்டசபையில் உறுதி
இதனையடுத்து கலாஷேத்ரா இயக்குநர் கல்லூரியை வரும் 6ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக அவசர சுற்றறிக்கை வெளியிட்டார். ஆனால் சுற்றறிக்கையை பொருட்படுத்தாமல் மாணவிகள் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக கூறிவிட்டனர். மாணவிகளின் உள்ளிருப்பு போராட்டம் விடிய விடிய இரண்டாவது நாளாக நேற்றும் நீடித்தது. சட்டசபையிலும் இந்த போராட்டம் எதிரொலித்தது. மாணவிகளுக்கு பாதுகாப்பு வழங்கப்படும் என்று கூறிய முதல்வர் மு.க ஸ்டாலின்,தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டனை வழங்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

மகளிர் ஆணையத்தலைவி விசாரணை
இதையடுத்து தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி, கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வரும் மாணவிகளிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகள் 100 பேர் கல்லூரியில் எங்களுக்கு முறையாக பாதுகாப்பு இல்லை. சிறப்பு பயிற்சி என்ற பெயரில் தங்களை தனித்தனியாக அழைத்து பேராசிரியர் உட்பட 4 பேர் தொந்தரவு செய்து வருவதாக எழுத்துப்பூர்வமாக புகார் கடிதத்தை வழங்கினர்.

நால்வர் மீது புகார்
பேராசிரியர் ஹரி பத்மன், உதவி நடனஆசிரியர்களான சஞ்சித் லால், சாய் கிருஷ்ணா, ஸ்ரீநாத் ஆகியோரால் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் 12 மாணவிகளிடம் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது மாணவிகள் பலர், தங்களை சிறந்த நடன கலைஞராக உருவாக்கி மேடை ஏற்றுவதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், இதுகுறித்து வெளியே சொன்னால் கல்லூரியில் இருந்து நீக்கி விடுவதாக மிரட்டி வருவதாகவும் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதை குமாரி எழுத்து வடிவில் பதிவு செய்து கொண்டார்.

தற்காலிக வாபஸ்
அதோடு இல்லாமல் பேராசிரியர் உட்பட 4 பேர் மூலம் தொடர்ந்து பாலியல் தொந்தரவுக்கு ஆளானதாக முன்னாள் மாணவிகள் சிலர் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரியிடம் வீடியோ கால் மூலம் புகார் அளித்தனர். கல்லூரியில் இருந்து வெளியேறிய பிறகும், எங்களிடம் தவறாக நடந்து கொண்ட வீடியோ மற்றும் புகைப்படங்களை வைத்து தற்போதும், எங்களை அழைத்து பாலியல் தொந்தரவு செய்து வருவதாக கண்ணீர் மல்க புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது குமாரியின் வேண்டுகோளை ஏற்று 2 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் மாணவிகள் கலைந்து செல்வதாக உறுதி அளித்துள்ளனர். இருந்தாலும், கல்லூரி முன்பு பாதுகாப்புக்காக உதவி கமிஷனர் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திங்கட்கிழமையன்று அரசிடம் விசாரணை அறிக்கையை அளிக்கிறார் மகளிர் ஆணைய தலைவி குமாரி.

கைதாகும் பேராசிரியர்
இந்த நிலையில், முன்னாள் மாணவி அளித்த புகாரில் பேராசிரியர் ஹரி பத்மன் கைது செய்யப்பட இருக்கிறார். 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரை கலாஷேத்ரா கல்லூரியில் பயின்ற கேரளாவைச் சேர்ந்த முன்னாள் மாணவி காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வ புகார் அளித்திருந்தார். அதன்பேரில் பேராசிரியர் ஹரி பத்மன் மீது அடையாறு மகளிர் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தனர். வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டு இருக்கின்றனர். ஹைதராபாத்திலிருந்து சென்னை திரும்பும் பேராசிரியர் ஹரி பத்மனை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி இதில் தொடர்புடையவர்களையும் காவல்துறையினர் கைது செய்ய உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications