ஒரு ஓட்டுக்கு ரூ 25000 கொடுத்தாரா பணக்கார வேட்பாளர்? ஓவர் நைட்டில் லட்சாதிபதியான வாக்காளர்கள்?
சென்னை: தமிழகத்தின் மத்தியில் உள்ள ஒரு தொகுதியின் பணக்கார வேட்பாளர் ஒருவர் ஒரு ஓட்டுக்கு ரூ 25 ஆயிரம் பணப்பட்டுவாடா செய்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் அந்த தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடும் பலர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனராம்.
தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலின் பிரச்சாரங்கள் நாளை மாலையுடன் ஓய்வடைகின்றன. இன்னும் ஒரு நாளே இருப்பதால் அரசியல் கட்சிகள் ஓடிஓடி பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மீறிய பணம், பரிசு பொருட்களை ஆவணங்களின்றி கொண்டு சென்றால் அவற்றை பறிமுதல் செய்கிறார்கள்.
மேலும் அதற்குரிய ஆவணத்தை கொடுத்தால் பணம், பரிசு பொருட்கள் திரும்ப கொடுக்கப்படும். பெரும்பாலும் பறக்கும் படையினரின் கண்களில் மண்ணை தூவிவிட்டு வேட்பாளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியும் மாறி மாறி பண பதுக்கல் புகாரை கூறி வருகிறார்கள். முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் பணத்தை தண்ணீராக வாரி இறைத்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆங்காங்கே கட்சியினர் ஒரு ஓட்டுக்கு ரூ 1000, ரூ 1500, ரூ 5000 என கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்தின் மத்திய தொகுதியை சேர்ந்த வேட்பாளர் ஒருவர் ஒரு ஓட்டுக்கு ரூ 25 ஆயிரம் கொடுத்து வருகிறாராம். தோராயமாக இந்த தொகுதியில் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளனராம். அப்படி பார்த்தால் சுமார் 500 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கலாம் என தெரிகிறது.
அந்த வகையில் ஒரு வீட்டில் 4 ஓட்டு இருந்தால் ரூ 1 லட்சம் வரை விநியோகிக்கப்படுகிறதாம். அதே போல் எதிர்க்கட்சி வேட்பாளரோ அந்த பணக்கார வேட்பாளர் போல் செலவிட முடியாமல் ஒரு ஓட்டுக்கு ரூ 6000 கொடுத்து வருவதாக சொல்லப்படுகிறது.
ஒரு வேட்பாளர் கோடிக்கோடியாக பணத்தை கொடுத்து வரும் நிலையில் தமக்கு வெற்றி கிடைக்குமா, இல்லை கொடுத்த ரூ 6000-மும் வீணாகி போகுமா என்ற கவலையில் உள்ளாராம். மற்ற சுயேச்சைகள், சிறு சிறு கட்சிகளும் கதி கலங்கி போயுள்ளனராம். அவர்கள் வீட்டிலும் ரூ 25 ஆயிரம் போயிருக்கிறதாம்.
இதனால் நம் குடும்பமே நமக்கு ஓட்டு போடுமா என்ற கவலையும் தொற்றிக் கொண்டுள்ளதாம். இதனால் அந்த பணக்கார வேட்பாளர் குறித்து கட்சி பேதமின்றி அனைவரும் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்து அவரை தகுதி நீக்கம் செய்ய யோசனை செய்து வருகிறார்களாம்.
என்ன இருந்தாலும் ஓட்டு பணம் கொடுப்பது குற்றம் என்றாலும் அதை கை நீட்டி வாங்குவது அதை விட பெரிய குற்றம் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொண்டு பணத்திற்கு ஜனநாயகத்தை விற்காமல், நல்லதொரு ஆட்சியாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.












Click it and Unblock the Notifications