தமிழ்நாடு முழுவதும் இன்று கடையடைப்பு.. வணிகர் சங்கங்களின் பேரவை அறிவிப்பு: கரூர் நிகழ்வுக்கு அஞ்சலி
சென்னை: கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை துவங்கி நடந்து வருகிறது. இதனிடையே, தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக இன்று தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்படுவதாக தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்திருக்கிறது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய், "வாகை சூடும் வரலாறு திரும்புகிறது, உங்க விஜய் நான் வரேன்" என்ற பிரச்சாரக் கூட்டத்தை கடந்த சனிக்கிழமை மேற்கொண்டார். ஆனால் குறித்த நேரத்தில் விஜய் அங்கு வராததன் காரணமாக அந்த பகுதியில் தொடர்ந்து கூட்ட நெரிசல் அதிகரித்தது.

கலங்கடித்த கரூர்
இந்த நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் 50க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் கரூர் மாநகரையே கண்ணீரில் மூழ்கடித்துள்ளது.
முதல்வர் ஸ்டாலின் உடனடியாக கரூருக்கு கிளம்பி சென்றார்.. அதேபோல கரூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொன்னார்கள்.
தலைவர்கள் இரங்கல்
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கரூருக்கு விரைந்து வந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பல்வேறு கட்சி தலைவர்கள் தங்களது கண்ணீர் இரங்கலை பதிவு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலை தந்து வருகிறார்கள்.
நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கிடவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்குவதாக தவெக தலைவர் விஜய் அறிவித்திருக்கிறார்.
ஒரு நபர் ஆணையம்
நாட்டையே அதிர வைத்துள்ள இந்த சம்பவம் குறித்த விசாரணையை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.. மேலும் இதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டு நேற்று முதல் விசாரணையை துவங்கியிருக்கிறது.
இந்த நிலையில், கரூர் துயரச் சம்பவத்தையொட்டி, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கடையடைப்பை அறிவித்துள்ளது. இன்று திங்கட்கிழமை தமிழகம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் என தமிழக வணிகர் சங்கங்களின் பேரவை அறிவித்துள்ளது.
இன்று கடையடைப்பு
இன்று மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்படும் என்றும், அத்தியாவசிய தேவைகளுக்காக மருந்துக்கடைகள், பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அதேபோல பொதுப் போக்குவரத்துச் சேவைகளான பேருந்துகள், ரயில்கள், ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், மளிகைக் கடைகள், டெக்ஸ்டைல் மற்றும் ரெடிமேட் கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஹோட்டல்கள், உணவகங்கள், மொபைல், எலக்ட்ரானிக்ஸ் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசியமற்ற வணிக நிறுவனங்கள் முழு நாளும் மூடப்பட்டிருக்கும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications