தமிழ்நாடு முழுக்க நாளை கடைகள், ஹோட்டல்கள் இயங்காது.. வணிக சங்க மாநாட்டையொட்டி அறிவிப்பு!
சென்னை: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக மதுரையில் நாளை மாநாடு நடைபெறுவதையொட்டி, தமிழ்நாடு முழுவதும் கடைகள், வணிக நிறுவனங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மே 5ஆம் தேதியான நாளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 41ஆவது வணிகர் விடுதலை முழக்க மாநில மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான வணிகர்கள் மதுரையில் ஒன்று கூட உள்ளனர்.

இந்நிலையில், மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்படும் எனத் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெற உள்ள மாநாட்டையொட்டி தமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகள், வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள், மார்க்கெட்டுகள், உணவகங்கள், மால்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கடைகளில் பொருட்கள் வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் முன்கூட்டியே வாங்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முக்கிய பிரகடன தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வணிகர்கள் சந்திக்கும் பிரச்சனைகள், வணிகர்கள் மீதான அத்துமீறல்களுக்கு எதிரான நடவடிக்கை குறித்து அரசை வலியுறுத்தும் வகையில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சப்ளை செயின் விற்பனையாளர்களால் சாமானிய வணிகர்கள் பாதிக்கப்படுவதை தடுக்கும் வகையில் தமிழக அரசு சட்டம் உருவாக்கவும் தீர்மானம் நிறைவேற்றி இந்த தீர்மானங்களை அரசு பரிசீலிக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications