ஒரே டிக்கெட்.. பஸ், ரயில்களில் பயணம்.. சென்னையில் ஒரு புதுமைத் திட்டம்! வேகம் காட்டும் ஸ்டாலின்!
சென்னை : ஒரே டிக்கெட்டில், சென்னை மாநகர பேருந்துகள், சென்னை மெட்ரோ ரயில், புறநகர் ரயில்கள் என அனைத்திலும் பயணிக்கும் வசதி விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
12 ஆண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட CUMTA எனப்படும் ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையம் அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் செயல்படுத்தபடாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் பணிகள் வேகமெடுத்துள்ளன.
அதன்படி, தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் CUMTA-வின் முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளது. இதனால், விரைவில் இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனக் கூறப்படுகிறது.

முந்தைய திமுக ஆட்சியில்
மு.கருணாநிதி தலைமையிலான 2006-2011 ஆம் ஆண்டு காலத்திய திமுக ஆட்சியின்போது துணை முதலமைச்சராக பொறுப்பேற்று இருந்த மு.க.ஸ்டாலின், கடந்த 2010ஆம் ஆண்டு உருவாக்கிய ஒருங்கிணைந்த சென்னை பெருநகர போக்குவரத்து ஆணையத்துக்கு (CUMTA) மீண்டும் புத்துயிர் ஊட்டும் பணியை தற்போது மேற்கொண்டு வருகிறார்.

CUMTA
இதன்மூலம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு, மாநிலப் போக்குவரத்து துறை, சி.எம்.டி.ஏ (CMDA), மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC), சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் (CMRL), சென்னை மாநகராட்சி (GCC) ஆகிய பல்வேறு துறைகள் ஒருங்கிணைக்கப்பட்டு, சென்னை மாநகரின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்த முடிவெடுத்துள்ளார்.

முதல் கூடம்
தற்போது, இந்த ஆணையத்துக்கு ஒரு சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு, 18க்கும் மேற்பட்ட அமைப்புகள், ஆணையம் உள்ளிட்டவை CUMTAவின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. CUMTA-வின் முதல் கூட்டம் அடுத்த வாரம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த மொபைலிட்டி பிளான், பொதுவான டிக்கெட் பயன்பாடு, மல்டி மாடல் ஒருங்கிணைப்பு, MRTS வணிகமயமாக்கல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

ஒரே டிக்கெட் - பல பயணம்
இதன் முதல்கட்டமாக Common Ticket,அதாவது ஒரே ஒரு டிக்கெட் எடுத்தால் சென்னை மாநகரப் பேருந்துகள், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் என பல்வகைப் போக்குவரத்தில் பயணிக்கும் வசதி உருவாக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் தனிப்பட்ட வாகனங்களின் பயன்பாடு பெருமளவில் குறைந்து போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஆகியவை பெரிதளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் ஆப்
இதற்காக உருவாக்கப்படும் மொபைல் ஆப்-இல் பேருந்துகள், புறநகர் ரயில்கள், மெட்ரோ ரயில்கள் ஆகியவை எந்த இடத்தில் பயணித்து கொண்டிருக்கின்றன. எவ்வளவு நேரத்தில் வந்து சேரும் போன்ற விவரங்கள் உடனுக்குடன் கிடைக்கும். தனி QR கோட் மூலம் டிக்கெட் அளிக்கும் முறை மற்றும் டிக்கெட் இயந்திரங்கள் பயன்பாடும், ரொக்கமில்லா டிக்கெட் முறையும் (Cashless Ticketing System) கொண்டு வரப்படும்.












Click it and Unblock the Notifications