பாடகர் மனோவின் மகன்களை தேடி ஈசிஆர் விரைந்த தனிப்படை! காட்டி கொடுத்த முக்கிய ஆதாரம்!
சென்னை: 16 வயது சிறுவன் உள்பட இருவரை கண்மூடித்தனமாக தாக்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள பின்னணி பாடகர் மனோவின் மகன்களை பிடிக்க கிழக்கு கடற்கரைச்சாலைக்கு தனிப்படை போலீஸார் விரைந்துள்ளனர்.
போதையில் 16 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய விவகாரத்தில் மனோவின் இருமகன்கள் மீதும் வளசரவாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த தாக்குதல் வீடியோவும் வெளியான நிலையில் அவர்களை கைது செய்ய காவல் துறை திட்டமிட்டுள்ளது.

ஆனால் அவர்கள் இருவரும் தலைமறைவாக உள்ளனர். அவர்களுடைய செல்போன் சிக்னலை வைத்து போலீஸார் தேடுதல் வேட்டையை நடத்தினர். அதில் அவர்கள் இருவரும் கிழக்கு கடற்கரைச் சாலையில் (ஈசிஆர்) பதுங்கியிருப்பதாக தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் எங்காவது ஒரு ரிசார்ட்டில் தங்கியிருக்கக் கூடும் என்பதால் ஈசிஆரில் தேடும் பணிகளை வளசரவாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான 5 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் ஈசிஆருக்கு விரைந்துள்ளனர்.
நடந்தது என்ன?: சென்னை ஆலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் கிருபாகரன் (20). இவர் தண்டையார்பேட்டையில் உள்ள கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் மதுரவாயலைச் சேர்ந்த 16 வயது ஐடிஐ படிக்கும் சிறுவனுடன் வளசரவாக்கம் ஸ்ரீதேவிகுப்பம் பகுதியில் உள்ள கால பந்து பயிற்சி அகாதெமியில் பயிற்சி பெற்று வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு (செப் 10) பயிற்சி முடிந்து வளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் அருகே உள்ள உணவகத்திற்கு இருவரும் உணவு வாங்கச் சென்றுள்ளனர். அப்போது அங்கு நின்ற 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று கிருபாகரன், 16 வயசு சிறுவன் ஆகிய இருவரிடமும் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
அப்போது வாக்குவாதம் முற்றியதால் மேற்கண்ட இருவரையும் அந்த 5 பேர் கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியதாக தெரிகிறது. இதையடுத்து காயமடைந்த கிருபாகரனும், 16 வயது சிறுவனும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் குறித்து கிருபாகரன் உள்பட இருவரும் போலீஸில் புகார் அளித்தனர். அப்போது விசாரணையில் தாக்குதல் நடத்திய 5 பேரில் இருவர் பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன்கள் ரஃபி மனோ, சாகீர் என்பது தெரியவந்தது. இதையடுத்து மனோவின் வீட்டிற்கு சென்ற போலீஸார் அங்கு விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் மனோவின் மகன்கள் மற்றும் அவருடைய நண்பர்கள் மீது ஆபாசமாக பேசுதல், தாக்குதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விக்னேஷ் (28), தர்மா (26) ஆகிய இருவரை கைது செய்துள்ள போலீஸார் தலைமறைவாக உள்ள மனோவின் மகன்கள் உள்பட 3 பேரை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications