இரவு முழுக்க அவதிப்பட்டேன்.. சுத்தமா முடியல! SIR வழக்கில்.. திடீரென சொன்ன தலைமை நீதிபதி.. என்னாச்சு?
சென்னை: SIR வழக்கு விசாரணையில் இன்று தலைமை நீதிபதி சூர்யா காந்த் டெல்லி காற்று மாசு குறித்து பேசியது கவனம் பெற்றது. தலைமை நீதிபதி சூர்யா காந்த், மாலைநேர நடைப்பயிற்சியின் போது டெல்லியின் மோசமான காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். நேற்றிரவு முழுவதும் நான் இதனால் அவதிப்பட்டேன், என்று அவர் குறிப்பிட்டார்.
SIR குறித்த வழக்கு விசாரணைகள் மீண்டும் தொடங்கிய நிலையில், இந்த விவாதம் எழுந்தது. நீதிபதி தனது வருத்தத்தை வெளிப்படுத்தியதும், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் ராகேஷ் திவேதி ஆகியோரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மோசமான காற்றால் தனக்கு அதிக நெரிசல் ஏற்பட்டுள்ளதால், நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி அனுமதி கேட்டபோது இந்த உரையாடல் தொடங்கியது.
ஆன்லைனில் விசாரணை
இதனைத் தொடர்ந்து, விசாரணைகளை ஆன்லைனில் நடத்தலாம் என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் பரிந்துரைத்தார். இது குறித்து பார் கவுன்சிலுடன் கலந்தாலோசித்த பிறகுதான் முடிவெடுக்க முடியும் என்று தலைமை நீதிபதி பதிலளித்தார். ஆலோசனைகளுக்குப் பிறகு பார் கவுன்சில் ஒப்புக்கொண்டால், ஆன்லைன் விசாரணைகளுக்குத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு வருடமும் நிலைமை மோசமாகி வருகிறது. நம்முடைய வயதில் இந்தக் காற்றைச் சுவாசிப்பது... பாதுகாப்பானது இல்லை என்று கபில் சிபல் வருத்தத்துடன் கூறினார். டெல்லியின் காற்றுத் தரம் குறித்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் மத்தியில் மிகுந்த கவலை நிலவுகிறது என்பதை இந்த உரையாடல் வெளிப்படுத்துகிறது.
SIR வழக்கு பின்னணி
இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) தொடர்பான பல மனுக்களை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. SIR நடைமுறைக்கு சவால் விடும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை நீதிமன்றம் தொடர்ந்தது. அக்டோபர் 28 அன்று அறிவிக்கப்பட்ட இந்தச் சிறப்புத் திருத்தத்தின் இரண்டாம் கட்டத்தில் தமிழ்நாடு, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அடங்கும்.
இந்த SIR நடைமுறைக்கு எதிராக திமுக வழக்கு தொடுத்துள்ளது. கடந்த விசாரணையில் வாக்காளர் பட்டியலை தீவிர சரிபார்க்கும் சிறப்புத் திட்டத்திற்கு (SIR) எதிரான மனுக்கள் குறித்து உச்ச நீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு (EC) நோட்டீஸ் அனுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது
நாடு முழுக்க நடக்கும் SIR
இந்தத் திருத்தப் பணி நாடு முழுவதும் சுமார் 51 கோடி வாக்காளர்களைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் இந்தச் சிறப்புத் திருத்தம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் உயர் நீதிமன்றங்கள் நிறுத்தி வைக்கவும், அதை உச்ச நீதிமன்ற அமர்வு விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இன்று இந்த வழக்கில் கேரளா மற்றும் மேற்கு வங்காளம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், SIR நடைமுறையை கடுமையாக விமர்சித்தார். ஒரு பூத் லெவல் அதிகாரி (BLO) ஒருவரின் குடியுரிமையை முடிவு செய்ய முடியாது என்றும், முறையான விசாரணைக்குப் பிறகு இந்த அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது என்றும் அவர் வாதிட்டார்.
தேர்தல் ஆணையம் நிர்ணயித்த காலக்கெடு யதார்த்தமற்றது என்றும் சிபல் சுட்டிக்காட்டினார். கடந்த 22 நாட்களில் 50% படிவங்கள் மட்டுமே டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் எட்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில், டிஜிட்டல் மயமாக்கப்படாத வாக்காளர்களின் நிலை என்னவாகும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த வழக்கில் கேரளாவில் SIR செயல்முறையை ஒத்திவைக்கக் கோரும் மனுக்களுக்கு விரிவான பதில்களை தாக்கல் செய்யுமாறு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், கேரள தேர்தல் ஆணையத்திற்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அரசுக்கும் பதில்களை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு டிசம்பர் 9 ஆம் தேதி அன்று மீண்டும் விசாரணைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications