SIR.. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்.. வாக்குரிமையை அளிப்பதற்கா? பறிப்பதற்கா? ஒரு அலசல்!
சென்னை: தமிழகத்தில் தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடைமுறையை ( SIR) தொடங்கி இருக்கிறது. தமிழக முழுவதும் பிஎல்ஓ (BLO) எனப்படும் வாக்குச்சாவடி அளவிலான அதிகாரிகள் வீடு வீடாக சென்று படிவத்தினை வழங்கி, அவற்றை நிரப்பி சேகரித்து வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடைமுறை வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பது போல இருப்பதாக குற்றம் சாட்டுகின்றனர் பொதுமக்கள். உண்மையில் இந்த திருத்தம் வாக்குரிமையை மக்களுக்கு அளிப்பதற்கா? அல்லது பறிப்பதற்காக? என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது.
தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் தேர்தல் ஆணையம் தற்போது மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக தமிழகத்தை ஆளும் திமுக இதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்த திருத்தத்தின் படி, 2002 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் இருந்த வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொருவரும் தாங்களே வாக்காளர்களாக இருப்பதை மீண்டும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. இதனால், பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் வசித்து தொடர்ந்து வாக்களித்து வந்த பலர் கூட இப்போது தாங்களே நானும் வாக்காளர் தான் என நிரூபிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியல்
சில ஆண்டுகளுக்கு முன் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கோ அல்லது மாவட்டத்துக்கோ இடம் பெயர்ந்திருந்தால், தற்போதைய முகவரியுடன் புதிய படிவம் நிரப்பி ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாது என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், இந்த நடைமுறை சாதாரண மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. பலர் பழைய ஆவணங்களை வைத்திருக்க வாய்ப்பில்லை. மேலும் பெற்றோர் அல்லது துணையின் வாக்காளர் எண்கள் கூட தெரியாத சூழ்நிலையில், புதிய படிவங்கள் நிரப்புவது மிகவும் கடினம் என மக்கள் கூறுகின்றனர்.
சிறப்பு தீவிர திருத்தம்
தேர்தல் ஆணையம் கேட்டுள்ள ஆவணங்களில் குடும்ப அட்டை, பான் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்ற பொதுவான சான்றுகள் சேர்க்கப்படாததும் கேள்வி எழுப்பியுள்ளது. இதனால் உண்மையான வாக்காளர்களே நீக்கப்பட்டு விடக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதை அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்க்கின்றன. திமுக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "இது அரசமைப்பு மீறலுக்குச் சமம்; குடியுரிமை சான்றுகளை கேட்பது சட்ட விரோதம்" என்று குற்றம் சாட்டியுள்ளது. அந்த மனு நவம்பர் 11ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.
வாக்குரிமை பறிப்பு
மறுபுறம், பீகாரில் இதே மாதிரியான தீவிர திருத்தத்தின் போது 65 லட்சம் உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சை ஏற்பட்டது. ஹரியாணாவில் 3.5 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு, 25 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். அங்கு ஒரு தொகுதியில் பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாடல் லாரிசா என்ற அழகியின் புகைப்படம் 22 இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்ததும் அதிர்ச்சியளித்தது. இவற்றையெல்லாம் நினைத்தால், தமிழ்நாட்டில் நடக்கும் தற்போதைய தீவிர திருத்தமும், உண்மையான வாக்காளர்களை நீக்கி, போலி பெயர்களை சேர்க்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வாக்காளர் பெயர் நீக்கம்
தமிழ்நாட்டில் சுமார் 6.36 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், ஒரே மாதத்திற்குள் வீடு வீடாகச் சென்று படிவங்களைப் பெற்று ஆவணங்களை சமர்ப்பிக்கச் செய்வது நடைமுறையில் சாத்தியமற்றதாகவே இருக்கிறது. இந்த தீவிர திருத்தத்தின் படி, டிசம்பர் 9ஆம் தேதி வரைவு பட்டியல் வெளியாகும். அதில் பெயர் விடுபட்டால், டிசம்பர் 7 முதல் ஜனவரி 3 வரை மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். இறுதி பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும். ஆனால், அந்த நேரத்துக்குள் பெயர் சேர்க்கப்படாவிட்டால், தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக வாக்குரிமை இழந்தவர்களாக மக்கள் நிலைமையடைந்து விடக்கூடும்.
போலி வாக்காளர்கள்
தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களை அகற்றுவதாக கூறினாலும், பலர் "உண்மையான வாக்காளர்களையே நீக்குகிற தீவிர நடவடிக்கை இது" என கடும் அதிருப்தி தெரிவிக்கின்றனர். வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இந்த தீவிர திருத்தம் அரசியல் நோக்கத்துடன்தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஜனநாயகத்தின் இதயமாகிய வாக்குரிமையைப் பாதுகாக்க வேண்டிய ஆணையமே, மக்கள் நம்பிக்கையை சோதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications