நிகிதா சொல்வதற்கும் எப்ஐஆரில் உள்ளதற்கும் ஏகப்பட்ட முரண்? சிவகங்கை அஜித் குமாரை மையப்படுத்தியே புகார்
சிவகங்கை: சிவகங்கை திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் மரண வழக்கில், அவர்ருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், நிகிதா ஏற்கனவே கூறியிருந்த தகவலுக்கும் எப்.ஐ.ஆரில் உள்ள விவரங்களுக்கும் ஏகப்பட்ட முரண்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அஜித் குமார் ஒருவரை மையப்படுத்தியே நிகிதா புகாரளித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித் குமார் நகை திருட்டு புகார் தொடர்பாக சிறப்பு தனிப்படை பிரிவு போலீசாரால் கொடூர சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை கடும் கண்டனம் தெரிவித்தது.
மேலும், மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேசை விசாரணை அதிகாரியாக நியமித்து வருகிற 8 ஆம் தேதி அஜித் குமார் கொலை தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

நேரில் ஆஜராகி சாட்சி
நீதிமன்றம் உத்தரவிட்ட மறுநாளே நீதிபதி தனது விசாரணையை தொடங்கினார். இதற்காக திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. முதல் நாளில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை திருப்புவனம் போலீசார் நீதிபதியிடம் வழங்கினர். அதனை தொடர்ந்து கோவில் ஊழியர்களிடம் வாக்கு மூலம் பெறப்பட்டது.
2-வது நாளில் அஜித் குமார் தாய், அவரது சகோதரர் நவீன்குமார் மற்றும் உறவினர்களிடம் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேல் விசாரணை நடைபெறற்து. 3-வது நாளான நேற்று அஜித் குமார் மரணம் தொடர்பாக திருப்புவனம் மற்றும் மதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். 4-வது நாளான இன்று இறுதி கட்ட விசாரணை நடைபெற்றது.
பதில் சொல்ல முடியாமல் திணறல்
காலை 9 மணியளவில் திருப்புவனம் வந்த நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் நேரடியாக திருப்புவனம் போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை நீதிபதி சரிபார்த்தார். தொடர்ந்து போலீஸ் நிலைய சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அவரிடம் அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து சென்றது முதல் இறக்கும் வரை போலீசார் நடவடிக்கைகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டு விளக்கம் பெறப்பட்டது. நீதிபதி விசாரணையின் போது பல்வேறு கேள்விகளை கேட்டார். அதனை எதிர்பாராத போலீஸ் அதிகாரிகள் பதில் சொல்ல முடியாமல் திணறினர். சில கேள்விகளுக்கு சற்று யோசித்து விளக்கம் அளித்தனர்.
ஏகப்பட்ட முரண்பாடுகள்
இதற்கிடையே, இளைஞர் அஜித் குமாருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர் விவரங்கள் வெளியாகியுள்ளன. இதில், நிகிதா ஏற்கனவே கூறியிருந்த தகவலுக்கும் எப்.ஐ.ஆரில் உள்ள விவரங்களுக்கும் ஏகப்பட்ட முரண்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது, நிகிதா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, தனத் தயாருக்கு வீல் சேர் வழங்க ரூ.500 கேட்டு அஜித் வாக்குவாதம் செய்தார் எனக் கூறியிருந்தார்.
அஜித் குமாரை மையப்படுத்தியே புகார்
ஆனால் தனது புகாரில், காரை கோவில் வளாகத்தில் நிறுத்திவிட்டு இறங்கும் போது, காரை நான் பார்க்கிங் செய்கிறேன் என்று வலுக்கட்டாயமாக சாவியை வாங்கியதாக புகாரில் நிகிதா கூறியிருக்கிறார். தனது புகார் முழுவதும் அஜித் குமார் ஒருவரை மையப்படுத்தியே நிகிதா புகாரளித்து இருக்கிறார்.
எஃப் ஐ ஆர் பதிவு செய்யும் முன்பே
அந்த புகாரின் அடிப்படையில்தான், வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. 27 ஆம் தேதி காலை இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், 28 ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்பே, தனிப்படை போலீசார் காவலில் வைத்து அஜித் குமாரை தாக்கியிருக்கிறார்கள். முதல் தகவல் அறிக்கையும் எந்த நேரம் பதிவு செய்யப்பட்டது என்ற விவரம் இல்லை. நாள் மட்டும்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. நேரம் குறிப்பிடப்படவில்லை.












Click it and Unblock the Notifications