"சிரிப்பு காட்டவே பேசினேன்".. குஷ்பு குறித்த வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வாதம்.. ஜாமீன் மறுப்பு
சென்னை: திமுகவிலிருந்து நீக்கப்பட்ட தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை எருக்கஞ்சேரியில் ஜூன் 16ம் தேதி நடைபெற்ற கலைஞர் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைமை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு ஆளுநர் ரவி, அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு ஆகியோர் குறித்து இழிவாக பேசியிருந்தார்.

இதுதொடர்பாக கொடுங்கையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் ஜாமீன் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், கூட்டத்தினரை கவர்வதற்காக நகைச்சுவையுடன் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், யாரையும் குறிப்பிட்டு தவறாக பேசவில்லை எனவும் கூறிருந்தார்.
இந்த மனு சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பெருநகர தலைமை குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி இதேபோல் தொடர்ந்து பேசிவருவதாகவும், விசாரணை நிலுவையில் உள்ளதால் ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிட்டார்.
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி அல்லி, உயர் பதவியில் இருப்பவர்கள் மற்றும் மாற்று கட்சியினர் குறித்து இழிவாகவும், அவதூறாகவும் மனுதாரர் பேசிவருவது, ஏற்கனவே இதேபோன்ற 3 வழக்குகள் உள்ளன போன்றவற்றை சுட்டிக்காட்டி, சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை வடக்கு மாவட்ட திமுகவின் மேடை பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கடந்த ஜனவரி மாதம் ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். திமுகவினர் பங்கேற்ற நிகழ்ச்சியில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலிடம் ஆளுநர் மாளிகையிலிருந்து புகார் அளிக்கப்பட்டது.
அது போல் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக டிஜிபிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பும் புகார் அளித்திருந்தது. இந்த நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்து துரைமுருகன் உத்தரவிட்டிருந்தார்.
அது போல் திமுக பொதுக் கூட்ட மேடைகளிலும் அவர் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும் மன்னித்து கட்சியில் இணைத்துக் கொண்டு கட்சி பணியாற்ற அனுமதிக்குமாறும் கட்சித் தலைமைக்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து 5 மாதங்கள் கழித்து கடும் எச்சரிக்கையுடன் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடந்த மே மாதம் 17 ஆம் தேதி திமுகவில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் கட்சியில் மீண்டும் சேர்ந்த ஒரு மாதம் ஆன நிலையில் அண்மையில் ஒரு பொதுக கூட்டத்தில் பாஜக நிர்வாகியும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமாக இருந்த குஷ்பு குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தகாத வார்த்தைகளில் பேசிய வீடியோ வைரலானது.
இந்த நிலையில் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்தார். அவர் பெண்கள் பற்றி அவதூறாக பேச இவர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. கருணாநிதி இருந்த போது திமுக இப்படி இல்லை. இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்துக் கொண்டு கருணாநிதியை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆண்கள் ஒரு பெண்ணை இழிவாக பேசும் போது அவர்களை அந்த பெண்ணை ஒரு மகளாகவோ மருமகளாகவோ தாயாகவோ பார்ப்பதில்லை. நான் எனக்காக பேசவில்லை, என் மகள்களுக்காகவும் மற்ற பெண்களுக்காகவும் பேசுகிறேன். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய மொழியிலேயே என்னால் பேச முடியும். ஆனால் நான் அப்படி செய்தால் என் வளர்ப்பு தவறாகிவிடும். என்னை சீண்டி பார்க்காதீர்கள், தாங்க மாட்டீர்கள் என கோபமாக கொந்தளித்த குஷ்பு ஒரு கட்டத்தில் கண்ணீர் விட்டார்.
குஷ்பு மீது அவதூறு பேசிய நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். இதையடுத்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தற்போது ஜாமீன் மனு கோரிய மனுவில் ஜாமீன் மனு மறுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications