சிவகாசி 90 கிட்ஸ்க்கு கல்யாண நேரத்தில் யோகம்.. லாட்டரியில் கொட்டிய பணமழை.. ஊரையே வியக்க வச்சிட்டாரு
சென்னை: விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த 90 கிட்ஸ்க்கு கல்யாண தேதி குறிச்சதும் தான் குறிச்சாங்க.. ஒரே அதிர்ஷ்டம் தான் என்று சொல்லும் அளவுக்கு யோகம் அடித்துள்ளது. ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதியாகியுள்ளார். ஆனந்த் பெருமாள் சாமி என்ற 33 வயது நபருக்கு அமீரக லாட்டரியில் ரூ.2.32 கோடி பரிசாக கிடைத்துள்ளது. இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் ஆக உள்ள நிலையில் அவருக்கு இந்த அதிர்ஷ்டம் கொட்டியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் இந்தியாவை சேர்ந்த ஏராளமானவர்கள் பணியாற்றி வருகிறார்கள். கட்டுமான தொழில்கள், டிரைவர்கள், பொறியியல் துறை என பல்வேறு துறைகளில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் அங்கு பணியாற்றி வருவதை பார்க்க முடிகிறது. குறிப்பாக கேரளா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்களும் அதிக அளவில் அமீரக நாடுகளில் தங்கி வேலை செய்வதை பார்க்க முடிகிறது.

சிவகாசி இளைஞர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் லாட்டரி டிக்கெட்டுகளுக்கு அனுமதி உள்ளது. பிழைப்பு தேடி அந்த நாட்டிற்கு செல்லும் வெளிநாட்டவர்கள் தங்களுக்கு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டு விடாதா என்ற பேரார்வத்தில் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கி பார்க்கிறார்கள். பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சினாலும் ஒரு சிலருக்கு கோடிகள் கொட்டாமல் இல்லை.
குறிப்பாக கேரள மாநிலத்தை சேர்ந்த பலருக்கும் இப்படி லாட்டரிகளில் பல கோடி ரூபாய் பணம் அடித்து சொந்த ஊரில் பெரும் கோடீஸ்வரர்கள் ஆகி செட்டில் ஆகக் கூடிய சம்பவங்களும் நடக்கின்றன. அப்படியான ஒரு சம்பவம் தான் தற்போது தமிழக 90ஸ் கிட்ஸான இளைஞரான ஆனந்த் பெருமள்சாமி என்பவருக்கு அடித்துள்ளது. இது குறித்த விவரம் வருமாறு:-
அமீரகத்தில் வாங்கிய லாட்டரி
தமிழகத்தின் சிவகாசி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் பெருமாள் சாமி. 33 வயதான இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். துபாயில் உள்ள நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் ஆனந்த் பெருமாள்சாமிக்கு லாட்டரி வாங்கும் பழக்கம் இருந்துள்ளது. ஆனால், லாட்டரி விலை அதிகமாக இருப்பதால் தனியாக வாங்கினால் பெரும் நஷ்டம் தான் ஏற்படும் சம்பாதிக்கும் பணம் ஒன்று கூட மிஞ்சாது என நினைத்த ஆனந்த், தனது நண்பர்களுடன் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு குழுவாக வாங்கியிருக்கிறார்.
இப்படியாக தனது நண்பர் குழுவுடன் கடந்த நவம்பரில் இருந்து லாட்டரி வாங்கி வந்த அவருக்கு தொடர்ந்து ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. ஆனாலும் நமக்கும் ஒருநாள் எப்படியும் அதிர்ஷ்டம் அடிக்கும் என நினைத்துக்கொண்டு வாங்கி வந்துள்ளார். நேரம் வரும் போது கூரையை பிய்த்துக்கொண்டு பணம் கிடைக்கும் என்று சொல்வார்களே அப்படி, ஆனந்திற்கு அந்த அதிர்ஷ்ட நாள் வந்து இருக்கிறது.
ரூபாய் 2.32 கோடி பரிசு
சமீபத்தில் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 10 லட்சம் திர்ஹாம் பரிசு அடித்து உள்ளது. இதனால், இன்ப அதிர்ச்சி அடைந்த ஆனந்த் தனது நண்பர்களுக்கும் உடனடியாக தகவலை தெரிவித்து இருக்கிறார். இந்திய மதிப்பில் ரூ.2.32 கோடி பரிசு அடித்துள்ளதால், மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்ற ஆனந்த் இது பற்றி கூறியதவது:-
தூக்கமே வரவில்லை
"துபாயில் நான் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறேன். அதிர்ஷ்ட லாட்டரியில் பணம் அடித்த விஷயம் தெரிந்ததும் அன்று இரவு மகிழ்ச்சியில் எனக்கு தூக்கமே வரவில்லை. என் நண்பர்களை அழைத்து சொன்ன போது.. விளையாடாதடா எனக்கூறி நான் சொல்லுவதை முதலில் நம்பவில்லை. சும்மா காமெடி செய்கிறேன் என நினைத்தனர். அதன்பிறகு விரிவாக சொன்ன பிறகுதான் நம்பினார்கள். பரிசுத்தொகை குழுவில் உள்ள 12 பேர் பிரித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்.
ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20 லட்சம் பரிசு கிடைக்கும். எனக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. எனது திருமணத்திற்கு இந்த தொகையை செலவு செய்ய திட்டமிட்டு இருக்கிறேன். எனக்கு அமீரகத்தில் டிரைவிங் லைசன்ஸ் உள்ளது. இங்கு கார் ஓட்ட வேண்டும் என்பது கனவுகளில் ஒன்றாகும். இந்த கனவு நனவாக போகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications