தவெகவுக்கு 120 சீட்டா? இந்தியா டுடே எக்சிட் போல் பித்தலாட்டமா? எப்படி கணித்தார்கள் தெரியுமா?
சென்னை: தவெக தலைவர் விஜய்க்கு 120 சீட் கிடைக்கும் என இந்தியா டுடே சொல்வது நம்பகத்தன்மையாக இல்லை என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அவர்கள் போனில் கேட்டு கணிப்பை நடத்தியுள்ளார்கள் என்றும் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும் அரசியல் நிபுணருமான பாலசந்திரன், ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: நான் 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கணித்தது பெரும்பாலும் நடந்தது. திமுக கூட்டணி 150 இடங்களுக்கு வரும் என நான் ஒருத்தன் தான் சொன்னேன். மற்றவர்கள் எல்லாம் 200 க்கும் மேற்பட்ட இடங்களில் திமுக கூட்டணிக்கு இடம் கிடைக்கும் என தெரிவித்திருந்தனர்.

சட்டசபை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. இந்த தேர்தலில் 3 காரணிகள் உள்ளன. ஒன்று விஜய், இவர் எந்த அளவுக்கு தாக்கத்தை, எந்த பகுதியில் ஏற்படுத்துவார் என்பதை சரியாக ஆய்வு செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை.
இரண்டாவது எஸ்ஐஆர் குறித்து மேற்கு வங்கத்தில் அதிகம் பேசப்பட்டது. ஆனால் தமிழகத்தில் அது குறித்து பேசவில்லை. அந்த எஸ்ஐஆரின் மோசமான தாக்கத்தை அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் நியூட்ரலைஸ் செய்துவிட்டார்களா என்பது தெரியவில்லை.
அவ்வாறு நியூட்ரலைஸ் செய்துவிட்டதாக கிளை கழகங்களில் இருந்து திமுக தலைமைக்கு செய்திகள் போயுள்ளன. இதை தலைமையும் நம்புகிறது.
மூன்றாவது காரணி என்பது தேர்தல் ஆணையம். கேரளாவில் தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய நாள் தலைமை செயலாளரை மாற்றினார்களே என்ன சாதித்தார்கள்? அது போல் தமிழகத்திலும் தலைமைச் செயலாளரை மாற்றும் அளவுக்கு என்ன புகார் இருந்தது.
தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததும் 3 மாவட்டங்களின் எஸ்பிக்களை உடனே மாற்றம் செய்துவிட்டது தேர்தல் ஆணையம். கேட்டால் அவர்கள் மீது பாஜக புகார் என்கிறார்கள். தேர்தல் ஆணையம் நடந்து கொண்டது அப்பட்டமான செயல்! எனவே இந்த மூன்று காரணிகளால் இந்த தேர்தலை மிகவும் துல்லியமாக கணிப்பது முடியாது.
ஆனால் நான் 35 ஆண்டுகள் நிர்வாகத்தில் இருந்திருக்கிறேன், அதை வைத்து பார்க்கும் போது, மக்கள் எப்போதும் செய்த நன்றியை மறக்காதவர்கள். திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் பெரும்பான்மையான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
மகளிருக்கான இலவச பஸ் பயணம், மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் பெண்களின் பல்வேறு டென்ஷனை குறைத்திருக்கின்றன. ஆனால் ஆசிரியர்கள் பணிநிரந்தரம், செவிலியர்கள் ஊதியம், மருத்துவர்களின் ஊதியம் உள்ளிட்டவைகளை திமுக அரசால் செய்யமுடியவில்லை.
பொதுமக்கள் ஏற்கெனவே செய்த நன்மைகளை விட செய்ய போகும் நன்மைகளுக்குத்தான் நன்றியுடையவர்களாக இருப்பார்கள் என சொல்வதுண்டு. அந்த வகையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர்.
ஆனால் மக்களுக்கு திமுக தேர்தல் அறிக்கையின் மீது நம்பிக்கை அதிகம். இந்த விஷயத்தில் ஸ்டாலின் நல்ல வகையில் கட்டமைத்துவிட்டார்கள். இதற்கு உதாரணம்! தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுத்தது. எடப்பாடி பழனிசாமி தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் கொடுப்பதாக எழுதிக் கொடுத்தும் அதை செய்யவில்லை. ஆனால் திமுக சொன்னதை செய்துவிட்டது என பிரேமலதா தெரிவித்திருந்தார்.
அது போல் அதிமுக மீதும் சிலருக்கு நம்பிக்கை இருக்கும். எடப்பாடி ஏற்கெனவே ஆட்சி செய்திருந்தார். ஆனால் தவெக புதுசு! அக்கட்சிக்கு நகர்ப்புறங்களில் செல்வாக்கு இருக்கிறது. இங்கு கட்சியின் கட்டுமானம் தேவையில்லை, ஆனால் கிராமப் புறங்களில் தேவைப்படுகிறது.
இந்தியா டூடே கருத்துக் கணிப்பில் விஜய் கட்சிக்கு 38 சதவீதம் வாக்குகள் வரும் என்கிறார்கள். இந்த கருத்துக் கணிப்புகளில் எனக்கு ஒன்று புரியவில்லை. திமுக 140- 160 இடமும் அல்லது 140 - 160 இடம் பிடிக்கும் என கணிப்புகள் சொல்கின்றன. அப்படியென்றால் அதிமுக 65- 80, 40- 60 பிடிக்கும் என்றால் அதிமுகவின் பெரும்பான்மை ஓட்டுகள் விஜய்க்கு போக வேண்டும். திமுக ஓட்டு அதிகம் போயிருக்கக் கூடாது. அப்படியிருந்தால்தான் இத்தனை இடம் வாங்க முடியும்.
பொதுவாக விஜய் கட்சிக்கு 20 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என வைத்துக் கொள்வோம். எல்லா தொகுதிகளிலும் இத்தனை சதவீதம் வாக்குகளை பெறுவார்களா என்பது சந்தேகம். 20 சதவீதம் வாங்கி ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியாது. அப்படியென்றால் தவெக சில தொகுதிகளில் 20 சதவீதம் வாங்கலாம். அதாவது நகர்ப்புறங்களில் அதிக வாக்குகளை வாங்கி 2ஆவது இடமோ அல்லது வெற்றியோ பெற வேண்டும்.
இந்த சராசரி வாக்கு சதவீதத்தை மெயின்டெயின் செய்ய வேண்டும் என்றால் நகர்புறங்களில் எவ்வளவு வாக்குகளை வாங்குகிறார்களோ அந்த அளவுக்கு குறைவாகத்தான் கிராமபுறங்களில் வாங்க முடியும். இது உண்மை என்றால் தவெக 18 -24 இடங்கள் எப்படி பிடிக்கும். இதனால் சர்வேக்கள் குறித்து எனக்கு சந்தேகம் உள்ளது.
2001 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி வெல்வார் என எல்லா சர்வேக்களும் சொல்லியது. 1996-2001 ஆம் ஆட்சிக் காலத்தில் கருணாநிதி நிர்வாகத்தை நன்றாக நடத்திய போதிலும் 2001 தேர்தலில் தோற்றார். ஏனென்றால் கூட்டணி அமைப்பதில் தவறு செய்துவிட்டார்.
இந்த முறை முஸ்லீம்கள் ஓட்டு திமுகவுக்குச் செல்லும், விஜய்க்கு கிறிஸ்துவர்கள் ஓட்டு முழுமையாக செல்லாது. அந்த வகையில் போல் எடுத்தவர்கள் யாரை தொடர்பு கொண்டு கேட்டார்கள் என்பதை பார்க்க வேண்டும். எக்சிட் போல் என்றால் ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்தவர்களிடம் கேட்க வேண்டும். ஆனால் பல போல்கள் தொலைபேசியில் எடுக்கப்படுகிறது. போனில் மக்கள் உண்மையை சொல்கிறார்களா பொய் சொல்கிறார்களா என தெரியாது.
மே 4-ஆம் தேதி (2026) தேர்தல் முடிவுகள் வரும்போதுதான் உண்மையான நிலவரம் தெரியும் என்றும், தற்போதைய கணிப்புகள் பெரும்பாலும் ஒருதலைப்பட்சமாகவோ அல்லது தொழில்நுட்பக் குறைபாடுகளுடனோ இருக்கலாம் என்றும் அவர் உரையாடலை முடித்தார்.












Click it and Unblock the Notifications