ஓடும் பஸ்சில் குபீரென பிடித்த தீ.. பதறிப்போன பயணிகள்.. சென்னை தாம்பரம் அருகே பரபரப்பு
சென்னை: சென்னை பிராட்வேயில் இருந்து தாம்பரம் நோக்கி பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அரசு ஏசி பஸ்சில் திடீரென குபுகுபுவென புகை வந்ததால் அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை முழுவதும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சாதாரண பேருந்து, எக்ஸ்பிரஸ் பேருந்து, குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து போன்றவை பயணிகளின் வசதிக்காக இயக்கப்பட்டு வருகின்றன.
அன்றாடம் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள், அலுவலக வேலைக்கு செல்வோர், தினசரி வேலைகளுக்கு செல்வோர், அத்தியாவசிய காரணங்களுக்காக பயணிப்பவர்கள் என ஆயிரக்கணக்கானோர் பேருந்து வசதியை பயன்படுத்தி வருகின்றனர்.

பயணிகள் கூட்டம்
சென்னையில் காணப்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் வாகனங்களை பார்க்கிங் செய்ய போதிய இடவசதிகள் இல்லாத காரணத்தால் பலரும் சொந்த வாகனங்களை விட்டு விட்டு மாநகர பேருந்துகளில் செல்வதை காண முடிகிறது. அதுவும் பீக் ஹவர்களில் பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழிவதை காண முடியும். குறிப்பாக தாம்பரம், பிராட்வே, கோயம்பேடு போன்ற முக்கிய பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிக அளவில் காணப்படும்.

பிராட்வேயில் இருந்து புறப்பட்ட பஸ்
இந்த நிலையில், இன்று பிராட்வேயில் இருந்து தாம்பரம் நோக்கி தடம் 21 ஜி என்ற ஏசி வசதி கொண்ட மாநகர பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே வந்த போது திடீரென பேருந்தின் மேற்கூரையில் இருந்து புகை கிளம்பியது. இதை அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் புகை கிளம்புவதாக கூச்சலிட்டனர்.

நடுவழியில் பேருந்தை நிறுத்திய ஓட்டுனர்
இதைக் கவனித்த பேருந்து ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்திவிட்டு பயணிகள் அனைவரையும் கீழே இறங்குமாறு அறிவுறுத்தினர். பேருந்தின் மேற்கூரையில் புகை கிளம்பும் தகவல் அறிந்ததும் பயணிகளும் அச்சத்தில் அவசர அவசரமாக பேருந்தை விட்டு இறங்கினர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. இந்த சம்பவத்தால், எப்போதும் பரபரப்பாக காணப்படும் ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பரபரப்பான தாம்பரம் - ஜிஎஸ்டி சாலை
வாகனங்கள் வரிசையாக அணி வகுத்து நின்றன. தகவல் அறிந்த போலீசார், பேருந்தை அங்கிருந்து எடுத்துச்செல்லுமாறு வலியுறுத்தினர். இதனால், வேறு வழியின்றி புகை வந்தபடியே பணிமணைக்கு பேருந்தை ஓட்டுநர் ஓட்டிச்சென்றார். இந்த சம்பவத்தால் தாம்பரம் - ஜி.எஸ்.டி சாலை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.












Click it and Unblock the Notifications