Snake in Ear: செய்யான் பாம்பு காதுக்குள் நுழைந்துவிடுமா? பாதுகாக்க வேண்டிய அபூர்வ உயிரினம்!
சென்னை: கறுப்பும், பழுப்பும் கலந்த நிறத்தில் தரையில் வேக வேகமாக நகரும் இந்த புழு போன்ற ஒன்றை இதற்கு முன்னர் நீங்கள் பார்த்திருக்க கூடும். இதை கண்மூடி பாம்பு என்றும், கிராமங்களில் செய்யான், சியான் என்றும் அழைப்பார்கள். காதுக்குள் போய் மூளையை தின்று விடும் என்று பயந்து இதை பார்த்த உடனே அடித்து கொன்று விடுவோம். ஆனால் இது ஆபத்தானதா? என்பது குறித்து ஆய்வாளர்கள் விளக்கியுள்ளனர்.
செய்யான் என்பது பாம்பு வகையை சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் இண்டோடைப்ளோப்ஸ் பிராமினஸ். இந்த பாம்புகள் உலகம் முழுவதும் பரவியது ஒரு சுவாரசியமான கதை. அதாவது தாவரங்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு போய் நடும்போது, இந்த தவாரங்களுடன் சேர்ந்து தலைவர் செய்யான் எல்லா நாடுகளுக்கும் பயணித்திருக்கிறது. எனவே இந்த பாம்பை தெரியாத ஆளே கிடையாது.

அதிகபட்சமாக இந்த பாம்புகள் 5-10 செ.மீ வரை வளரும். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவெனில், இந்த பாம்புகளில் ஆண்களே கிடையாது. ஆம் வெறும் பெண்கள் மட்டும்தான். எனவே இவர்களிடம் வரதட்சணை கொடுமை, பாலியல் வன்கொடுமை ஆகியவை நடக்காது என நம்புவோமாக.
மண்புழுவுக்கும் செய்யானுக்கும் சில வேறுபாடுகள் உண்டு. மண்புழுவுக்கு உடலில் வளையங்களாக இருக்கும். ஆனால், செய்யானுக்கு செதில் செதிலாக இருக்கும். ஆளு நல்லா பழுப்பு நெறத்துல இருப்பாப்படி. விட்டா சல்லுன்னு ஓடிவிடும். தரையில் படுத்திருக்கும் போது காதுக்குள் நுழைந்து மூளைக்கு போய்விடும் என்று பயந்து இதனை பார்த்த உடனே நாம் அடித்து கொன்று விடுகிறோம். ஆனால் செய்யான் பெயருக்குதான் பாம்பு.. விஷமே கிடையாது. மனிதர்களின் காதில் நுழைந்ததாக இதுவரை எந்த தகவலும் இல்லை.
செய்யானுக்கு தாய் வீடு என்னவோ ஆப்பிரிக்காவும், ஆசியாவும்தான். ஆனால் அது இல்லாத இடமே கிடையாது. 4900 அடி உயரம் கொண்ட மலை பகுதியில் கூட ஹாயாக வாழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் இருக்கிறது. லட்சத்தீவுகளில் பாம்பு கிடையாது என கேள்விபட்டிருப்போம். அந்த இடத்தில் கூட செய்யான் வாழ்ந்து வருகிறது. லட்சத்தீவுகளில் வாழும் ஒரே பாம்பு இனம் இது மட்டும்தான்.
இந்த வகை பாம்புகளுக்கு கண் தெரியாது. வாய் இருக்கிறது பற்கள் மேல் தாடையில் மட்டும் இருக்கிறது. எறும்பு முட்டைகள், பூச்சிகளின் புழுக்கள், மண்புழு ஆகியவற்றை இது இரையாக உண்டு வாழ்கிறது. அனைத்து பெண் பாம்புகளும் மரபணு ரீதியாக ஒரே மாதிரியானவைதான். இந்த பாம்புகள் சுயமாகவே அதிகபட்சம் 8 முட்டைகள் வரை இடும். ஆறு ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
பார்வை குறைவு என்பதால், மோப்ப சக்தி இந்த வகை பாம்புகளுக்கு அதிகம். மோப்ப சக்தியை பயன்படுத்தி இரையை அடையாளம் கண்டுகொள்கின்றன. இந்த வகை பாம்புகள் சூழலியல் சமநிலையில் மிக முக்கியமான பங்கை வகிப்பதால், இவற்றை பாதுகாக்க வேண்டியது மிகவும் முக்கியம் என ஆய்வாளர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். எனவே நீங்களும் இதை எங்காவது வெளியில் பார்த்தால் உடனே அடித்து கொன்றுவிடாதீர்கள்.












Click it and Unblock the Notifications