சினிமாவில் அரசன்..அரசியலில் ஆண்டி! கட்சி ஆரம்பித்து காணாமல் போன டாப் ஸ்டார்ஸ்! ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்
சென்னை: தமிழ் திரையுலகில் உச்சத்தில் இருக்கும் போதே அதனை விட்டு விலகி அரசியலில் குதிக்க போகிறார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதாக அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் போது அரசியல் கட்சி ஆரம்பித்து அதன்பின் காணாமல் போன சில நடிகர்களின் சிறிய ஃப்ளாஷ்பேக்கை தற்போது பார்க்கலாம்..
இந்தியாவில் பல மாநிலங்கள் இருந்தாலும் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்தது தென்னக மாநிலங்களில் மட்டுமே நடக்கும். என்.டி.ஆர், எம்ஜிஆர் என பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

குறிப்பாக தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் திரை துறையை சார்ந்தவர்களின் பங்களிப்பே பிரதானமாக இருக்கிறது. கட்சியிலும் ஆட்சியிலும் ஏராளமான திரைப் பிரபலங்கள் தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளனர்.
அரசியலில் திரை பிரபலங்கள்: மிக முக்கியமாக வசனகர்த்தாவாக இருந்து திமுகவை ஆரம்பித்த அண்ணா, கதை திரைக்கதை வசனம் எழுதி தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி, நடிகராக இருந்து தொடர்ந்து 13 ஆண்டுகள் ஆட்சி அமைத்த எம்ஜிஆர், நடிகையாக இருந்து முதல்வரான ஜெயலலிதா, நடிகராக இருந்து எதிர்க்கட்சித் தலைவர் பதவி வரை உயர்ந்த விஜயகாந்த் என முக்கிய ஆளுமைகளை சொல்லலாம்.
ஜொலித்த நட்சத்திரங்கள்: குறிப்பாக தற்போதைய முதல்வர் முக ஸ்டாலினும் ஆரம்பத்தில் சினிமாவிலும், சீரியல்களிலும் நாயகன் அவதாரம் எடுத்துள்ளார். அவரது மகனும் தற்போதைய அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினும் தயாரிப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி, நாயகன் அரிதாரம் பூசி அதற்குப் பிறகே அரசியலில் நுழைதார் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் எம்பி எம்எல்ஏக்கள் என பல பதவிகளையும் தமிழகத்தைச் சேர்ந்த திரை நட்சத்திரங்கள் வகித்திருக்கின்றனர். சரத்குமார், நெப்போலியன், கருணாஸ் என பலரை குறிப்பிட்டு சொல்லலாம். இப்படி இருக்கையில் ஒரு சிலர் தாங்கள் புகழின் உச்சியில் இருக்கும் போது அரசியல் கட்சியை ஆரம்பித்து முதல்வர் கனவில் வலம் வருகின்றனர். இனிவரும் காலங்களிலும் அப்படி நிறைய பேர் வருவார்கள் என்பது நிச்சயம்.
விஜய் அரசியல் வருகை: அந்த வகையில் தற்போது தமிழகத்தின் மிகப் பிரபலமான நடிகராக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து அரசியல் களத்தில் குதித்து இருக்கிறார். இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை 2026 சட்டமன்றத் தேர்தல் தான் எனது இலக்கு என அறிவித்து, அவர் களத்தில் இறங்கி இருக்கும் நிலையில் கட்சியின் பெயரும் பதிவு செய்யப்பட்டு அதற்கான அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது. இது ஒரு புறம் இருக்க 2026லேயே முதல்வர் பதவி விஜய்க்கு கிடைத்து விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

அரசியல் வருகை: காலமும் அரசியலும் பல ஆச்சரியங்களை கொண்டிருக்கிறது. அரசன் ஆண்டியாவதும் ஆண்டி அரசன் ஆவதும் தமிழக சினிமாவிலும் தமிழக அரசியலிலும் ஒன்றும் புதிதல்ல. அப்படி அரசர்களாக இருந்த பலரும் அரசியலில் ஆண்டியாகிப் போன நிகழ்வுகளும் உண்டு. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக போற்றப்பட்ட சிவாஜி கணேசன் தொடங்கி தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்து காணாமல் போன சரத்குமார் வரை பலர் இருக்கிறார்கள்.. அவர்களில் குறிப்பிடத்தகுந்த சில நடிகர்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்..
'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் : இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் சிவாஜி கணேசன். காரணம் கட்சி ஆரம்பித்தது ஒருபுறம் இருந்தாலும் தமிழ் சினிமாவில் நடிகர் திலகம் என போற்றப்படும் இவர் அரசியல் கட்சி ஆரம்பித்து மிகப் பெரிய ஏமாற்றத்தை சந்திக்க வேண்டி இருந்தது. எம்ஜிஆர் இருக்கும்போதே தமிழ் திரை உலகில் மிகப்பெரும் ஜாம்பவான் நடிகராக வளம் வந்த அவர், காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றினார். தொடர்ந்து தனக்கு கட்சியில் உரிய அங்கீகாரம் இல்லை என 1988 ஆம் ஆண்டில் 'தமிழக முன்னேற்ற முன்னணி' எனும் கட்சியை ஆரம்பித்தார். அப்போது அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்த பலர் சிவாஜியின் கட்சியில் இணைந்தனர். மேல்மட்ட அரசியல் கட்சி, கடைநிலை தொண்டர்களை புறக்கணித்தது என பல தவறுகள் கட்சியில் இருந்ததால் அவரது கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்ட பலருமே மண்ணைக் கவ்வ வேண்டி இருந்தது. அதற்குப் பிறகு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்தார். அதுவும் தோல்வியில் முடிய அதற்குப் பிறகு தனது கடைசி காலம் வரை அரசியல் குறித்த சிந்தனை சிவாஜிக்கு எழவில்லை.

'திரைக் கதை நாயகன் பாக்யராஜ்: எம்ஜிஆர்-ஆல் தனது சினிமா வாரிசு என அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவர் பாக்யராஜ். 'திரைக்கதை மன்னன்' என்ற பெயரோடு தாய்க் குலங்களின் ஆதரவை பெற்ற அவர் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு 'எம்ஜிஆர் மக்கள் முன்னேற்ற கழகம்' எனும் கட்சியை தொடங்கினார். ஆனால் கட்சி மற்றும் பெயர் மட்டும் தான் தெரியும் அதன் கொள்கைகள் என்ன என்பது பாக்கியராஜுக்கே தெரியாது என அந்த கால அரசியல்வாதிகள் பல விமர்சித்திருக்கின்றனர். எம்ஜிஆர் வாரிசு என்ற அடையாளம் அவருக்கு உதவாத நிலையில் அதிமுகவினர் கூட அவருக்கு ஆதரவளிக்கவில்லை. இதனால் ஒரு கட்டத்தில் அந்த கட்சியை திமுகவோடு இணைத்தார். அதன் பிறகு தற்போது வரை அரசியல் என்றாலே பாக்கியராஜுக்கு பாகற்காய் கசப்புதான்..

'சகலகலா' டிஆர் ராஜேந்திரன்: எம்ஜிஆர் சிவாஜி காலத்திலேயே சினிமாவுக்கு வந்து தற்போது மிகப் பிரபலமாக இருக்கும் மகன் சிலம்பரசனை குழந்தையாக அறிமுகப்படுத்தி நட்சத்திரமாக உருவாக்கியவர் டிஆர் ராஜேந்திரன். இவரும் அரசியல் ஆசைக்கு விதிவிலக்கு அல்ல. பெண்களை மதிக்கும் நடிகர் என்ற பெயர் பெற்ற இவருக்கு ஆயிரக்கணக்கான பெண் ரசிகைகள் இருந்தனர். தொடர்ந்து தீவிர கலைஞர் ஆதரவாளராக இருந்த டிஆர் ராஜேந்தர் தொடர்ந்து அக்கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏவாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து 2005ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகிய அவர் லட்சிய திராவிட முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கினார். அதற்கு பிறகு ஒரு தேர்தலில் கூட அவர் வெற்றி பெறவில்லை. ஆனாலும் தற்போது வரை அந்த கட்சி மட்டும் இருக்கிறது.

'நவரச நாயகன்' கார்த்திக்: 1980, 90, 2000 காலகட்டங்களில் மிகப் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக். துள்ளலான நடிப்பு, காமெடி, நடனம் என அட்டகாச நடிகராக வலம் வந்த அவர் ரஜினி விஜயகாந்துக்கு போட்டியாக கருதப்பட்டவர். இந்நிலையில் மற்ற நடிகர்கள் அரசியலில் குதித்த நிலையில் குறுக்கே இந்த கௌசிக்கு வந்தா என அரசியலில் குதித்தார். முதலில் பார்வர்டு பிளாக் கட்சியில் இணைந்த அவர் பின்னர் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற தனிக்கட்சியை ஆரம்பித்தார். தொடர்ந்து கட்சியின் பெயரை மாற்றுவது, கூட்டணியை மாற்றுவது, கொடியை மாற்றுவது என ஏராளமான சேட்டைகள் செய்த அவர் அரசியலில் ஜொலிக்க முடியாமல் போனார்.

'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார்: வில்லனாக இருந்து நாயகனாக உயர்ந்த சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற பல படங்களில் நடித்து பி,சி சென்டர் ரசிகர்களிடையே நாயகனாக உயர்ந்தார். திமுக ஆதரவாளராக இருந்த அவர் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்து அதிமுக கூட்டணியில் இடம் பெற்றார். பிறகு குழப்பமான முடிவுகளால் அவரது கட்சி படுதோல்வியை சந்தித்தது. தற்போது பாஜகவில் கட்சியை இணைத்து விட்டு ஒரு சாதாரண தொண்டனாக இருக்கிறார் சரத்குமார்.

'உலக நாயகன்' கமலஹாசன்: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, நடன இயக்குனர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், வசனகர்த்தா, திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்ட கமலஹாசன் திரைத்துறையுலகில் உலகநாயகன் எனப் போற்றப்படுகிறார். சிவாஜி, ரஜினி, விஜய், அஜித் தொடங்கி தற்போது தனுஷ், சிவகார்த்திகேயன் வரை என பல தலைமுறை நடிகர்களுக்கு இணையாக தற்போது நடித்து வருபவர். அரசியலில் குதிப்பதாக தொடர்ந்து பேசி வந்தவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் மக்கள் நீதி மய்யம் எனும் கட்சியின் பெயரை அறிவித்தார். தொடர்ந்து அவரின் படங்கள் போலவே அவரது கொள்கைகளும் மக்களுக்கு புரியாமல் போனது. இடையிடையே ரிமோட்டை கொண்டு டிவியை உடைப்பது, ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சிப்பது என பேசி வந்த அவர் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியை சந்திக்க நேர்ந்தது. கூட்டணி அமைத்தும் பலன் இல்லை. இதை அடுத்து திமுக கூட்டணியில் இணைந்து பிரச்சாரம் மேற்கொண்டார். அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இருந்த போதும் மக்கள் நீதி மய்யத்தை எங்காவது பார்த்தால் சொல்லுங்கள் என புலம்பி வருகின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

கருணாஸ்: இசைக்கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கி சினிமாவில் கொடி ஏற்றி இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் வருபவர் நடிகர் கருணாஸ். காமெடியனாக நடித்த அவரது படங்கள் மக்களிடம் சேர்ந்த நிலையில் நாயகன் அவதாரம் எடுத்து திரை உலகில் சூடு போட்டுக் கொண்டார். பின்னர் மீண்டும் காமெடி வேடங்களிலும், குணச் சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். முன்னதாக தனது சமூகம் சார்ந்து முக்குலத்தோர் புலிப் படை எனும் கட்சியை ஆரம்பித்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு பிரகன தேர்தல்களில் காணாமல் போனார். ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கருணாசின் கட்சிக் கொடியும் அவரது ஆதரவாளர்களும் இருப்பதாக கூறப்படுகிறது.

"கேப்டன்" விஜயகாந்த்: திரை துறைலகில் பலரும் தோல்வியை சந்தித்து இருந்தாலும் வெற்றிகரமாக அரசியல் புள்ளியாக வலம் வந்தவர் கேப்டன் என மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயகாந்த். மற்றவர்கள் வாய்ச் சவடால் விட்டுக் கொண்டிருக்கும் போது ஆளுங்கட்சியாக இருந்த திமுகவை எதிர்த்து கட்சியை ஆரம்பித்தவர். மாநாடுகள், பொதுக்கூட்டங்கள் என நடத்தி பிரம்மாண்ட அரசியல் செய்தவர். தான் சந்தித்த தேர்தல்களில் பெரு வெற்றி பெற்றார். தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இணைந்து எதிர்க்கட்சித் தலைவராகவும் உயர்ந்தார். அதற்குப் பிறகு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. விஜயகாந்த் இருக்கும் வரை தேமுதிக ஆளும் கட்சிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் கட்சியாக இருந்தது. அவரது மறைவுக்குப் பிறகு தேமுதிக சற்றே சுணக்கத்தில் இருக்கிறது. அவரது மகன்களும் மனைவியும் கட்சியை மீட்டெடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

"சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த்: மேற்கண்ட நடிகர்களில் பட்டியலில் சற்றே வித்தியாசமானவர் சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த். தன் படம் வரும்போது எல்லாம் அரசியலில் குதிக்கிறேன் காலம் கனிந்து விட்டது என கூறிவந்த அவர் கலைஞர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தான் கட்சி ஆரம்பிப்பது உறுதி எனக் கூறினார். தொடர்ந்து அறிக்கைகள், ஆலோசனை கூட்டங்கள் என அதிரடி காட்டி வந்தவர் திடீரென அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் அவரது பல மூத்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பல ஆண்டுகளாக கேட்டு கேட்டு பழகிப்போன வசனம் என்றாலும் ஒரு வழியாக இனி அரசியலில் வரமாட்டேன் என போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். தற்போது மீண்டும் சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் ரஜினிகாந்த் இனி அரசியலுக்கு வரப் போவதில்லை. அந்த வகையில் பார்க்கும்போது மற்ற நடிகர்களின் அரசியல் வருகையை பார்த்து சூடு போட்டுக் கொள்ள விரும்பாமல் ரஜினிகாந்த் விலகி விட்டது நல்லது தான் என்கின்றனர் அவரது ரசிகர்கள்.













Click it and Unblock the Notifications