தர்மபுரியில் சவுமியா அன்புமணி.. வெற்றிகனி பறிப்பாரா.. காடுவெட்டி குரு ஆதரவாளர்கள் கை கொடுப்பார்களா?
தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டியிடுவதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: புதுவரவுதான்.. ஆனால் பலம் மிக்க வேட்பாளராக தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி கால் பதிக்க போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.
பாமக எந்த கூட்டணியில் இடம்பெற போகிறது என்பது உறுதியாக தெரிவதற்கு முன்பேயே தருமபுரியில் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நேற்று வெளியிட்ட 7 தொகுதிகளின் உத்தேச பெயர் பட்டியலில் அன்புமணி பெயர் இடம்பெறவில்லை, சவுமியா அன்புமணி பெயர் முதலாவதாக இருந்தது.

அரசியல் குடும்பம்
சவுமியா அன்புமணியை பொறுத்தவரை பிரபலமானவர்தான். அவருக்கு அறிமுகம் என்று தனியாக தேவையில்லை. செல்வாக்கு மிக்க குடும்பம். பசுமை தாயகம் என்ற ஒரு அமைப்பை நடத்தி வருகிறார். வேட்பாளராகதான் சவுமியா புதுமுகமே தவிர, அரசியல் ஞானம் இயல்பாக ஊறி உள்ளது. காரணம், அவரது அப்பா மற்றும் சகோதரர் காங்கிரசில் தீவிர அரசியலில் இருப்பவர்கள்.

மக்கள் ஆதரவு
இதைதவிர தருமபுரி நாடாளுமன்ற தொகுதியின் சிட்டிங் எம்பியான அன்புமணி தொகுதி வளர்ச்சி திட்டங்களை ஓரளவு நன்றாகவே செய்து முடித்துள்ளதால், மக்களின் அதிருப்தி அவருக்கு அவ்வளவாக இல்லை. இது சவுமியாவுக்கு பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும்.

பக்க பலம்
இதே தொகுதியில் பாமக 4 முறை வெற்றி வாகை சூடியுள்ளது. அத்தியாவசிய பிரச்சனைகள் பெருமளவு தீர்க்கப்பட்டு உள்ளன. இது எல்லாவற்றையும்விட ஆகப்பெரிய பிளஸ் பாயிண்ட் சாதீய ஓட்டுக்கள்தான்! இது முற்றிலும் மறுக்க முடியாத உண்மை. இதை தவிர எப்படியோ அன்புமணி சவுமியாவுக்காக கண்டிப்பாக நேரடி பிரச்சாரத்தில் முழு வீச்சில் இறங்குவார். இவ்வளவும் சவுமியா வெற்றிபெற பக்கபல காரணங்களாக அமைந்திருக்கின்றன.

இடைஞ்சல்
ஆனால் ஒரே ஒரு பிரச்சனை, ஒரே ஒரு மைனஸ், ஒரே ஒரு இடைஞ்சல் என்னவாக இருக்கும் என்றால், காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள்தான்! இதே பகுதியில் அதிக செல்வாக்கு குருவுக்கும் உள்ளது. அவர் மறைந்தாலும் அந்த செல்வாக்கு இன்னமும் தொடர்கிறது. பாமக தரப்பு மீது குரு குடும்பத்தார் அதிருப்தியில் உள்ளதால், சில சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

சாதீய ஓட்டுக்கள்
அதனால் சவுமியாவின் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது சாதீய ஓட்டுக்கள் தான் என்றாலும், அதே சாதீய ஓட்டுக்களை பிரிப்பதும், அல்லது சவுமியாவை வெற்றி பெற வைப்பதும் காடுவெட்டி குருவின் ஆதரவாளர்கள் கையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இடையூறுகள் எத்தனை வந்தாலும் அத்தனையையும் சவுமியா அன்புமணி தவிடுபொடியாக்கி வெற்றி கனியை பறிப்பார் என்றே பாமகவினர் உறுதியாக நம்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications