சென்னைக்கு வர முன்பதிவு செய்த 867 பேர் .. அவர்களின் நிலை என்ன? ரயில்வே மேலாளர் வெளியிட்ட தகவல்
சென்னை: கோரமண்டல் ரயிலில் சென்னை வருவதற்கு 867 பேர் முன்பதிவு செய்திருந்தனர் . அவர்களின் தகவல்களை சேகரித்து வருகிறோம். காயமின்றி தப்பியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்பட உள்ளனர் என தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் கூறினார்.
ஒடிசா ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் பிரபல தமிழ் ஊடகத்திற்கு இன்று காலை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் சென்னை வருவதற்கு 867 பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்றார். அவர்களின் தகவல்களை சேகரித்து வருகிறோம்.

காயமின்றி தப்பியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்பட உள்ளனர். பயணிகளின் முன்பதிவு விவரங்களை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே துறை விரிவான விசாரணை நடத்தும். ரயில் தடம்புரண்டது தான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
தண்டவாளம் பராமரிப்பு பணியில் கவனம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு டிப்பார்ட்மெண்டிலும் காலியிடங்கள் அதிக அளவில் இருப்பதால், கடுமையான வேலைப்பளு இருக்கிறது. இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
அதேபோல் தான் இந்த டிராக் பராமரிப்பு விஷயத்திலும் கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய கணிப்பாக இருக்கிறது. ஏனெனில் மெக்கானிக்கல் ரீதியாக தவறுகள் இல்லை. அப்படி இருந்திருந்தால் ரயிலை உடனே நிறுத்திவிடுவார்கள். சிக்னல் பிரச்சனையும் கிடையாது அல்லது நாசவேலையும் கிடையாது என்றார்.

இதனிடையே ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு உறவினர்கள் செல்ல இன்று இரவு 7 மணி அளவில் சென்டரலில் இருந்து சிறப்பு ரயில் செல்கிறது. இதேபோல் காயம் இல்லாமல் தப்பிய பயணிகள் ஒடிசாவில் இருந்து சென்னைக்கு வர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications