திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி.. செளமியா அன்புமணி களமிறங்கும் தொகுதி எது?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி செளமியா அன்புமணி திருப்போரூர் அல்லது பாப்பிரெட்டிபட்டி ஆகிய இரு தொகுதியில் ஒன்றில் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட செளமியா அன்புமணி, பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றிருந்தார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி பாமக அன்புமணி தரப்பு இணைந்து போட்டியிடுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஆனால் இம்முறை ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையிலான மோதல் காரணமாக, பாமக அன்புமணி தரப்புக்கு 18 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்ய சபா சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கனவே அன்புமணி ராஜ்ய சபா எம்பியாகிவிட்ட சூழலில், 2 நாட்களுக்கு முன்பாக தொகுதி பங்கீடு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதனிடையே பாமக தரப்பில் இம்முறை செளமியா அன்புமணி களமிறங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ஏற்கனவே லோக்சபா தேர்தலின் போது தர்மபுரி தொகுதியில் பாமக சார்பாக செளமியா அன்புமணி போட்டியிட்டிருந்தார்.
அதில் செளமியா அன்புமணி தர்மபுரி தொகுதியில் சுமார் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இருப்பினும் பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் செளமியா அன்புமணி சுமார் 83 ஆயிரம் வாக்குகளை பெற்றிருந்தார். இம்முறை அதிமுக உடன் கூட்டணி அமைத்திருப்பதால், செளமியாவின் வெற்றி எளிதாக அமையும் என்று கருதப்படுகிறது.
இருந்தாலும் திருப்போரூர் தொகுதி தான் செளமியா அன்புமணியின் முதன்மை சாய்ஸாக இருப்பதாக தெரிகிறது. திருப்போரூர் தொகுதியை பொறுத்தவரை பாமகவுக்கு செல்வாக்கு உள்ள தொகுதியாகும். கடந்த முறை பாமக சார்பாக ஆறுமுகம் போட்டியிட்டு சுமார் 2 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
இந்த தொகுதியில் விசிக சார்பாக போட்டியிட்ட எஸ்.எஸ். பாலாஜி, வெற்றி பெற்று எம்எல்ஏ ஆகினார். இதனால் செளமியா அன்புமணியின் சாய்ஸ் எதுவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஒருவேளை செளமியா அன்புமணியின் சாய்ஸ் திருப்போரூர் தொகுதியாக இருந்தாலும், பாப்பிரெட்டிபட்டி தொகுதியில் பாமக சார்பாக அரசாங்கம் என்பவர் போட்டியிடக் கூடும் என்று கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications