36 மணி நேரத்தில் இன்ப அதிர்ச்சி.. முதல்வர் ஸ்டாலினுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த எஸ்.பி.பி சரண்!
சென்னை: மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வாழ்ந்த சென்னை காம்தார் நகரின் முதன்மை சாலைக்கு, "எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை" எனப் பெயரிடப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், எஸ்பிபியின் மகன் எஸ்.பி.பி. சரண் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமையாகத் திகழ்ந்தவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உலகெங்கிலும் ரசிகர்களின் அபிமானம் பெற்ற எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா தொற்று பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த காம்தார் நகரை, 'எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்' என பெயர் மாற்றம் செய்யக் கோரி அவரது மகன் எஸ்.பி.பிசரண், தமிழக முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்திருந்தார். இந்த சூழலில், எஸ்.பி.பி.சரணின் கோரிக்கையை ஏற்று காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு 'எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயர் சூட்டப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், "பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி, தன்னுடைய அமுதக் குரலால் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக இசை மழை பொழிந்ததோடு, பல படங்களுக்கு இசையமைத்தும், திரைப்படங்களில் நடித்தும், பல்துறை வித்தகராக விளங்கியவரும், மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் விருதுகள் பெற்றவரும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் அன்பிற்குரியவருமான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த 25-9-2020 அன்று நம்மை விட்டுப் பிரிந்தார்.
காலம் அவரைப் பிரித்தாலும், நம் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பெற்றவர் அவர். அன்னார் தமிழ்த் திரையுலகிற்கு ஆற்றிய சேவையைப் போற்றும் வகையிலும், அவரின் புகழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையிலும், அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு 'எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சாலை' எனப் பெயரிடப்படும்" என அறிவித்தார்.
இந்த நிலையில், மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ள சென்னை காம்தார் நகர் மெயின் ரோட்டிற்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை' என பெயர் சூட்டப்படும் என்று அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எஸ்.பி.பி. சரண் வீடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் பேசியுள்ள எஸ்.பி.பி.சரண், "அப்பாவின் இந்த நினைவு நாள் மறக்க முடியாத நாளாக அமைந்துள்ளது. 2 நாட்களுக்கு முன்பு தலைமைச் செயலகம் சென்று ஒரு மனு கொடுத்திருந்தேன். காம்தார் நகரில் அப்பா வசித்த தெருவுக்கு அப்பாவின் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தேன். முதல்வர் மிக முக்கிய அலுவல்களில் இருந்ததால் அவரைச் சந்திக்க முடியவில்லை.
36 மணி நேரத்துக்குள், அப்பாவின் நினைவு நாளன்றே, அவர் வசித்த வீடு உள்ள சாலைக்கு எஸ்பிபி சாலை என பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. இந்த அருமையான தருணத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சாமிநாதன் என மொத்த அரசாங்கத்திற்கும் என் குடும்பத்தின் சார்பில் மிகுந்த நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications