எவ்வளவு பெருந்தன்மை.. கன்னியமான அரசியல்.. ஸ்டாலினை பாராட்டியபடியே சபாநாயகர் சொன்னது தான் ஹைலைட்
சென்னை: அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் உள்பட 4 பேரை நீக்கி எடப்பாடி பழனிசாமி கொடுத்த கடிதம் ஆய்வில் இருப்பதாக கூறிய சபாநாயகர் அப்பாவு, எதிர்க்கட்சியாக இருந்தாலும், அந்தக்கட்சி உள் விவகாரங்களில் தலையிடுவது நாகரிகம் இல்லை என்று சொல்லி ஒரு நாகரிகமான, ஜனநாயக முறையில் பண்பான, ஒரு கண்ணியம்மிக்க அரசியலையும் முதல்வர் நடத்தி வருவதாக பாராட்டினார்.
சட்டசபையில் நேற்று சபாநாயகர் அப்பாவு பேசும் போது, இந்த மாமன்றத்தில், காவல்துறை மானியக்கோரிக்கையில் நடைபெற்ற விவாதம், உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியதாகும். ஜனநாயகத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் அனைவராலும் மகிழ்ச்சியடையக்கூடியதாகும்.. அரசின் மீது குற்றங்களைச் சொல்வதற்காகத்தான் எதிர்க்கட்சிகள் உள்ளன என்பதை கலைஞர் கருணாநிதிக்கு, பிறகு இந்தச் சட்டசபையில் உண்மையாக்கிய பெருமை நம்முடைய முதல்வரையே சாரும்.

எல்லோருமே இங்கே, தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், அரசியல் கட்சிகள் மூலமாகத்தான் நாம் வந்திருப்போம். அரசியல் கட்சிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அரசியல் தலைவர்கள் தோழமைக் கட்சியாக இருந்தாலும், இதரக் கட்சிகளாக இருந்தாலும் அவர்களை எவ்வாறு நடத்துவார்கள் என்றால், அன்றாடம் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
முதல்வர் பொறுமையாக, பெருமையாக ஆளுங்கட்சிக்கு தோழமையாக இருக்கின்ற, தோழமைக் கட்சிகளையும் அன்போடு அரவணைத்து, அவர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து, அவர்களுடைய கொள்கைக்கு ஒருபோதும் எதிர்க்கருத்து சொல்லாத ஒரு முதல்வர் இருக்கிறார் என்றால் நம்முடைய முதல்-அமைச்சர் தான். அதைவிட சிறந்தது எதிர்க்கட்சிகளுக்கு ஏதேனும் இடைஞ்சல் செய்யவேண்டுமென்று ஒருபோதும் எண்ணியது இல்லை. அவர்களையும் முழுமையாக பேச அனுமதித்த பெருமைக்குரிய ஒரு முதல்வர்.
எதிர்க்கட்சிகள் சில சந்தர்ப்பங்களில் ஏதேனும் நிகழ்வு ஏற்பட்டு, அவர்களுக்கு இடைஞ்சல் செய்கின்ற அளவிற்கு ஏதேனும் வாய்ப்பு ஏற்பட்டால் எல்லோரும் பயன்படுத்துவார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின், அவ்வாறு நிலை ஏற்பட்டு, எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உறுப்பினர்கள் அய்யப்பன், மனோஜ் பாண்டியன், ஆர்.வைத்திலிங்கம் போன்றோர்களை அவர்கள் இயக்கத்திலிருந்து நீக்கியதாக ஒரு தபால் தந்திருக்கிறார். அது என்னுடைய ஆய்வில் இருக்கிறது.
சரியாக அவர்களை பழிவாங்க வேண்டுமென்று சில அரசியல் தலைவர்கள் நின்றால், அ.தி.மு.க.-1, அ.தி.மு.க.-2 என்று அவர்களைப் பிரித்துக் கொடுத்து, எவ்வளவு இடையூறு செய்ய முடியுமோ அவ்வளவு செய்யலாம். ஒரு காலத்தில் 'ஜா' அணி, 'ஜெ' அணி என்றெல்லாம் இருந்ததை முதல்-அமைச்சர் மறந்திருக்க மாட்டார்.
எவ்வளவு பெருந்தன்மையாக, அது எதிர்க்கட்சியாக இருந்தாலும், அந்தக்கட்சி உள் விவகாரங்களில் தலையிடுவது நாகரிகம் இல்லை என்று சொல்லி ஒரு நாகரிகமான, ஜனநாயக முறையில் பண்பான, ஒரு கண்ணியம்மிக்க அரசியலையும் நடத்தி, ஆட்சியையும் நடத்துகின்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இந்த பேரவையின் சார்பாக நன்றியோடு பாராட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்" இவ்வாறு சபாநாயகர் அப்பாவு சட்டசபையில் பேசினார்.












Click it and Unblock the Notifications