நாளை கந்த சஷ்டி சூரசம்ஹாரம்! திருச்செந்தூருக்கு எங்கிருந்து சிறப்பு ரயில்கள்? முழு விவரம்!
சென்னை: கந்தசஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி நெல்லை மற்றும் தாம்பரத்தில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இன்றும் நாளையும் இயக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் நாளை (அக்.27) நடைபெறுகிறது. இந்த முக்கிய நிகழ்வை காண பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள்.
அவர்களின் வசதிக்காக மதுரை கோட்ட ரயில்வே சார்பில் நெல்லை- திருச்செந்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அதன்படி, இந்த சிறப்பு ரயில் (வ.எண்.06106) திருச்செந்தூரில் இருந்து நாளை (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு, இரவு 10.30 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், இந்த ரயில் (வ.எண்.06105) நெல்லையில் இருந்து நாளை நள்ளிரவு 11 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12.30 மணிக்கு திருச்செந்தூர் ரயில் நிலையம் சென்றடைகிறது.இந்த ரெயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருச்செந்தூரில் இருந்து நெல்லைக்கு இயக்கப்படும் ரயில் மட்டும் பாளையங்கோட்டை ரெயில் நிலையத்திலும் நின்று செல்லும். ரெயிலில் 10 பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தாம்பரத்தில் இருந்து ஒரு சிறப்பு கட்டண ரயில் (வ.எண்.06135) இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. காலை 8 மணிக்கு நெல்லை ரயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில், இந்த சிறப்பு கட்டண ரயில் (வ.எண்.06136) திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து நாளை இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 11.45 மணிக்கு நெல்லை ரயில் நிலையத்தையும், நள்ளிரவு 2.10 மணிக்கு மதுரை ரயில் நிலையத்தையும் சென்றடைகிறது. மறுநாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் சென்றடைகிறது.
இந்த ரயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். திருச்செந்தூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். ரயிலில் ஒரு குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டி, 11 இரண்டாம் வகுப்பு உட்காரும் பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள் மற்றும் 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த சூரசம்ஹாரத்தை பக்தர்கள் சிரமமின்றி காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பக்தர்களும் கோயில் வளாகத்தில் தங்கி விரதம் இருந்து வருகிறார்கள். சூரசம்ஹார நிகழ்வுக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி எம்பி கனிமொழி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.












Click it and Unblock the Notifications