"பேக்கிரவுண்டை விசாரிங்க! FIR போடுங்க!" கண்டித்த நீதிபதி! ஆதவ் அர்ஜுனா கைது செய்யப்படுகிறாரா?
சென்னை: சர்ச்சைக்குரிய பதிவை போட்ட தவெக தேர்தல் மேலாண்மை பிரிவின் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் பின்புலத்தை விசாரியுங்கள் என ஹைகோர்ட் நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில் சென்னையில் வந்த அவரிடம் காவல் துறை விசாரணை நடத்துமா அல்லது அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய், கரூர் வேலுச்சாமிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகிவிட்டனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இந்த சம்பவத்தில் தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்திருந்த நிலையில் டெல்லிக்கு ஆதவ் அர்ஜுனா சென்றார். அதாவது இரண்டாம் கட்ட தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்து வரும் நிலையில் ஆதவ்வும் டெல்லி சென்றுவிட்டார்.
அவர் மீது வழக்குப் பதிவு செய்யாவிட்டாலும் வழக்கு விசாரணையின் போது காவல் துறை தங்கள் தரப்பு வாதத்தில், "கூட்டம் அதிகமாக இருப்பதால் பிரச்சார வாகனத்தை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த சொன்னோம். ஆனால் ஆதவ் அர்ஜுனாதான் முன்னுக்கு போக சொன்னார்" என குற்றம்சாட்டியிருந்தார்.
விஜய்யையும் தமிழக வெற்றிக் கழகத்தையும் அரசியல் கட்சிகள் விமர்சித்த நிலையில் சம்பவம் நடந்து 3 நாட்கள் கழித்து ஆதவ் அர்ஜுனா தனது பதிவில் கூறியிருப்பதாவது: "சாலையில் நடந்து சென்றாலே தடியடி... சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது.... இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
இளைஞர்களும், ஜென் இசட் தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்திற்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ அதே போல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்திற்கான முடிவுரையாகவும் இருக்கப்போகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்!" என்று தெரிவித்துவிட்டு கண்டனங்கள் எழுந்த நிலையில் அந்த பதிவை ஆதவ் நீக்கினார்.
இந்த நிலையில் ரோடு ஷோக்களை நடத்த வழிகாட்டும் நெறிமுறைகளை வகுக்கக் கோரிய மனுவை விசாரித்த ஹைகோர்ட் நீதிபதி செந்தில்குமாரிடம் ஆதவ்வின் பதிவு காட்டப்பட்டது. அதை பார்த்த நீதிபதி, "ஒரு சின்ன வார்த்தையும் பெரிய பிரச்னை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா?.
புரட்சி ஏற்படுத்துவது போல கருத்துகளை பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில், பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல்துறை கவனத்துடன் வழக்கு பதிவு செய்து, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என தெரிவித்திருந்தார்.
ஆதவ் அர்ஜுனா டெல்லியில் இருந்து சென்னை வந்துள்ள நிலையில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்துவார்களா, வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications