பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்கப்போகிறதா? நைசாக நழுவிய கேபி முனுசாமி, தங்கமணி!
சென்னை: தமிழகத்தில் மீண்டும் பாஜக அதிமுக கூட்டணி அமையுமா என்பது பேசுபொருளாக மாறி இருக்கிறது. அதிமுக தலைமையை ஏற்றுக் கொள்ளும் அனைத்து கட்சிகளையும் கூட்டணிக்கு வரவேற்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தார். இந்த நிலையில் கூட்டணி குறித்து பேசுவது ரகசியம் எனவும், தற்போதைக்கு எதுவும் கூற முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர்களான கேபி முனுசாமி தங்கமணி ஆகியோர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளிக்காமல் நழுவியுள்ளனர்.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தமிழக அதிமுக-பாஜக கூட்டணி முறிந்ததால் தான் இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் அண்ணாமலை தான் என சமூக வலைதளங்களில் பாஜகவினர்
சிலரே விமர்சித்து இருந்தனர்.

அதிமுக பாஜக பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவாகி இருந்தால் பெரிய அளவிலான வெற்றி கிடைத்திருக்கும் குறைந்தது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது பெற்றிருக்கலாம் என பேசப்பட்டது. அதற்கு முன்னதாக அதிமுக - பாஜக கூட்டணி இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கூட்டணி தொடர்பாக பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி அண்ணாமலையின் பேச்சு காரணமாக கூட்டணி அமையாமல் போனது.. இதனால் தான் பாஜக கடும் தோல்வியை சந்தித்தது என கூறியிருந்தார். அவரது கருத்தை தமிழிசை சௌந்தரராஜன் வரவேற்று பேசியிருந்தார். குறிப்பாக கட்சியில் ரவுடிகள் இருப்பதாக தமிழிசை பேசியது கட்சிக்குள் மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதனால் அண்ணாமலை ஆதரவாளர்கள் அவரை மிகக் கடுமையாக விமர்சித்தனர்.
தற்போது தமிழக பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை அரசியல் தொடர்பான படிப்புக்காக லண்டன் சென்றிருக்கிறார். இதன் காரணமாக கட்சி பணிகளை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா தலைமையிலான குழு கவனித்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமையுமா என தமிழக அரசியலில் விவாதம் எழுந்திருக்கிறது. இதற்கு காரணம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுதான்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,” பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படுமா என்றும் கேட்கிறீர்கள். ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைந்து திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு. யார் யார் எங்களுடன் கூட்டணிக்கு வருகின்றார்களோ அவர்கள் எல்லாம் ஒத்த கருத்து உடையவர்கள் தான். தேர்தல் நேரத்தில் அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். திமுக ஆட்சியை வீழ்த்த அதிமுக தலைமையை ஏற்கக்கூடிய ஒத்த கருத்துடைய கட்சிகளை ஒன்றிணைத்து செயல்படுவோம்" என பேசியிருந்தார்.
இதனால் தமிழகத்தில் மீண்டும் அதிமுக பாஜக கூட்டணி உருவாகி தேர்தலை சந்திப்பார்கள் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் அக்கட்சியின் ஜெயக்குமாரோ பாஜகவுடன் கூட்டணி இல்லை என திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் மற்ற நிர்வாகிகள் மழுப்பலான பதிலையே அளித்திருக்கின்றனர்.
இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் கள ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கேபி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின் வெளியே வந்த கேபி முனுசாமியிடம், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற முந்தைய நிலைப்பாட்டில் அதிமுக உறுதியாக இருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால்
'அதெல்லாம் ரகசியம் எதுவாக இருந்தாலும் இன்று நடந்த நிகழ்ச்சியை பற்றி மட்டும் கேளுங்கள்.. கூட்டணி தொடர்பாக எதுவும் பேச முடியாது’ என பேச மறுத்துவிட்டார்.
இதே போன்ற பதிலைத்தான் தங்கமணியும் தெரிவித்திருந்தார் கூட்டணி தொடர்பாக ஜெயக்குமாரின் கருத்து தெளிவாக இருக்கும் நிலையில் மற்ற முன்னாள் அமைச்சர்கள் முரண்பட்ட, மழுப்பலான பதிலை கூறியிருக்கின்றனர், இதனால் நிச்சயம் பாஜக அதிமுக கூட்டணி தொடர்பான விவாதம் மீண்டும் அதிமுகவில் எழுந்திருக்கிறது என்கின்றனர் சீனியர்கள்.












Click it and Unblock the Notifications