கடல் கடந்தும் கொடி நாட்டிய கேப்டன்.. விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய இலங்கை ஆளுநர்
சென்னை: கேப்டன் விஜயகாந்த் நேற்று காலமான நிலையில், அவரது உடலுக்குப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் திரையுலகத்தில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் விஜயகாந்த்... ரஜினி, கமல் தமிழ் திரையுலகை ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், அவர்களைத் தாண்டி விஜயகாந்த் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

அதேபோல அரசியலிலும் தேமுதிக என்ற கட்சியைத் தொடங்கி எதிர்க்கட்சி தலைவராகவும் அவர் ஆனார். இருப்பினும், சில ஆண்டுகளாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அவர் பொது வாழ்க்கையில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
கேப்டன் விஜயகாந்த்: இதற்கிடையே கேப்டன் விஜயகாந்த் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் மருத்துவமனையில் அட்மிட் ஆன நிலையில், அவர் நிமோனியா பாதிப்பால் உயிரிழந்தார். அவரது உடலுக்கு பலரும் இரங்கல் தெரிவித்தும் நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். சென்னையில் மிகப் பெரிய மக்கள் கூட்டம் திரண்டுள்ளது. இதற்கிடையே விஜயகாந்த்திற்கு இலங்கை மாகாண ஆளுநர் நேரில் வந்து விஜயகாந்த்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஆளுநர் அஞ்சலி: விஜயகாந்த் தமிழ் சினிமாவில் மட்டும் நடித்தாலும் கூட தமிழ்நாட்டைத் தாண்டியும் அவருக்கு ரசிகர்கள் பலர் இருந்தனர். குறிப்பாக இலங்கையில் தமிழர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இதன் காரணமாக கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரில் அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்திய அவர், பின்னர் பிரேமலதா மற்றும் அவரது மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.

முன்னதாக இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், "உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் மனவேதனை அடைந்தேன். விஜயகாந்த் மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்த மனிதர். விஜயகாந்த்துடன் பல முறை ஏற்பட்ட சந்திப்பின் போது அவருடைய எண்ணங்களிலும் செயல்களின் ஊடாகவும் அவர் ஒரு போற்றப்பட வேண்டிய தலைவர் என்பதை நான் அறிந்தேன்.
அதீத அன்பு கொண்டவர்: வருக்கும் அஞ்சாது மக்களுக்காக உடனுக்குடன் சேவையைச் செய்யும் அரசியல் தலைவர். மேலும் இலங்கை மக்கள் மீது அதீத அன்பு கொண்டவர். இலங்கையில் இருந்து அகதிகளாக வந்த மக்களுக்காகப் பல உதவிகளைச் செய்துள்ளார். பாமர மக்களுக்கு விருந்தோம்பல் செய்வதில் ஈடு இணையற்றவர். இவருடைய இழப்பு தமிழக மக்களுக்கு ஓர் பேரிழப்பாகும்.
நடிகர் விஜயகாந்த்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
நல்லடக்கம்: விஜயகாந்த் உடல் இப்போது தீவுத்திடலில் இருந்து கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. தீவுத்திடலில் இருந்து அவரது உடல் எடுத்துச் செல்லப்படும் நிலையில், இரு புறமும் திரண்டு இருக்கும் ரசிகர்கள் அவரது உடல் இருக்கும் வாகனத்தை நோக்கி மலர்களைத் தூவி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுக்க கடுமையான டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications