திமுகவில் முக்கிய மாற்றம்.. அச்சத்தில் மா.செக்கள்! உதயநிதி & டீம் உடன் ஆலோசித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: 2026 சட்டசபை தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டுள்ளார். கட்சியில் அமைப்பு நீதியாக சீரமைப்பை மேற்கொள்வது பற்றி ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. வரும் 2026 தேர்தலிலும் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற உறுதியுடன் திமுக உள்ளது. இதையடுத்து, மக்களவை தேர்தல் முடிந்ததுமே, தற்போது சட்டப்பேரவை தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைத்துள்ளார்.
இக்குழுவில், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இளைஞரணி செயலாளராக உள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவி வழங்கப்படும் என்ற பேச்சுகள் எழுந்த நிலையில், அடுத்த சட்டப்பேரவை தேர்தலை ஒருங்கிணைக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக ஒருங்கிணைப்புக் குழுவினர் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதையடுத்து, ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், குழுவின் அடுத்தக்கட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி நிலவரங்களை அறிவது, சிட்டிங் எம்எல்ஏவின் பணிகள், அந்தந்த தொகுதிகளில் கட்சியினர் மற்றும் மக்களின் மனநிலை அறிய முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அமைப்பு ரீதியாக மாவட்டங்களின் எண்ணிக்கையை உயர்த்த திமுக தலைமை திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கான அடிப்படை பணிகளை இந்தக் குழு மேற்கொள்ள உள்ளதாகவும், சட்டசபை தொகுதிகள் அடிப்படையில் பிரித்து பணியாற்றும் வகையில் மாவட்ட செயலாளர்களை அழைத்து, அவர்களிடம் கருத்து கேட்கவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தலுக்கான திமுக ஒருங்கிணைப்புக் குழுவுடன் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், கட்சியில் அமைப்பு நீதியாக சீரமைப்பை மேற்கொள்வது பற்றியும் ஆலோசித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுகவில் அமைப்பு ரீதியாக மாவட்டங்களின் எண்ணிக்கையை அதிகரித்து புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது பற்றி ஆலோசித்துள்ளதாக தெரிகிறது. மாவட்டங்கள் பிரிக்கப்பட்டால், பல மாவட்ட செயலாளர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications