"எனக்கும் மரணம் வரும்.. என்னைப் புதைத்தாலும் எனது திட்டங்களைப் புதைக்க முடியாது” - முதல்வர் ஸ்டாலின்
சென்னை: "யாராக இருந்தாலும் நிச்சயம் ஒரு நாள் மரணம் வரும். இந்த ஸ்டாலினுக்கும் நிச்சயம் மரணம் வரும். ஆனால், நான் கொண்டு வந்துள்ள திட்டங்கள் இருக்கும்வரை இந்த ஸ்டாலின் தமிழ்நாட்டை ஆள்வான்" என எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது. 164 தொகுதிகளில் திமுக நேரடியாக களமிறங்குகிறது. மேலும் தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 176 வேட்பாளர்கள் திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தின் கீழ் போட்டியிடுகின்றனர். அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் இன்று சென்னையை அடுத்த மறைமலைநகரில் நடந்த மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கான பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வாக்கு சேகரித்தார். அப்போது, "கொரோனா காலத்தில் ஸ்டாலின் போயிருப்பார்" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு பதில் கொடுத்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், "இதுவரை அவதூறுகளை மட்டுமே பேசி வந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போது என் மரணத்தை விரும்பி பேசியுள்ளார். மாதந்தோறும் 1 கோடியே 31 லட்சம் மகளிருக்கு உரிமைத் தொகை கொடுத்து துணை நிற்கும் நான் இல்லாமல் போக வேண்டுமாம். முதல் நாள் முதல் கையெழுத்திட்டு, மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்திற்கு உத்தரவிட்ட இந்தக் கை மண்ணுக்குள் போகவேண்டுமாம்.
தமிழ்நாட்டு குழந்தைகள் படித்து முன்னேற காலை உணவு, புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற திட்டங்களை நிறைவேற்றி, அவர்களின் வெற்றியை மனதார கொண்டாடும் நான் கொரோனாவில் போயிருக்க வேண்டுமாம். மரணத்தை சந்திக்காத எந்த மனிதனும் உலகத்தில் இல்லை. யாராக இருந்தாலும் நிச்சயம் ஒரு நாள் மரணம் வரும். இந்த ஸ்டாலினுக்கும் நிச்சயம் மரணம் வரும். மண்ணில் புதைப்பார்கள். ஆனால், இந்த ஸ்டாலின் கொண்டு வந்துள்ள திட்டங்களை மண்ணில் புதைக்கும் துணிச்சல் ஒருவருக்கும் வராது என்பதை சவால்விட்டு சொல்கிறேன். இந்தத் திட்டங்கள் இருக்கும்வரை இந்த ஸ்டாலின் தமிழ்நாட்டை ஆள்வான்.
1971ல் திமுகவின் கொங்கு மண்டல மாணவரணி மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில், 18 வயது இளைஞனான நான், 'மொழிக்காக, நம் இனத்திற்காக போராடுகிறோம். இதில் நம் உயிரை இழக்கும் தியாகத்திற்கும்கூட காத்திருக்கிறோம். கலைஞருக்கு 4 ஆண் பிள்ளைகள்; அதில் ஒருவன் காலமாவதால் நிச்சயம் என் தந்தை கவலையடையமாட்டார். காரணம் மொழிக்காக, இனத்திற்காக தனையனை இழந்த தந்தை என என் தந்தைக்கு பாராட்டு கிடைக்கும்' எனப் பேசினேன்.
இதுவெல்லாம் அரசியல் அழுக்காக இருக்கும் பழனிசாமிக்கு தெரியுமா? இவ்வளவும் பேசிவிட்டு பழனிசாமி இன்று காலை, 'நான் அப்படி பேசவில்லை. கொரோனா காலத்தில் ஸ்டாலின் காணாமல் போனார் என்று தான் பேசினேன்' என பல்டி அடித்து அடுத்த பொய்யை பேசியிருக்கிறார்" எனப் பேசியுள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இங்கு எங்கு பார்த்தாலும் தொழிற்சாலைகள். இளைஞர்களுக்கு எங்கு பார்த்தாலும் வேலைவாய்ப்புகள், இதனையெல்லாம் கொண்டுவந்தது யார்?. இதனைக் கொண்டு வந்தது திமுக. அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு காஞ்சிபுரமும், செங்கல்பட்டும் ரெடியாக இருக்கிறீர்களா? இன்றைக்கு பாதி தமிழ்நாட்டை சுற்றி வந்துவிட்டு மூன்றாம் கட்ட பயணத்தை நாளை நான்காம் கட்ட பயணத்தைத் தொடங்க விருக்கிறேன்.
ஒவ்வொரு நொடியும் தமிழ்நாட்டில் தலையெழுத்தைத் தீர்மானிக்க யோசித்துக் கொண்டே இருக்கிறேன். டெல்லியின் ஆணவத்திற்கு அடிபணியக் கூடாது என்று வெயிலையும் பொருள்படுத்தாமல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் வந்து கலந்து கொண்டிருக்கிறீர்கள். நான் கொண்டுவந்த திட்டங்களை மண்ணில் புதைக்கும் துணிச்சல் யாருக்கும் இல்லை. நீங்கள் என்னைப் புதைத்தாலும், என்னுடைய திட்டங்களைப் புதைத்திட முடியாது." எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications