கருணாநிதி பற்றிய குறும்படம்.. விர்ச்சுவல் ரியாலிட்டியில் பார்த்து ரசித்த முதல்வர் ஸ்டாலின்!
சென்னை: விர்ச்சுவல் ரியாலிட்டியில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய குறும்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.
சென்னை பாரிமுனையில் உள்ள இராஜா அண்ணாமலை மன்றத்தில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளருமான பி.கே.சேகர்பாபு ஏற்பாட்டில் “காலம் உள்ளவரை கலைஞர்” என்ற கண்காட்சி மே 1ஆம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது.

இந்த கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். அப்போது, அவருடன் சேர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பார்வையிட்டனர். மேலும், திரைப்பட பாடலாசியர் பா.விஜய் மற்றும் திரைப்பட இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோரும் இந்த கண்காட்சியை பார்வையிட்டனர்.
பிரம்மாண்ட அரங்கத்தில் மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் திருவாரூரில் ஆரம்பித்து சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை என 140-க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
மேலும் கலைஞரின் வயதில் அவரது நாற்பதுகளை பிரதிபலிக்கும் தோற்றத்தில், ஹாலோகிராபி தொழில்நுட்பம் மூலம் நேரடியாகப் பார்க்கும் வகையில் வழி செய்துள்ளனர். மேலும் மெழுகு உருவச் சிலையாக இடம்பெற்றுள்ள கலைஞர் செல்பி பாயிண்டில் பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர். முதல்வர் ஸ்டாலினும் இன்று புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
மேலும், முப்பரிமாண கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட கலைஞரின் வரலாற்று காவியம் என்ற குறும்படத்தை ஹாலோகிராபி தொழில்நுட்பத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி அடிப்படையில் காணவும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கலைஞர் வரலாற்று குறும்படத்தை, விர்ச்சுவல் ரியாலிட்டிக்கான உபகரணங்களை அணிந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்த்து ரசித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோரும் கலைஞர் குறும்படத்தை கண்டு ரசித்தனர்.
இந்த கண்காட்சியை பார்வையிட்ட முதலமைச்சர் ஸ்டாலின், அங்குள்ள கண்காட்சி நிகழ்வுகளை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். தொடர்ந்து, கண்காட்சி ஏற்பாட்டாளர்களை மு.க.ஸ்டாலின் கவுரவித்தார் முதல்வர் ஸ்டாலின். ஜூன் 1 அன்று தொடங்கிய இந்த புகைப்படக் கண்காட்சி, நாளை வரை நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications