“ஊர்ந்து தவழ்ந்து.. பேச்சை விட்டிருக்கலாம்.. தானா வந்து மாட்டிக்கிட்டாங்க”.. கிண்டல் செய்த ஸ்டாலின்
சென்னை: "ஊர்ந்து, தவழ்ந்து பேச்சை அப்படியே விட்டிருக்கலாம், தானா வந்து மாட்டிக்கிட்டாங்க" என திருமண விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இறுதி நாளான நேற்று (ஏப்ரல் 29) காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான மானியக் கோரிக்கை தொடர்பான கேள்வி - பதில் விவாதங்கள் நடைபெற்றன. அப்போது எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. அரசு தலை நிமிர்ந்து இருக்கிறதா என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும் என்று பேசியிருந்தார்.

அதற்கு முதல்வர் ஸ்டாலின், "கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ஊர்ந்துதான் சென்றது" என்று பதிலடி கொடுத்தார். 'ஊர்ந்து' என்ற வார்த்தையால் கோபமடைந்த அதிமுகவினர் சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டு அந்த வார்த்தையை நீக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை வைத்தனர்.
ஊர்ந்து, தவழ்ந்து
இது சட்டப்பேரவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் எழுந்து, "ஊர்ந்து, தவழ்ந்து என்று நான் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. அது ஒன்றும் அன்-பார்லிமென்ட் வார்த்தை அல்ல. அது உங்களுக்கு உறுத்தியிருந்தால், எதையோ குறிப்பிடுவதாக நீங்கள் நினைத்தால் அந்த வார்த்தையை நீக்கிவிடலாம். சபாநாயகர் அவர்களே 'ஊர்ந்து' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'தவழ்ந்து' என்று போட்டுக்கொள்ளுங்கள்" என்று பதில் அளித்தார்.
தானாக வந்து மாட்டிக்கிட்டாங்க
இந்நிலையில் இன்று சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், "கடந்த காலங்களில் ஊர்ந்து கொண்டிருந்த தமிழகம் இன்று கம்பீரமாக நடந்து செல்கிறது. இதை நான் சட்டசபையில் பேசும்போது அப்படியே கடந்து சென்று இருக்கலாம். ஆனால் அவர்கள் தானாக வந்து சிக்கிக் கொண்டனர். எதிர்க்கட்சி துணை தலைவர் ஊர்ந்து என்று சொல்ல வேண்டாம் என்றார். நான் தவழ்ந்து என போட்டுக்கொள்ளுமாறு கூறினேன்.
தற்போது, தவழ்ந்து, தவழ்ந்து முதல்வர் ஆனேன் என பழனிசாமி கூறி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எஸ்.டி.பி.ஐ மாநாட்டில் எடப்பாடி பழனிச்சாமி எப்படி எல்லாம் முதலமைச்சர் பதவிக்கு வந்தேன் என்று கூறும்போது, தவழ்ந்து தவழ்ந்து படிப்படியாக வந்து முதலமைச்சர் பதவிக்கு வந்தேன் என்று அவரே பேசியிருக்கிறார். இதை நான் நேற்று தான் பார்த்தேன். முன்பே பார்த்திருந்தால் இதையும் சட்டமன்றத்தில் சொல்லி இருப்பேன்." எனப் பேசியுள்ளார்.
ஒரு கை பார்ப்போம்
மேலும் பேசிய முதல்வர் ஸ்டாலின், "உலகிற்கு வழிகாட்டும் அளவிற்கு சிறப்பான ஆட்சியை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம். நாங்கள் நிச்சயமாக உறுதியாக, நம்மை எதிர்க்க கூடியவர்கள், எந்த நிலையில் வந்தாலும் சரி, எப்படி கூட்டணி வைத்து கொண்டு வந்தாலும் சரி, ஒரு கை பார்ப்போம் என்ற உணர்வோடு தான் தங்களது கடமைகளை ஆற்றிக்கொண்டு இருக்கிறோம்.
எதையும் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200 தொகுதி என்ன 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அது, வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆக இருந்தாலும் கவலையில்லை. நாம் நெருக்கடியை பார்த்து வளர்ந்துள்ளோம். நீங்கள் நெருக்கடியை ஆதரிக்க வேண்டாம். எதிர்க்காமல் இருக்க வேண்டும். திமுகவின் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறோம். 7வது முறையாக திமுக ஆட்சி அமையும்" எனப் பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications