"தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன்".. 1 கோடி குடும்பங்கள் உறுதிமொழி ஏற்க அழைப்பு விடுத்த ஸ்டாலின்
சென்னை: மு.க. ஸ்டாலின் தலைமையில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் 1 கோடி குடும்பங்கள் செப்டம்பர் 15 அன்று உறுதிமொழி ஏற்க, 68000 பூத் வாரியாக நிகழ்ச்சி நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் பாசிச பாஜகவினர் பிரிவினையின் பெயரால் கால் ஊன்றிட விடாமல் தடுக்கவும், தமிழ்நாட்டு உரிமைகளை நிலைநாட்டவும், உறுதிமொழி ஏற்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில், 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். ஜூலை 3 ஆம் தேதி சென்னை, ஆழ்வார்பேட்டையில் மக்களை நேரடியாக சந்தித்து தொடங்கி வைத்தார் ஸ்டாலின்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுக நிர்வாகிகள், வீடு வீடாகச் சென்று, மக்களைச் சந்தித்து கட்சியில் உறுப்பினர்களாகச் சேர்த்து வருகின்றனர். இந்நிலையில், ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். இந்நிலையில், செப்டம்பர் 15 ஆம் தேதி திமுக சார்பில் உறுதிமொழி எடுத்துக்கொள்ள உள்ளனர்.
இது குறித்து, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் மண் - மொழி - மானம் காக்க நமது 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் (செப்டம்பர்15) தமிழ்நாடெங்கும் 68,000+ பூத் வாரியாக முன்மொழியவுள்ள உறுதிமொழி:
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள 1 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினரும் சேர்ந்து, 'தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்!' என உறுதியேற்போம்!
நான், தமிழ்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விகிதாசாரத்தைக் குறைக்கும் நியாயமற்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராகப் போராடுவேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், வாக்காளர் பட்டியல் மோசடி மூலம் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கும் சிறப்பு வாக்காளர் திருத்தப் பட்டியல் (SIR)-க்கு எதிராக நிற்பேன்; தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், நீட் மற்றும் இளைஞர்களை முடக்கும் எந்தவொரு திட்டத்தையும் எதிர்த்து நிற்பேன், நம் மாணவர்களுக்கு உரிய கல்வி நிதிக்காகப் போராடுவேன்; ஒருபோதும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், தமிழ் மொழி, பண்பாடு மற்றும் பெருமைக்கு (நன்மதிப்பிற்கு) எதிரான எந்தவொரு பாகுபாட்டையும் எதிர்த்துப் போராடுவேன். எதற்காகவும் தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
நான், "பெண்கள் - விவசாயிகள் - மீனவர்கள் - நெசவாளர்கள் - தொழிலாளர்கள்' என ஒவ்வொரு உழைக்கும் வர்க்கத்தின் நலன்களையும் பாதுகாக்கத் தேவையான நிதிக்காகப் போராடுவேன். தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டேன் என உறுதி ஏற்கிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications