கட்டில் -பீரோ -மிக்ஸி -பாத்திரங்கள்! சீர் வரிசையுடன் 34 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்த ஸ்டாலின்!
சென்னை: இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 34 இணைகளுக்கான திருமணங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்திருக்கிறார்.
ஒவ்வொரு ஜோடிக்கும் கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி, பாத்திரங்கள் என 50,000 ரூபாய் மதிப்புள்ள சகல விதமான சீர்வரிசைப் பொருட்களை வழங்கிய அவர் மணமக்களை அழைத்து தன்னுடன் தனித்தனி புகைப்படம் எடுத்துக்கொள்ள வைத்தார். மேலும், அந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது;

''என்னால் 'செயல்பாபு' 'செயல்பாபு' என்று அழைக்கப்படக்கூடிய அமைச்சர் சேகர்பாபு முன்னின்று இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்திருக்கிறார். இதற்காக நான் வழக்கம் போல் அவரை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் 43 ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. பழமையான கோயில்களை, பழமை மாறாமல் சீர்செய்து குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நவீன வசதிகள் கொண்ட அடிப்படைப் பணிகள் செய்து தரப்பட்டுள்ளன.
திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் எல்லாம் செய்யப்படுகின்றன. தற்போது வரை 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
* 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
* திருக்கோயில்களுக்குச் சொந்தமான திருக்குளங்களைச் சீரமைக்கும் வகையில் கருத்துருக்களை வழங்குவதற்கு சென்னை, கோவை, திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களைத் தலைமையிடமாக கொண்டு 4 ஆலோசகர்களும், திருக்கோயில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்குத் தனி ஆலோசகரும் நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள 1250 திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின் திருப்பணிகளையும் சேர்த்து, இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனை நான் சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பாக வெளியிட்டேன்.
கடந்த காலத்தில் 1000 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளிலுள்ள 1000 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள தலா 1 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
நமது அரசு பொறுப்பேற்ற பின், திருக்கோயில்களின் எண்ணிக்கையை 1250 ஆகவும் நிதியுதவியை ரூ.2 இலட்சமாகவும் உயர்த்தி அறிவிக்கப்பட்டது. இதற்காக 50 கோடி ரூபாய்க்கான காசோலைகள் வழங்கப்பட்டன.

ஏழை இணையர்க்கு 50,000 ரூபாய் மதிப்புள்ள சீர்வரிசைகளோடு திருமணம் நடத்தி வைத்தல், 2 ஆண்டுகளில் 836 கோயில்களுக்கு திருகுடமுழுக்கு, 764 கோயில்களில் அன்னதானம், 8 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம், 15 கோயில்களில் மருத்துவ மையம், 15,000 கோயில்களில் ஒருகால பூஜை திட்டம், திருத்தேர் மராமத்து மற்றும் புதிய திருத்தேர் உருவாக்குதல் என இன்னும் பல பணிகள் முழு வீச்சில் இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் நாம் மேற்கொண்டு வருகிறோம். இவை அனைத்தும் ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் நிதியோடு அதிக இடங்களில் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றன.
மறைந்த பெரியவர் - தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் 'கோயிலைச் சுற்றிலும் மக்கள். மக்களைச் சுற்றிலும் கோவில்கள்' என்று சொல்வார்கள். மக்களுக்கு நன்மைகள் செய்யவே கோவில்கள் இருக்கின்றன.''












Click it and Unblock the Notifications