புதுப்புது வரிகள் போடும் அதிகாரத்தை யார் கொடுத்தது? சென்னை மாநகராட்சிக்கு ஸ்டாலின் சரமாரி கேள்வி..!
சென்னை: மக்கள் பிரதிநிதிகளற்ற மாநகராட்சிக்கு "புதுப்புது வரிகள்" போடும் அதிகாரத்தை யார் கொடுத்தது? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் 'குப்பை கொட்டக் கட்டணம்' செலுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள காட்டமான அறிக்கையில் கூறியிருப்பதாவது;

குப்பைக் கட்டணம்
சென்னை மாநகராட்சியில் 2021 ஜனவரி முதல் குப்பை கொட்டக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டுள்ள அ.தி.மு.க அரசுக்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனாவில் மின்கட்டண வசூல், கொரோனாவில் சொத்து வரிக்கு அபராதம், இப்போது அதே கொரோனாவில் குப்பை கொட்டக் கட்டணம்- என அ.தி.மு.க. அரசின் நிர்வாக அலங்கோலங்கள் அடுத்தடுத்து வந்து படமெடுத்தாடி சந்தி சிரிக்க வைக்கிறது.

மெல்ல மெல்ல
வாழ்வாதாரத்தைத் தொலைத்த மக்களும்- பொருளாதார இழப்புகளைச் சந்தித்த சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களும் இன்னும் முறையாகவோ முழுமையாகவோ மூச்சு விடத் தொடங்கவில்லை. பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி வரும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள், உணவகங்கள் அனைத்தும் இப்போதுதான் "மெல்ல மெல்ல" உயிரோட்டப் பாதைக்கு நகர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

நிலை குலைந்து
தனி மனித வாழ்வாதாரத்தையும்- தொழில் நிறுவனங்களின் எதிர்காலத்தையும், மீண்டும் ஒரு "பேரிடருக்குள் குப்புறத் தள்ளுவது" போல, குப்பைக் கட்டணத்தை அறிவித்திருப்பது, அ.தி.மு.க. அரசினர் மனம் குப்பை மேடாக மாறி விட்டதையே காட்டுகிறது. புத்தாண்டிலிருந்து வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், சென்னை வாழ் குடும்பங்களிடமும், வணிகர்களிடமும், சிறு குறு மற்றும் நடுத்தரத் தொழில் புரிவோரிடமும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நிலைகுலைய வைக்கும்.

மாநகராட்சி தேர்தல்
சென்னை மாநகராட்சியில் தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லை. அந்த மாநகராட்சி எப்படி தான்தோன்றித் தனமாக மக்களின் உரிமையைப் பறிக்க முடியும்? மாநகராட்சித் தேர்தலையும் நடத்தி மேயரை- மாநகர மன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்ய முதலமைச்சர் திரு பழனிச்சாமிக்கும்- உள்ளாட்சித்துறை அமைச்சர் திரு எஸ்.பி வேலுமணிக்கும் நேரமுமில்லை, நினைப்புமில்லை.

புதுப்புது வரிகள்
மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத மாநகராட்சிக்கு, "புதுப்புது வரிகள்" போடும் அதிகாரத்தை யார் கொடுத்தது? ஒரு வரியை விதிக்கும் முன்பு மக்களிடம் கருத்துக் கேட்க வேண்டாமா? மாநகர மன்றத்தில் வைத்து விவாதிக்க வேண்டாமா? இது எதையும் செய்யாமல் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியை விட்டு மக்களைப் பெருமளவில் பாதிக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பதும் மிகக் கொடுமையானது, கொடுங்கோல் தன்மையிலானது.

சந்தேகம் எழுகிறது
இது சென்னை மாநகராட்சிக்கு மட்டுமான அறிவிப்பா? அடுத்தடுத்து மற்ற மாநகராட்சிகளுக்கும் வரப்போகின்ற அறிவிப்பிற்கு முன்னோட்டமா? என்ற சந்தேகம் எழுகிறது. ஒரு பக்கம் பொங்கல் பரிசு என்று 2500 ரூபாய் அறிவித்து விட்டு- அதை விட இரண்டு மடங்கு பணத்தை "குப்பை கொட்டும் கட்டணம்" என்று ஒவ்வொரு குடும்பத்திடமிருந்தும் பறித்து, பகல் கொள்ளைபோல் ஒரு மாநகராட்சி செயல்படுவது அராஜகமானதாகும்.

எச்சரிக்கை
எனவே, இந்த "குப்பை கொட்டக் கட்டணம்" என்ற அறிவிப்பை உடனடியாகத் திரும்பப் பெற முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். ஒரு வேளை திரும்பப்பெறாவிட்டால், மக்களின் பேராதரவுடன் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்தவுடன், இந்தக் குப்பை கொட்டக் கட்டணம் ரத்து செய்யப்படும்! சென்னை மாநகராட்சியின் நிதி முறைகேடு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, தவறு செய்தோர் யாராக இருந்தாலும் தக்கபடி தண்டிக்கப்படுவர் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.












Click it and Unblock the Notifications