ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் நெருங்கும் சூழலில், திமுக சார்பில் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது. முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் இந்த தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். இந்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்று இருக்கும் 7 முக்கியமான வாக்குறுதிகள் குறித்து நாம் பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கிறது. வாக்குப்பதிவுக்கு ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையே திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையில் உள்ள 7 முக்கியமான வாக்குறுதிகளை நாம் பார்க்கலாம்!

ரூ.8000 கூப்பன்
1. ஸ்டாலின் இது தொடர்பாக மேலும், "நமது இல்லங்களில் அரசிகளான மகளிரை மகிழ்விக்க முக்கியமான வாக்குறுதி.. இல்லத்தரசிகள் தங்கள் வீடுகளுக்குத் தேவையான வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன், மிக்சி போன்ற வீட்டு உபயோக பொருட்களைப் புதிதாக வாங்க, ஏற்கனவே உள்ள ஏற்கனவே பயன்படுத்தி வரும் பழைய பொருட்களை மாற்ற இல்லத்தரசி என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும்..
வருமான வரி செலுத்தாத குடும்பத்தினர் இல்லத்தரசிகள் அனைவருக்கும், அவர்கள் வசிக்கும் பகுதியில் அருகே இருக்கும் கடைகளில் இந்த பொருட்களை வாங்கி கொள்ள ரூ.8000 மதிப்பிலான கூப்பன்கள் வழங்கப்படும்" என்றார்.
உரிமை தொகை
2. இப்போது உரிமை தொகை என்ற பெயரில் மாநிலம் முழுக்க ஒரு கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கப்படுகிறது. இது அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இந்த உரிமை உரிமை தொகையானது 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
உதவி தொகை
3. கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் படி மாதம் தோறும் மாதம் தோறும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள்- மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. இந்த இனி ரூ.1500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாணவர்கள் பள்ளி இடைநிறுத்தம் இல்லா நிலை அடைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
காலை உணவு திட்டம்
4. முதல்வரின் முக்கியமான திட்டங்களில் ஒன்றாக திமுக காலை உணவுத் திட்டத்தைக் குறிப்பிட்டு வருகிறது. இந்த காலை உணவுத் திட்டத்தின் கீழ் இப்போது 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குப் பள்ளிகளிலேயே காலை உணவு எந்தவொரு கூடுதல் கட்டணமும் இல்லாமல் வழங்கப்படுகிறது. 15 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
5. மாணவர்களிடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்ற திட்டமான லேப்டாப் திட்டம் கடந்தாண்டு முதல் மீண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே ஐந்து ஆண்டுகளில் உயர்கல்வி பயிலும் 35 லட்சம் மாணவர்களுக்கும் லேப்டாப் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல ரூ.18 லட்சம் கோடி அந்நிய முதலீடு ஈர்க்கப்பட்டு, அதன்மூலம் 50 இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதி 2.5 லட்சம் கோடி ரூபாயிலிருந்து 5 இலட்சம் கோடி ரூபாயாக இரண்டு மடங்கு ஆக்கப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கோயில்கள்
6. தமிழகம் முழுக்க உள்ள 5,000 கோயில்களுக்குக் குடமுழுக்கு நடத்தப்படும்.. ஆயிரம் கிராம தெய்வத் திருக்கோவில்கள் மறுசீரமைப்பு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது
7. இலவச மின்சாரம் பெறும் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும்.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ.5 லட்சமாகவும், காப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமாகவும் உயர்த்தப்படும்.












Click it and Unblock the Notifications