புகழேந்தி ஐயா.. நாகரீகம் இருக்கலாம்.. ஆனால் இதெல்லாம் மோசம்.. ஸ்டாலினை விமர்சிக்கும் உடன்பிறப்புகள்
சென்னை: தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றம் அரங்கேறியுள்ளது. பல வாரங்களாக நீடித்து வந்த இழுபறிகளுக்கும், யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய் தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.
திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளின் ஆதரவுடன் இந்த ஆட்சி அமைய உள்ளது தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. குறிப்பாக, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் எடுத்த இந்த "விட்டுக்கொடுக்கும்" முடிவு, அவரது சொந்தக் கட்சியினரிடையேயே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தனிப்பெரும் கட்சியாக தவெக
கடந்த மே 4-ஆம் தேதி வெளியான சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள், தமிழகத்தில் ஒரு தொங்கு சட்டப்பேரவையையே உருவாக்கியது. எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் ஆட்சியமைக்கத் தேவையான 118 இடங்கள் (மேஜிக் நம்பர்) கிடைக்கவில்லை. இருப்பினும், 107 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

தேர்தல் முடிவுகள் வெளியான உடனேயே, காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்துடன் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கரை விஜய் சந்தித்தார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான பலம் இல்லாததால், ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. மூன்று முறை ஆளுநரைச் சந்தித்த போதும் இழுபறியே நீடித்தது.
விசிக மற்றும் இடதுசாரிகளின் ஆதரவு
இந்த இக்கட்டான சூழலில் தான், திமுக கூட்டணியில் இருந்த கட்சிகள் ஒவ்வொன்றாக விஜய்க்கு ஆதரவு தெரிவிக்கத் தொடங்கின. நேற்று சிபிஎம் (2 இடங்கள்) மற்றும் சிபிஐ (2 இடங்கள்) தங்களது ஆதரவை உறுதி செய்தன. இதனைத் தொடர்ந்து இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML - 2 இடங்கள்) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக - 2 இடங்கள்) முறைப்படி ஆதரவு கடிதங்களை வழங்கின.
குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவன் தவெகவிற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக நீண்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த நிலையில், இன்று ஒருவழியாக அவர் பச்சைக்கொடி காட்ட உள்ளார். இதன் மூலம் விஜய்யின் பலம் 120-ஆக உயர்ந்துள்ளது. இன்று மாலை ஆளுநரை மீண்டும் சந்தித்து ஆட்சி அமைக்க விஜய் உரிமை கோரினார். நாளை மாலை 3.15 மணிக்கு விஜய் பதவி ஏற்க வாய்ப்புகள் உள்ளன.
ஸ்டாலினின் முடிவு: தொண்டர்கள் அதிர்ச்சி
இந்த அரசியல் மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், காங்கிரஸ் தவிர்த்து விஜய்க்கு ஆதரவு அளித்துள்ள அனைத்துக் கட்சிகளும் திமுக கூட்டணியில் வெற்றி பெற்றவை. இவர்கள் அனைவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் முழு அனுமதியுடன், அவர் வழிகாட்டுதலின் பேரில் தான் விஜய்க்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்துள்ளனர்.
அதாவது, ஸ்டாலின் கிட்டத்தட்ட விஜய்க்கு வழிவிட்டு, அவரை முதல்வராக "வாழ வைத்துள்ளார்" என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். ஆனால், இந்த பெருந்தன்மை அல்லது அரசியல் வியூகத்தை திமுகவின் தீவிரத் தொண்டர்களால் ஜீரணிக்க முடியவில்லை. புகழேந்தி ஐயா.. நாகரீகம் இருக்கலாம்.. ஆனால் இதெல்லாம் மோசம் என்று உடன் பிறப்புகள் விமர்சனம் செய்கின்றனர்.
விமர்சனங்களும் கேள்விகளும்
திமுகவின் தீவிரத் தொண்டர்கள் சமூக வலைதளங்களிலும், நேரடி விவாதங்களிலும் ஸ்டாலினின் இந்த முடிவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
"திமுகவின் கூட்டணியில் நின்று, திமுக நிர்வாகிகளின் உழைப்பில், திமுக தொண்டர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற எம்.எல்.ஏ-க்கள், இன்று திமுகவை நித்தமும் விமர்சித்து வந்த ஒரு கட்சிக்கு ஆதரவு அளிப்பதும், அதன் தலைவர் முதல்வராவதும் எந்த விதமான அரசியல் புரிதல்? இது தொண்டர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம் இல்லையா?" என்று சமூக வலைதளங்களில் திமுகவினர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எதிர்க்கட்சியாக இருந்து விஜய்யை வளரவிடாமல் தடுத்திருக்க வேண்டிய திமுக, இன்று அவரை அரியணையில் அமர்த்துவது ஏன்? இது எதிர்கால அரசியலுக்கான ஸ்டாலினின் சாதுர்யமான நகர்வா அல்லது திமுகவின் வாக்கு வங்கியில் விஜய் ஏற்படுத்திய தாக்கத்திற்கு பயந்து எடுக்கப்பட்ட முடிவா என்ற விவாதங்கள் தகித்துக் கொண்டிருக்கின்றன. இப்போது மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைவராக விஜய் ஆகிவிட்டார். அவர்களை எதிர்க்கும் வலதுசாரி கூட்டணியாக அதிமுக - பாஜக இருக்கும். திமுகவின் ரோல் இங்கே என்ன? அது காணாமல் போய்விடும் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.
எது எப்படியோ, தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது. திரையுலகில் உச்சம் தொட்ட விஜய், இப்போது அரசியல் களத்திலும் முதன்மையான இடத்தை எட்டியுள்ளார். அவரது ஆட்சி நிர்வாகம் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications