2ஆம் 3ஆம் நிலை நகரங்களை டெவலப் செய்ய ஸ்டாலின் தனிக்கவனம்! சென்னையில் இனி குவியத்தேவையில்லை!
சென்னை, கோவை போன்ற பெருநகரங்களுக்கு இணையாக 2ஆம் 3ஆம் நிலை நகரங்களை டெவலப் செய்ய ஸ்டாலின் ஆர்வம்.
சென்னை: படித்த இளைஞர்கள் வேலைதேடி சென்னை போன்ற பெருநகரங்களில் குவிந்து வரும் சூழலில், தமிழ்நாட்டில் உள்ள 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களை வளர்ச்சி அடைய வைப்பதற்கான பணிகளில் முதல்வர் ஸ்டாலின் ஆர்வம் காட்டுகிறார்.
விழுப்புரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைக்க ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி பணிகள் ஜரூராக் நடந்து வரும் சூழலில் இன்று வேலூரில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டியுள்ளார்.
இதன் மூலம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதால் மண்ணின் மைந்தரான அமைச்சர் துரைமுருகன் அளவுகடந்த மகிழ்ச்சியில் உள்ளார். இது தொடர்பான விவரம் வருமாறு;

ஒரு டிரில்லியன்
பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. முதலீடுகளை பெருமளவில் ஈர்த்து, லட்சக்கணக்கான தமிழ்நாடு இளைஞர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கிடும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில பொருளாதாரத்தை வலுவடையச் செய்து வருகிறது. முதலமைச்சர் நிர்ணயித்துள்ள இலக்கான 2030-31-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாடு ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார வளர்ச்சியடைய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

மினி டைடல் பூங்கா
2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பிற்கிணங்க, முதற்கட்டமாக விழுப்புரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.6.2022 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இன்று அடிக்கல்
அதன் தொடர்ச்சியாக, வேலூர் மாவட்டம், மேல்மொனவூர்-அப்துல்லாபுரத்தில் அமைந்துள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 60,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கான கட்டடத்திற்கு முதலமைச்சர் இன்று அடிக்கல் நாட்டினார்.

படித்த இளைஞர்களுக்கு
இதன்மூலம் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படித்த இளைஞர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு அவர்களின் சொந்த மாவட்டத்திலேயே தங்கி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு ஏற்படுவதுடன், சமூக பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும்.












Click it and Unblock the Notifications