மே 2-ம் தேதி வீதிகள் வெறிச்சோடட்டும்; உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும் -ஸ்டாலின்
சென்னை: வெற்றிக் கொண்டாட்டங்களை விட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பது தான் தனது முக்கிய நோக்கம் எனக் கூறியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.
Recommended Video
தேர்தல் முடிவுகள் திமுகவுக்கு சாதகமான முடிவுகள் வர வர கட்சியினர் ஒன்றுகூடி தொற்றுக்கு ஆளாக வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள வேண்டுகோளில்;
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் விரைவில் வெளிவரப்போகும் தருணத்தை எதிர்பார்த்துக் கழகத்தைச் சார்ந்தவர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதை நான் அறிவேன்.
வாக்களிப்பதற்கு முன்பும் வாக்களித்த பின்பும் தமிழ்த் திருநாட்டின் வாக்காளர் பெருமக்களிடம் பல்வேறு ஊடகங்கள் நடத்திய கருத்துக் கணிப்புகளில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்கிற உற்சாகமான தகவல் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றது.
தமிழகமோ பெருந்தொற்றின் காரணமாகத் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. படுக்கைகள் கிடைக்காமலும், உயிர்வாயு கிடைக்காமலும் நோயாளிகள் அவதிப்படும் நிலையை ஊடகங்களில் பார்த்து நான் பதைபதைத்துப் போகிறேன்.
இந்தச் சூழலில் வாக்கு எண்ணும் இடங்களில் குவிந்தோ, சாதகமான முடிவுகள் வர வர ஒன்றுகூடியோ நம் மகிழ்ச்சியைத் தெரியப்படுத்தும் நோக்கத்தில் பெருந்தொற்றுக்கு ஆளாகிவிட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தச் சூழலில் இல்லங்களிலேயே இருந்து தேர்தல் முடிவுகளை ஊடகங்களின் மூலம் தெரிந்து கொள்வதும், வெற்றியடைந்த செய்தியைக் கேட்டு நம் இல்லத்திலேயே மகிழ்வதும்தான் பொருத்தமான போக்கு.
கழக வெற்றியைக் கொண்டாடுவதைவிட உடன்பிறப்பின் உயிரைப் பாதுகாப்பதுதான் என்னுடைய தலையாய நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டு நம் கட்சியைச் சார்ந்தவர்கள் மட்டுமல்ல, தமிழக மக்கள் யாருமே இத்தகைய அலட்சியப்போக்கால் அவதிப்படக் கூடாது என்று மாற்றுக் கட்சித் தோழர்களுக்கும் என்னுடைய வேண்டுகோளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
வீதிகள் வெறிச்சோடட்டும், உள்ளங்கள் மகிழ்ச்சியால் பொங்கட்டும்.


Click it and Unblock the Notifications
