லண்டனில் அமைச்சர் மருமகன் செய்த உதவி! நன்றி மறக்காமல் மணவிழாவில் உருகிய முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை: சில ஆண்டுகளுக்கு முன்னர் தயாளு அம்மாளுக்கு லண்டனில் சிகிச்சை வழங்கப்பட்ட போது அருகில் இருந்து எல்லா சிகிச்சைகளுக்கும் துணைநின்றவர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருமகன் அருண்குமார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேத்தி திருமணத்தை தலைமை தாங்கி நடத்தி வைத்த அவர் இதனைக் கூறினார்.
அந்த மணவிழாவில் இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு;

கே.கே.எஸ்.எஸ்.ஆர்.
''கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மருமகன் அருண்குமார் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் ஒரு நல்ல நண்பர் - இனிய தோழராக பழகக் கூடியவர். அவர் அடிக்கடி என்னிடத்தில் பேசுவதுண்டு - தொலைபேசியில் பேசுவதுண்டு - நேரடியாக என்னிடத்தில் வீட்டிற்கு வந்து பேசுவதுண்டு. ஏன் என்றால் என்னுடைய வீட்டிற்கு பக்கத்தில்தான் அவருடைய வீடும் இருக்கிறது. எனவே அடிக்கடி வந்து பேசுகிறபோது, நாட்டு நடப்புகளை எல்லாம் பேசுவார். எதார்த்தத்தை அப்படியே சொல்வார்.''

தெளிவாக சொல்வார்
''எங்கெங்கு சரியில்லை - எங்கு நன்றாக இருக்கிறது என்றெல்லாம் தெளிவாக சொல்வார். அவர் சொல்லக்கூடிய கணக்கு சரியாக இருக்கும்.
தேர்தல் நேரத்தில் கூட, இந்த இடம் சரியில்லை, இந்த இடம் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கிறது - கொஞ்சம் கவனியுங்கள் என்று சொல்லிவிட்டு செல்வார். எதையும் சரியாகச் சொல்வார். அதுமட்டுமல்ல, என்னென்ன சினிமா நன்றாக இருக்கிறது என்று அதையும் சொல்லிவிட்டுச் செல்வார். அவர் சொல்வது சரியாக இருக்கும். அவர் சொன்னால் அந்த சினிமாவை நான் தட்டாமல் பார்த்துவிடுவேன்.''

மணவிழா
''அந்த அளவிற்கு எதையும் எடைபோட்டுப் பேசக்கூடியவர் - எதையும் எடைபோட்டுச் செயலாற்றக்கூடியவர். நம்முடைய கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்களைப் பொறுத்தவரைக்கும் இன்னும் சொல்ல வேண்டுமென்றால், ஏதாவது பணி ஒன்றை அவரிடத்தில் சொன்னால், எதையும் முடியாது என்று சொல்லமாட்டார். "அதுதானே! பார்த்துக்கொள்ளலாம்" என்று சொல்வார். எனவே அவருடைய இல்லத்தில் அவருடைய பேத்திக்கு, உமா மகேஸ்வரி - அருண்குமாருடைய புதல்வியாக இருக்கும் தீப்தி அவர்களுக்கு இன்றைக்கு இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெறுகிறது.''

எனக்கும் பேத்தி
''அந்த தீப்தி கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர். அவர்களுக்கு மட்டும் பேத்தி அல்ல. எனக்கும் பேத்திதான். காரணம் சிறுவயதில் இருந்தே நான் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பவன். அதேபோல் என்னுடைய தாயார் தயாளு அம்மாளுக்கு உடல்நிலைக் குறைபாடு ஏற்பட்டபோது, இலண்டனுக்கு அழைத்துச் சென்றபோது, அப்போது அருகில் இருந்த எல்லா சிகிச்சைகளுக்கும் துணைநின்று பணியாற்றியவர் டாக்டர் அருண்குமார் அவர்கள். நான் அதை நிச்சயம் என்றைக்கும் மறக்க மாட்டேன். அதற்காக என்னுடைய குடும்பத்தின் சார்பில் நான் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.''
''அதனால்தான் நான் கொஞ்சம் உடல் நலிவுற்று ஓய்வில் இருந்தாலும், இந்தத் திருமணத்திற்கு எப்படியும் வரவேண்டும் என்ற அந்த நிலையில்தான் இன்றைக்கு இந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன்.''












Click it and Unblock the Notifications