சிலிர்க்குதே.. பாகிஸ்தான், குஜராத்திலும் தமிழ்! சிந்து சமவெளியில் திராவிடம் - வகுப்பெடுத்த ஸ்டாலின்
சென்னை: தமிழ் என்று தொடங்கும் பெயர்களை மட்டும் 3.75 லட்சம் பேர் வைத்துள்ளதாகவும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், குஜராத்திலும் தமிழ் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை மாநாட்டில் (FeTNA) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக கலந்து கொண்டார். அந்த விழாவில் பேசிய அவர், "தமிழ் என்பது நமக்கு மொழியாக மட்டுமல்ல. அமுதமாக. உயிராக நம்மை வாழ்விக்கும் மண்ணாக, இனிமை தரும் மணமாக, இளமைக்கு மருந்தாக. போராட்டக் களத்துக்கு வாளாக இருக்கிறது. அதனால்தான் தமிழ் என்றால் நாம் உணர்ச்சி வசப்படுகிறோம். இனமான உணர்ச்சி அடைகிறோம். மொழியின் பெயரை தனது பெயராக வைத்துக் கொள்வதில் முன்னோடி இனம் நாம்தான்.

தமிழ்ச்செல்வன், தமிழரசன், தமிழ்ச்செல்வி என்று பெயர் வைத்துக்கொண்டவர்கள் 18 வயதுக்குமேல், சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் இருக்கிறார்கள் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.ஆர். பாலகிருஷ்ணன் அவர்கள் கணக்கிட்டுச் சொல்லி இருக்கிறார்கள். குழந்தைகளின் பெயரையும் சேர்த்தால் இது இன்னும் அதிகமாகும். மொழிக்காக தம் தேக்கு மர தேகத்தை தீக்கிரையாகக் கொடுத்த இனத்தைச் சேர்ந்தவர்கள் நாம்.
கடல் கடந்து வந்த பிறகும் தாய்மொழிக்காக விழா எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், மொழி என்பது நம்மைப்பொறுத்தவரையில் எழுத்தாக இல்லை. ரத்தமாக இருக்கிறது. அந்த உணர்வோடுதான் நாம் கூடி இருக்கிறோம். 'தொன்மை தமிழரின் பெருமை' என்ற தலைப்பில் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். உலகம் தோன்றியதைக் கணிக்க முடியாதது மாதிரி தமிழின் தோற்றத்தையும், தமிழினத்தின் தோற்றத்தையும், கணிக்கமுடியாத அளவுக்கு தொன்மையான வரலாறு நமக்கு உண்டு.

"இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி தமிழ் நிலத்தில் இருந்துதான் எழுதப்பட வேண்டும்" என்ற முழக்கத்தை முன்னெடுத்துச் செயல்பட்டு வருகிறோம். கழக ஆட்சி அமைந்ததும், பல்வேறு ஆய்வுகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். தமிழ்நாட்டில் பொது ஊழிக்கு முன் 6-ஆம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பதும், படிப்பறிவும், எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக நாம் விளங்கினோம் என்பதையும் கீழடி அகழாய்வு நிலை நிறுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும் பாறையில் கிடைத்த பொருளானது பொது ஊழிக்கு முன் 1615-ஆம் ஆண்டுக்கும், பொதுஊழிக்குமுன் 2172-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்டது என காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் இரும்பின் பயன்பாடு 4200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளின்படி, காலத்தால் முந்தியது மயிலாடும்பாறைதான். இப்படி ஒவ்வொரு ஆய்வாக வர, வர தமிழரின் தொன்மையானது வெளிச்சம் பெற்றுக்கொண்டே இருக்கப் போகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஐ.ஏ.எஸ். அதிகாரி திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்களின் "ஒரு பண்பாட்டின் பயணம்" என்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொண்டேன். அது புத்தகம் அல்ல, தமிழர்களின் பண்பாட்டுக் கருவூலம்! "சிந்துப் பண்பாடு என்பது 5000 ஆண்டுகள் பழமையானது அங்கு வாழ்ந்த மக்கள் பயன்படுத்திய மொழி தமிழ்மொழி. வாழ்ந்த மக்கள் சங்ககாலத் தமிழரின் மூதாதையர்" - என்பதை அவர் நிறுவி இருக்கிறார்.
இன்றைக்கும் நமது பயன்பாட்டில் இருக்கும் கொற்கை, வஞ்சி, தொண்டி, ஊர், பட்டி, பள்ளி, காவேரி, பாண்டியன், குமரன், மதுரை, வன்னி, வேல் ஆகிய சொற்கள் எல்லாம் சிந்துப் பண்பாட்டு வெளியான குஜராத், மராட்டியம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய இடங்களில் இருக்கிறது என்பதை அவர் நிறுவி இருக்கிறார். தமிழர்களின் பண்பாட்டுப் பெருமை இது.
சிந்துவெளியில் 'காளைகள்'தான் இருந்தன. இது திராவிடச் சின்னம்! சிந்துவெளி முதல் இன்றைய அலங்காநல்லூர் வரை காளைகள் இருக்கின்றன. இவை அனைத்தும் தமிழரின் தொன்மையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளன. தமிழ்நாடு அரசு, தொல்லியல் ஆய்வுகளுக்கு ஊக்கமளிக்கும் அரசாக அமைந்துள்ளது. இந்த ஆய்வுகள் அனைத்தையும் உலக ஆய்வாளர்களின் அளவுகோலுடன் மெய்ப்பித்து அவர்களை ஏற்றுக் கொள்ள வைத்து வெளியிடும் அரசாக அமைந்துள்ளது.
இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்வதில் உள்ள இடைவெளிகளை நிரப்பும் ஆராய்ச்சிகளை தமிழ்நாடு அரசு முன்னெடுக்கும், இந்தியாவிலேயே. அதிகப்படியான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். அதிலும், வைகையைச் சுற்றித்தான். தமிழர்களின் பண்பாட்டின் முக்கியத்துவம் மற்றும் தொன்மையை நிரூபிக்கவும், அதை உலகளவில் கொண்டு செல்லவும் அரசு திட்டமிட்டுள்ளது." என்று பேசினார்.












Click it and Unblock the Notifications