பட்டாசு சிதறுது! டெல்லியில் இருந்து சேதி வந்ததுமே கறுப்பு சட்டையை மாற்றி வெள்ளை சட்டை போட்ட ஸ்டாலின்
சென்னை: தொகுதி மறுவரையறை மசோதா, நாடாளுமன்ற மக்களவையில் தோல்வி அடைந்ததை அடுத்து கறுப்புச் சட்டையில் இருந்து வெள்ளைச் சட்டைக்கு மாறினார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2 நாட்களாக முதல்வர் ஸ்டாலின் கறுப்புச் சட்டை அணிந்து பிரச்சாரங்களில் பங்கேற்றிருந்தார்.
நாடாளுமன்ற மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 543 ஆக உள்ளது. இந்த தொகுதிகள் 1971 மற்றும் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக்கு ஏற்ப நாடாளுமன்றத்தில் மக்களவை தொகுதிகளை மறுவரையறை செய்து அதன் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டது.

தொகுதி மறுவரையறை மசோதா
அதன்படி தற்போது உள்ள 543 மக்களவைத் தொகுதிகள் எண்ணிக்கை 850 ஆக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது.மாநிலங்களுக்கு 815 தொகுதிகளும், யூனியன் பிரதேசங்களுக்கு 35 தொகுதிகளும் என மொத்தம் 850 தொகுதிகளாக மறுவரையறை மூலம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
தொகுதிகளை மறுவரையறை செய்து மக்களவை தொகுதிகளை 850 ஆக உயர்த்திய பின் நாடாளுமன்ற மக்களவையில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும் மத்திய அரசு திட்டமிட்டது. இது தொடர்பாக தொகுதி மறுவரையறை மசோதா 2026, 131வது அரசியலமைப்பு திருத்த மசோதா, யூனியன் பிரதேசங்கள் சட்டத்திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்தது.
கறுப்புச் சட்டை போட்ட ஸ்டாலின்
மக்கள்தொகை அடிப்படையிலான இந்த தொகுதி மறுவரையறையால் தென்மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைந்து வடமாநிலங்களில் ஆதிக்கம் அதிகரிக்கும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்துப் பேசினர்.
தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் கருப்புக் கொடி ஏற்றி, தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரும் அவரது ஆதரவாளர்களும் கருப்பு உடை அணிந்திருந்தனர். மு.க. ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதா நகலை எரித்தார்.

3 மசோதாக்களும் தோல்வி
இதனிடையே, தொகுதி மறுவரையறை உள்பட 3 மசோதாக்கள் மீதும் மக்களவையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பில் 528 எம்.பி.க்கள் பங்கேற்ற நிலையில் மசோதாக்களுக்கு 298 பேர் ஆதரவும், 230 பேர் எதிராகவும் வாக்களித்தனர். மசோதா வெற்றிபெற 3ல் 2 பங்கு ஆதரவு அதாவது 352 எம்.பி.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 298 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரவு அளித்தனர். இதனால் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது.
இந்நிலையில், டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், "டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்!" தெரிவித்துள்ளார்.
வெற்றியை அறிவித்த ஸ்டாலின்
இன்று தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றிருந்தார் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின். மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை உடனடியாக பரப்புரை மேடையில் அறிவித்து மகிழ்ந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். "நல்ல செய்தி வந்திருக்கிறது. தமிழ்நாட்டுக்கு எதிரான கறுப்புச் சட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது சும்மா ட்ரெய்லர் தான். தமிழ்நாடா? டெல்லியா? தமிழ்நாடு என காட்டியிருக்கிறோம்" என்றார்.
மேலும், திண்டுக்கல்லில் ரோடு ஷோ சென்ற முதல்வர் ஸ்டாலின், தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை பட்டாசு வெடித்துக் கொண்டாடினார். மேலும், முதல்வர் ஸ்டாலின், தன்னைப் பார்க்கக் கூடியிருந்த மக்களுக்கு இனிப்பு வழங்கி இந்த மகிழ்ச்சியைக் கொண்டாடினார்.
கறுப்புச் சட்டையில் இருந்து வெள்ளை சட்டைக்கு
திண்டுக்கலில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கருப்புக் கொடி ஏற்றினால், கருப்புச் சட்டை போட்டால் முடியுமா?' என்று கேட்டார்கள். ஆனால் இன்றைக்கு ஒரே போடாகப் போட்டிருக்கிறது தமிழ்நாடு. இதெல்லாம் அவர்களுக்குப் பத்தாது. ஏப்ரல் 23 அன்று நீங்கள் வழங்கப்போகிற அடிதான் உண்மையான அடி. இது சாதாரண வெற்றி இல்ல. இன்னும் 100 ஆண்டுகள் கழித்தும் வரலாற்றுல நின்னு பேசக்கூடிய வெற்றி. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! எனச் சொன்னேன். இன்று தமிழ்நாடு வென்றுள்ளது" எனப் பேசினார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வெள்ளைச் சட்டை அணிந்து பங்கேற்றார் முதல்வர் ஸ்டாலின். முன்னதாக, ஆண்டிப்பட்டியில் நடந்த பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் கறுப்புச் சட்டை அணிந்திருந்த முதல்வர் ஸ்டாலின், பாஜக அரசின் மசோதா தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, வெள்ளைச் சட்டைக்கு மாறினார்.












Click it and Unblock the Notifications