குழந்தைகளை கடத்துவது போல பரவிய வீடியோ.. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை..சென்னை காவல்துறை வார்னிங்
சென்னை: சமூக வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக குழந்தைகளை கடத்துவது போன்ற வீடியோ இணையத்தில் பரவியது. இந்த நிலையில் இந்த வீடியோ போலியானது என்றும், இது போன்று போலியான வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் ஒரு சிலர் குழந்தைகளை கடத்துவது போன்ற வீடியோவானது பரவி வந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக எர்ணாவூர் பகுதியில் ஒரு 10 ஆம் வகுப்பு மாணவன் 10 நாட்களாக காணவில்லை என்ற புகார் இருந்த நிலையில், இந்த 10 ஆம் வகுப்பு மாணவனை வடமாநில இளைஞர்கள் சிலர் கடத்தியதாக ஆடியோ பரவியது.

பானி பூரி தருவதாக கூறி சிறுவர்களை அழைத்து சென்று வடமாநில இளைஞர்கள் கடத்தி செல்வதாக ஆடியோ பதிவு ஒன்று வெளியாகியது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை பார்த்த போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தினர். இதில், அந்த வீடியோவானது கடந்த 4 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய வீடியோ என்பது தெரியவந்தது. அதாவது கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக வட மாநிலத்தில் நடந்தது என்பதும் எர்ணாவூர் பகுதியில் காணாமல் போன சிறுவனுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரியவந்தது.
மேலும் இந்த வீடியோவை லைக் மட்டும் வியூவ்ஸ்காக இப்படி பரப்பியதாகவும், மக்களிடையே அச்சத்தையும், ஒரு வித பீதியை ஏற்படுத்தவும் சிலர் வேண்டுமென்றே வீடியோவை பரப்பி வருவதாக தெரிவித்த போலீசார் இது போன்று பொய்யான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- சமீப காலமாக சில நபர்கள். குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொலிகள் சமூக வலைதளங்களில் வேமாக பரவி வருவதை காண முடிகிறது. இதுபோன்ற காணொலிகள் மக்களிடையே அச்சத்தையும். பீதியையும் உருவாக்க வேண்டுமென்ற பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடனும் பரப்பப்பட்டு வருகின்றன என்பதினை சென்னை பெருநகர காவல் உறுதிபட தெரிவித்து கொள்கிறது.
இதுபோன்ற போலியான செய்திகளை கேட்டோ, காணொலிகளை பார்த்தோ பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ. பதற்றமடையவோ தேவையில்லை என்று சென்னை பெருநகர காவல் துறை பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது. பொதுமக்களுக்கு இதுசம்பந்தமாக ஏதாவது சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் சென்னை பெருநகர காவல் துறை உதவி எண் 100 அல்லது 112 கட்டணமில்லா தொலைபேசி எண் அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தை 24 மணி நேரமும் தொடர்பு கொண்டு தங்களுடைய சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
இதுபோன்ற பொய்யான செய்திகளை பரப்புவோர் உடனடியாக இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், மீறினால் அத்தகையோர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை பெருநகர காவல் துறை எச்சரிக்கிறது.இவ்வாறு சென்னை காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications