குலுங்குது சென்னை.. சொல்லியடித்த காங்கிரஸ்.. இறங்கி வந்த திமுக..10 சீட்டா? கடைசிவரை நம்பிய கமல்ஹாசன்
சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சிக்கு, திமுக கூட்டணியில் 10 சீட்கள் வரை ஒதுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்தவகையில் இன்று மாலையே திமுக - காங்கிரஸ் கட்சியின் தொகுதி உடன்படிக்கை கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியை பொறுத்தவரை, அதிக கட்சிகள் இடம்பெற்றுள்ளன.. வலுவான, பலமான கூட்டணியாகவும் விளங்குகிறது.. இதில் நேற்றைய தினம் வரை எந்தவிதமான இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படாமலேயே இருந்தது.
முடிவுகள்: 2 கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுவிட்டன.. 4 கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. விசிக, மதிமுக கட்சிகளிடம் இழுபறி நீடித்த நிலையில், நேற்றைய தினம் அக்கட்சிகளிடமும் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. எனவே, இன்றைய தினம் காங்கிரஸ் கட்சி குறித்த தொகுதி விவகார முடிவை திமுக மேலிடம் முன்னெடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

காங்கிரஸை பொறுத்தவரை, இந்த முறை 15 சீட்டுக்கு மிகாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் 28ம் தேதி முதல்கட்ட கூட்டணி பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. ஆனால், வெறும் 7 சீட் மட்டுமே தரப்படும் என்று ஆரம்பத்தில் திமுகவில் கூறப்பட்டது. பிறகு, 8 சீட் வரை மட்டுமே ஒதுக்கப்படும் என்று திமுக கறார் காட்டியதாம்.
பேச்சுவார்த்தை: கடந்த முறை ஒதுக்கிய சீட்டுக்களையாவது, இந்த முறை ஒதுக்குங்கள் என்று காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டே வந்தது.. எனவே, அது தொடர்பாக 10ம் தேதி அதாவது நாளைய தினம், திமுக உடன் காங்கிரஸ் இரு கட்சிகளின் 2ம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் செய்திகள் வெளியாகியிருந்தன.
ஆனால், திடீரென ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி, காங்கிரஸ் கேட்டுக்கொண்ட 9 சீட்டுகளையே ஒதுக்க திமுக முடிவு செய்துவிட்டதாம். இதற்கு காரணம், காங்கிரஸ் கட்சிக்கு குறைவான தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் பிற மாநில கூட்டணி உடன்படிக்கையில் சிக்கலை ஏற்படுத்துவதுடன், இந்தியா கூட்டணிக்கும் சறுக்கலை தந்துவிடும் என்பதை திமுக உணர்ந்திருக்கிறதாம்.
சிறுபான்மை ஓட்டுக்கள்: மேலும் சிறுபான்மை ஓட்டுக்களை பெருவாரியாக அள்ள வேண்டுமானால், காங்கிரஸை கூல் செய்தாக வேண்டும் என்பதையும் திமுக உணர்ந்திருக்கிறது. அதனால்தான், 10 சீட்டுக்களை காங்கிரசுக்கு வாரி தந்துள்ளது திமுக என்கிறார்கள்.
அந்தவகையில், 9+1 என்ற சீட்டை காங்கிரசுக்கு திமுக ஒதுக்க ஒப்புக் கொண்டுள்ளதாம். கடந்த முறை இப்படித்தான் 9 சீட் தமிழகத்திலும், 1 சீட் புதுச்சேரிக்கும் என திமுக ஒதுக்கியிருந்தது. எனவே, இந்த முறையும் கடந்த தேர்தலின் ஃபார்முலாவையே திமுக கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.
இன்றே முடிவு: இன்று மாலையே பேச்சுவார்த்தை நடத்தி தொகுதி பங்கீட்டை இறுதி செய்து ஒப்பந்தத்திலும் கையெழுத்திட முடிவாகி உள்ளதாம்.. காரணம், நாளை திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெறுவதால், அனைத்து கூட்டணி சீட் விவகாரத்தையும் உடனடியாக முடிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பணிக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன்படியே காங்கிரஸ் கட்சியின் தொகுதி பங்கீடும் இன்று மாலை கையெழுத்தாக உள்ளதாம். இதற்காக, டெல்லியிலிருந்து மேல்மட்ட தலைவர்கள், சென்னைக்கு வர உள்ளார்களாம்.
இந்த முறை 10 சீட்டுக்களை திமுகவிடமிருந்து பெறும் பட்சத்தில், தமிழக காங்கிரஸ் கட்சி சாதித்துவிட்டது என்றே சொல்லலாம்.. கடந்த முறை தேர்தலின்போது, 9-ல் 8 இடங்களில் காங்கிரஸ் வென்றிருந்த நிலையில், வரப்போகும் தேர்தலில் காங்கிரஸின் வெற்றி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்...!!












Click it and Unblock the Notifications