"சென்னையின் இதய பகுதி.." திடீரென குவிந்த பொதுமக்கள்.. கடும் வாக்குவாதம் வேற.. "பதற்றம்!" என்னாச்சு
சென்னை: தலைநகர் சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகே பொதுமக்கள் திடீரென குவிந்து வாக்குவாதம் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கே என்ன நடந்தது.. இதற்கு என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாக மலைப் பிரதேசங்களில் தான் மலர் கண்காட்சியை நடத்துவார்கள். ஒவ்வொரு ஆண்டும் கோடைக் காலத்தில் ஊட்டியில் நடக்கும் மலர் கண்காட்சி ரொம்பவே புகழ்பெற்றது. இதற்காகவே கூட பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் ஊட்டி செல்வார்கள்.

இதேபோல ஒரு மலர் கண்காட்சி சென்னையில் நடந்தால் நன்றாக இருக்குமோ என்பது சென்னைவாசிகளின் நீண்ட நாள் ஏக்கமாக இருந்தது. அதை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் நிறைவேற்றினர்.
மலர் கண்காட்சி: கடந்த 10ஆம் தேதி செம்மொழி பூங்காவில் இந்த மலர் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார். இதற்கு முன்பும் சென்னையில் இரு முறை மலர் கண்காட்சி நடந்துள்ளது என்ற போதிலும், அப்போது கலைவாணர் அரங்க வளாகத்திலேயே மலர் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த முறை தான் இயற்கை சூழலில் செம்மொழி பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.
சுமார் 12 லட்சம் மலர்களைக் கொண்டு பல்வேறு வடிவங்கள் செய்யப்பட்டு பூங்கா முழுக்க காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதைக் காணத் தினசரி பல ஆயிரம் பேர் செம்மொழி பூங்காவுக்கு வந்தனர்.
குவிந்தனர்: இதற்கிடையே வார இறுதி நாளான இன்று மாலை இந்த மலர் கண்காட்சியைப் பார்க்கப் பொதுமக்கள் பலரும் செம்மொழிப் பூங்காவுக்குக் குவிந்தனர். சென்னையில் இதுபோல பூங்காவில் மலர் கண்காட்சி நடப்பது இதுவே முதல்முறை என்பதால் அதைக் காண விரும்பிய பலரும் பூங்காவுக்கு வந்தனர். இருப்பினும், பூங்காவின் நேரம் முடிந்துவிட்டதால் அவர்களை அனுமதிக்கப் பூங்கா ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.
மாலை நேரத்தில் நகரில் கடும் டிராபிக் நெரிசல் இருந்ததாகக் கூறும் மக்கள், இதன் காரணமாகவே தாமதமானதாகவும் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் கேட்டனர். இருப்பினும், அவர்களை உள்ளே விட மறுத்த பூங்கா ஊழியர்கள், பூங்கா செயல்படும் நேரம் முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இருப்பினும், பொதுமக்கள் பலரும் அங்கேயே இருந்ததால் அங்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழல் உருவானது.
வாக்குவாதம்: 7 மணி வரை அனுமதி எனக் கூறிவிட்டு, முன்கூட்டியே கேட்டை மூடினால் என்ன அர்த்தம் என்று சிலர் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படுகிறது. செம்மொழி பூங்கா சென்னையின் இதய பகுதியான அண்ணா மேம்பாலம் (ஜெமினி பாலம்) அருகே அமைந்துள்ளது. இதற்கு எதிரில் தான் அமெரிக்கத் தூதரகம் இருக்கிறது. இந்தச் சூழலில் திடீரென அப்பகுதியில் அதிகப்படியான மக்கள் திரண்டதால் சற்று பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
செம! சென்னையில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள்.. ரயில்கள் ரத்து செய்யப்பட்டதால் உடனே வந்த எம்.டி.சி!
சென்னையைப் பொறுத்தவரைக் காலை 10 மணிக்குத் தொடங்கும் மலர் கண்காட்சி இரவு 7 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த கண்காட்சி தொடங்கிய நிலையில், வார இறுதி நாளான இன்று அதிகப்படியான மக்கள் குவிந்தனர்..
இன்று மட்டும் சுமார் 20,000 பேர் மலர் கண்காட்சியைக் காண வந்ததாகத் தெரிவித்த தோட்டக்கலைத் துறை அதிகாரிகள், உள்ளே கூட்ட நெரிசல் அதிகமாக இருந்ததாலேயே மாலை 6.30 மணிக்கு நுழைவாயிலை மூடிவிட்டதாகத் தெரிவித்தனர். இன்று மலர் கண்காட்சியைப் பார்க்க முடியாத பொதுமக்கள் நாளை காலை வந்து வரலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.












Click it and Unblock the Notifications