செல்வமகள் சேமிப்புத் திட்டம்.. பெற்றோர் செய்யும் ஒரு சிறிய தவறு.. ₹45,000 இழப்பு ஏற்படும்.. கவனம்!
சென்னை: பெண் குழந்தைகளின் எதிர்காலக் கல்வி, திருமணம் மற்றும் பிற செலவுகளுக்கு பெற்றோர்கள் அதிகம் நம்பும் அரசு திட்டம்தான் செல்வமகள் சேமிப்புத் திட்டம் (Sukanya Samriddhi Yojana - SSY). 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்ட இத்திட்டம், வரி சலுகை, உயர் வட்டி விகிதம் ஆகியவற்றால் பெற்றோர்களிடையே மிகவும் பிரபலமானது. தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி வழங்கப்படுகிறது.
ஒரு நிதியாண்டில் ₹250 முதல் ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்த பின், 21 ஆண்டுகளில் முதிர்வு அடையும்.

ஆனால், பல பெற்றோர்களுக்கு தெரியாத ஒரு முக்கிய "ரகசிய விதி" இத்திட்டத்தில் உள்ளது. மாதத்தின் 5ஆம் தேதிக்குப் பின் பணம் செலுத்தினால், அந்த மாதத்திற்கான வட்டி முழுவதும் இழக்க நேரிடும். இந்த சிறிய தாமதம், நீண்ட காலத்தில் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும் என நிதி ஆலோசகர்கள் எச்சரிக்கின்றனர்.
வட்டி கணக்கிடப்படும் விதி என்ன?
இது தொடர்பாக வல்லுநர்கள் விளக்குகையில், "செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் வட்டி மாதந்தோறும் கணக்கிடப்படுகிறது. ஆனால், ஒவ்வொரு மாதமும் 5ஆம் தேதிக்குப் பிறகு மாத இறுதி வரை இருக்கும் குறைந்தபட்ச இருப்புத் தொகை (Lowest Balance) அடிப்படையில்தான் வட்டி வழங்கப்படும்" என்றுள்ளனர்.
எளிய உதாரணம்: மாதம் ₹12,500 (ஆண்டுக்கு ₹1.5 லட்சம்) செலுத்தும் பெற்றோர், 5ஆம் தேதிக்கு முன்பே பணம் போட்டால், முழு தொகைக்கும் அந்த மாத வட்டி கிடைக்கும். ஆனால், 6ஆம் அல்லது 10ஆம் தேதி போட்டால், 5ஆம் தேதி இருந்த குறைந்த தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும். புதிய தொகை அடுத்த மாதத்திலிருந்துதான் வட்டி ஈட்டும்.
சிறிய தாமதம்... பெரிய நஷ்டம்!
ஒரு மாதத்திற்கு இழக்கும் வட்டி வெறும் ₹85தான் என்றாலும், கூட்டு வட்டி (Compounding Interest) மேஜிக் இங்கு வேலை செய்கிறது. 15 ஆண்டுகள் முதலீடு, 21 ஆண்டுகள் முதிர்வு காலத்தில், ஒவ்வொரு மாதமும் இழக்கும் ₹85க்கு வட்டிக்கு வட்டி சேராமல் போகும்.
நிதி வல்லுநர்களின் கணக்குப்படி, 15 ஆண்டுகளும் சரியான நேரத்தில் செலுத்தினால் முதிர்வு தொகை சுமார் ₹69,32,648 ஆக இருக்கும். ஆனால், தொடர்ந்து 5ஆம் தேதிக்குப் பின் தாமதமாக செலுத்தினால், ₹68,87,289 மட்டுமே கிடைக்கும். வித்தியாசம் தோராயமாக ₹45,358! இது பெண் குழந்தையின் கல்வி அல்லது திருமணத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?
தொடர்ந்து முதலீடு செய்வது மட்டும் போதாது; சரியான நேரத்தில் செய்வது முக்கியம். ஒவ்வொரு மாதமும் 1ஆம் முதல் 5ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்யும் வழக்கத்தை உருவாக்குங்கள். ஆன்லைன் பேங்கிங் பயன்படுத்துபவர்கள், 1ஆம் அல்லது 2ஆம் தேதியன்று தானாக பணம் கழிக்கும் Auto-Debit வசதியை அமைத்துக் கொள்ளலாம். அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கி மூலம் எளிதாக நிர்வகிக்கலாம்.
இத்திட்டம் வருமான வரி பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு, முழு வட்டிக்கும் வரி இல்லாத பலன்களைத் தருகிறது. பெண் குழந்தை 18 வயதில் 50% வரை திரும்பப் பெறலாம். தவறான நேர முதலீடு இந்தப் பலன்களை குறைத்துவிடும்.
பெற்றோர்களே, உங்கள் மகளின் பிரகாசமான எதிர்காலத்திற்காக இந்த சிறிய விதியை கடைபிடியுங்கள். 2 நாட்கள் தாமதம் இன்று அசால்ட்டாகத் தோன்றினாலும், 21 ஆண்டுகளில் பெரும் தொகையை இழக்கச் செய்யும். இப்போதே உங்கள் SSY கணக்கை சரிபார்த்து, அடுத்த மாத டெபாசிட்டை திட்டமிடுங்கள்!












Click it and Unblock the Notifications