பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு பொக்கிஷம்! மாதம் 2000 மட்டும் கட்டினால் போதும்..மொத்தமாய் 11 லட்சம்!
சென்னை: பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான முதலீட்டு திட்டம் தேடிக்கொண்டு இருக்கும் பெற்றோருக்கு சுகன்யா சம்ரிதி யோஜனா (SSY) தற்போது மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. மாதம் ரூ.2,000 சேமித்தால் 21 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.11 லட்சம் கிடைக்கும் என்பதால், பெண்கள் குழந்தைகளுக்காக சேமிக்க நினைக்கும் பெற்றோருக்கான சிறந்த தபால் நிலைய சேமிப்பு திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அரசால் நேரடியாக உத்தரவாதம் வழங்கப்படும் இந்தத் திட்டம், 'பேட்டி பச்சாவ், பேட்டி படாவோ' மிஷனின் ஒரு முக்கிய பகுதியாக 10 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. அடுத்த 15 - 21 ஆண்டுகளுக்கு குழந்தையின் கல்வி, திருமணம் போன்ற முக்கிய தேவைகளுக்கான சேமிப்புக்கான சிறந்த திட்டம் என்கின்றனர் சேமிப்பு வல்லுநர்கள்.
பெண் குழந்தையின் தாய், தந்தை அல்லது சட்டரீதியான பாதுகாவலர் யாரும் மிக எளிதாக இந்த கணக்கை தபால் நிலையத்தில் அல்லது வங்கியில் அக்கவுண்டை ஓபன் செய்யலம். இதில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு மத்திய அரசு ஒவ்வொரு காலாண்டும் நிர்ணயிக்கும் வட்டி விகிதம் கிடைக்கும்.

தபால் நிலைய சேமிப்பு
தற்போது இந்தத் திட்டம் 8% வட்டியுடன் செயல்பட்டு வருகிறது. வட்டி விகிதம் உயர்வாக இருக்கும் போது நீண்ட காலத்துக்கு சேமிப்பின் மதிப்பு பெரிதும் அதிகரிக்கும் என்பது இதன் சிறப்பாகும். உதாரணத்திற்கு, உங்கள் மகளுக்கு இப்போது ஒரு வயதாக இருப்பதாகக் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் மாதம் ரூ.2,000 வீதம் சேமிப்பதாக வைத்தால், ஆண்டுக்கு ரூ.24,000 முதலீடு செய்ததாகும். இந்த முதலீட்டைக் தொடர்ந்து 15 ஆண்டுகள் செலுத்த வேண்டும். 15 ஆண்டுகளில் நீங்கள் முதலீடு செய்யும் மொத்த தொகை ரூ.3,60,000 ஆகும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
இதன்பிறகு, இந்த கணக்கு மேலும் ஆறு ஆண்டுகள் வட்டி சேர்ந்து வளர்ச்சி அடையும். இதை சேர்த்து மொத்தமாக 21 ஆண்டு முடிவில் இந்தத் திட்டம் முதிர்ச்சியடையும். இவ்வாறு 2025ஆம் ஆண்டில் திட்டத்தில் சேர்ந்து இருந்தால், 2046 ஆம் ஆண்டில் முதிர்வு பெறும் போது, சுமார் ரூ.7,48,412 வட்டி வருவாய் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது, முதலீட்டு தொகை ரூ.3,60,000-க்கு மேலாக, மொத்தமாக ரூ.11,08,412 வரை பெற முடியும். சாதாரண குடும்பங்களுக்குப் பெண் குழந்தையின் உயர்கல்வி அல்லது திருமணத்திற்கு தேவையான அடிப்படை நிதியை உருவாக்க இது மிகப்பெரிய ஆதாரமாக இருக்கும்.
நீண்டகால முதலீடு
இந்தத் திட்டத்தில் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். மேலும், வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யும் தொகைக்கு முழுமையான வரிச்சலுகையும் கிடைக்கும். எனவே, முதலீட்டின் பாதுகாப்பு, அதிக வட்டி வருமானம், வரிச்சலுகை ஆகிய மூன்று பலன்களும் ஒன்றாக கிடைப்பது இந்தத் திட்டத்தை இன்னும் சிறப்பாக்குகிறது.
மாத சேமிப்பு
பெண் குழந்தைக்கான நீண்டகால நிதி பாதுகாப்பை அமைத்துக் கொள்ள விரும்பும் பெற்றோருக்கு இது மிகச் சிறந்த மற்றும் நிச்சயமான அரசு சேமிப்பு திட்டமாக நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். தபால் நிலையங்களிலும், அரசு அங்கீகாரம் பெற்ற வங்கிகளிலும் இந்த கணக்கை திறக்கலாம். தகுதி குறைவாக, சுலபமான நடைமுறையுடன், உறுதியான வருமானத்தைக் கொடுப்பதால், இத்திட்டம் இன்றும் பெற்றோரின் முதலீட்டு பட்டியலில் முதலிடத்தில் திகழ்கிறது.












Click it and Unblock the Notifications