Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெகன்மோகனை கிறிஸ்தவர் என சொல்வதா? லட்டு விஷயத்தில் சந்திரபாபு நாயுடுவை எச்சரித்த சுகி சிவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு சரியாக செயல்படவில்லை. 4ம்தர அரசியல்வாதி போல் அவர் செயல்பட்டு விட்டார். ஒரு கலவரத்தை தூண்டுவது ஈஸி. ஆனால் கலவரத்தை கட்டுப்படுத்துவது கஷ்டம். மத அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும்'' என்று விமர்சனம் செய்ததோடு ஜெகன் மோகன் ரெட்டியை மாற்று மதத்தவர் என கூறுவது பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார்.

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு இருப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார். முந்தைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பை கலந்து இந்துக்களின் நம்பிக்கையை புண்படுத்தி விட்டார் என்றும் விமர்சனம் செய்தார்.

tirupati laddu suki sivam chandrababu naidu

இதைடுத்து திருப்பதி லட்டு விவகாரம் சர்ச்சையானது. சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஜெகன்மோகன் ரெட்டி முற்றிலுமாக மறுத்தார். ஆனால் அதற்குள் சந்திரபாபு நாயுடுவின் கட்சி திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வக அறிக்கையை வெளியிட்டது. அதில் மாட்டு கொழுப்பு, பன்றி கொழுப்பு, சோயபீன் உள்ளிட்டவற்றில் ஏதேனும் ஒன்று கலக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் பூதாகரமாகி தற்போது பெரும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பாஜக சுப்பிரமணியன் சுவாமி, திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவரான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி சுப்பா ரெட்டி உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ‛‛கலப்பட நெய்யில்தான் லட்டுகள் தயாரிக்கப்பட்டன என்பதற்கான உறுதியான ஆதாரங்களும் இல்லை. இது பல கோடி பக்தர்களின் உணர்வுப்பூர்வமான விவகாரம். இதில் எல்லாம் அரசியல் செய்யக் கூடாது'' என சந்திரபாபு நாயுடுவை உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டது.

அதோடு இதுபற்றி ஆந்திர அரசு சிறப்பு விசாரணை குழு அமைத்துள்ளது. இந்த குழு போதுமா? வேறு ஒரு விசாரணை தேவையா? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனக்கூறி இந்த வழக்கை அக்டோபர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.
இந்நிலையில் தான் திருப்பதி லட்டு விவகாரம் குறித்து ஆன்மிக பேச்சாளர் சுகி சிவம் பரபரப்பான கருத்தை தெரிவித்துள்ளார். இந்த விஷயத்தில் சந்திரபாபு நாயுடு தவறு செய்துவிட்டதாக அவர் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி சுகி சிவம் கூறியுள்ளதாவது:

நெய்யில் மாட்டு கொழுப்பு கலந்து இருந்ததாகவும், இதனால் திருப்பதி லட்டுவில் மாட்டு கொழுப்பு கலந்து இருந்ததாக கூறப்படும் விவகாரத்தில் அது சரியா? தவறா? என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அதைவிட ஒன்று மிகவும் முக்கியம். கடவுளை கொண்டு போய் அரசியலுடன் கலக்கலாமா? என்ற தெளிவு இந்த நாட்டு மக்களுக்கு வர வேண்டும். மூத்த அரசியல்வாதி சந்திரபாபு ஒரு விஷயத்தை சொல்வதற்கு முன்பு யோசிக்க வேண்டும்.

மெல்லிய நம்பிக்கையின் மீது தான் மக்கள் உயிர் வாழ்கின்றனர். அவர்களின் நம்பிக்கையை நாம் காயப்படுத்த வேண்டாம். மெல்லிய சின்ன சின்ன நம்பிக்கையை வைத்து தான் மக்கள் இன்று உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதனால் கடவுள், மதம் என்ற விஷயத்தில் மக்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அதில் ஓங்கி அடிக்கிறது முன்பு அது மக்களுக்கு எவ்வளவு வலிக்கும் என்பதை மூத்த அரசியல்வாதி சந்திரபாபு சிந்தித்து இருக்க வேண்டும்.

அவர் வெறும் எதிரியை மட்டும் நினைத்தார். அவருக்கு ஜெகன்மோகன் ரெட்டி என்பவர் எதிரி. அவர் மீண்டும் எழுந்து வரக்கூடாது என்பதற்காக இந்த லட்டை கையில் எடுத்தார். கடவுள், கோவில், வழிபாடு என்பதெல்லாம் சென்சிட்டிவ்வான மேட்டர். அதை ஒரு காயாக வைத்து எதிர்க்கட்சிகளை வீழ்த்துவதற்கு முயற்சிக்கலாமா? எல்லா நீதிமான்களின் மனதிலும் எழுகிற கேள்வி. இந்த நீதி தான் உச்சநீதிமன்றத்திலும் கேட்கப்பட்டுள்ளது. ஏதாவது முடிந்த முடிவான அறிக்கை வந்ததா? என்றால் வரவில்லை. அப்படி இருக்கும்போது விசாரணை முடிந்த பிறகு தான் ஏதாவது சொல்ல வேண்டும். ஆனால் அதற்குள் அவருக்கு என்ன அவசரம்.

எதிரியை வீழ்த்தனும், எதிர்க்கட்சிகளை வீழ்த்தனும் என்பதை தாண்டி அதற்கு மதச்சாயம் ஒன்றை பூச ஆரம்பிக்கிறார்கள். அவர் (ஜெகன்மோகன் ரெட்டி) வேறு மதத்தை சார்ந்தவர் என்று சொல்கிறார்கள். இது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்று யோசிக்காமல் உள்ளனர். ஒரு கலவரத்தை உருவாக்குவது என்பது ரொம்ப ஈஸி. ஆனால் அதனை அணைப்பது என்பது ரொம்ப கஷ்டம்.

நாட்டில் பொறுப்புள்ள அரசியல்வாதியாக இவர்கள் நடந்து கொள்ள வேண்டும். ஆனால் அப்படி அவர் நடந்து கொள்வது இல்லை. சந்திரபாபு நாயுடு சரியான படி இந்த விஷயத்தை கையாளவில்லை. பொதுவாக ஒரு செய்தியை கொடுக்கும்போது மக்கள் மனம் பாதிக்காத வகையில் செய்ய வேண்டும். ஏதோ சிறு தவறு நடந்தால் கூட அதை கண்டும் காணாமல் சரிசெய்துவிட்டு மக்களின் நம்பிக்கை நீடிக்கும் வகையில் பொறுப்புள்ள முதலமைச்சராக செய்திருக்க வேண்டும். ஆனால் அவர் அப்படி நடந்து கொள்ளவில்லை.

4ம் தர அரசியல்வாதி போல் அவர் இந்த பிரச்சனையை கையாண்டு விட்டார். சந்திரபாபுவை பற்றி ஆழமாக ஆய்வு செய்தால் என்டி ராமராவுக்கே கடுக்காய் கொடுத்தவர். அந்த கட்சியை (தெலுங்கு தேசம்) உருவாக்கி ஆந்திராவில் கடவுளாகவே வணங்கப்பட்ட செல்வாக்கு உடைய என்டி ராமராவையே தெருவில் நின்று கூப்பிட வைத்து அவரை என்ன பாடுபடுத்தினார் என்பது ஊரறிந்த விஷயம். இப்படியான செயல்களை செய்வதில் சந்திரபாபுவை அடிச்சுக்க முடியாது.

இந்த நாடு விடுதலை பெற்றபிறகு எவ்வளவு ரத்த களரியை பார்த்தது. இந்த நாடு விடுதலை பெற்ற பிறகு வளர வேண்டிய வளர்ச்சியை இன்னும் ஏன் எட்டவில்லை என்று தெரிகிறதா? இந்த நாடு அத்தகைய வளர்ச்சியை எட்டாமல் இருப்பதற்கு காரணமே மதப்பிரச்சனை தான். அதனை தீர்க்க வேண்டும் என்று நாம் யோசிக்க வேண்டும். மதம் எனும் சிக்கலில் இருந்து இந்தியாவை வெளிக்கொண்டு வருவது பற்றி யோசிக்க வேண்டும்'' என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+